Wednesday, July 27, 2011

ஒரு பெரியவரின் வாழ்வில் நடந்த சம்பவம்

அந்தி நேரம். களம்...அது ஒரு பரந்த இடம். கடுக்கரை ஊர்.....

ஒரு பெரியவர் வானத்தை உற்று நோக்கியபடி தன் கைகளை தன் நெஞ்சில் கும்பிடுவது போல் வைத்துக்கொண்டு நிற்கிறார். நெற்றி முழுவதும் உள்ள வெள்ளைத்திருனீறு நிறம் பார்ப்பவர்களை வசீகரிக்கும்.

அவர் வானில் தேடுவது வட்டமிடும் கிருஷ்ணப்பருந்துவை .ஒரு குறிப்பிட்ட சமயம் அந்தப் பெரியவரின் தலைக்கு நேர் மேலாக பறப்பதை பார்த்தபின் தான் அவர் அந்த இடத்தை விட்டு நகர்வார். அவருக்கு தினமும் அது கடவுளையே பார்ப்பது போல.

அன்று ஒருவன் அவர் முன்னே மிகவும் பணிவாய் நிற்பதை கருடபகவானைக் கண்டபின்தான் கவனித்தார்.

“ம்ம்ம்.. என்ன அப்பதே நிக்கியா ?”

“ஆமய்யா...”

“என்னா.. சொல்லு...”

“அந்த மேலப் பொத்தையில் எனக்கு நீங்க தந்தீங்கள்ளா ...அதுக்கு பக்கத்தில ஒரு 5 சென்று இடம் வேணும் தோட்டம் போடணும்”

“ அத அந்த சொள்ளயாண்டிக்கு கொடுத்திட்டேனே. ஓன் இடத்திலே சாமியெல்லாம் வச்சு பதிதான சொல்லிகிட்டிருக்க, அது போதும்”

“ அய்யா அவனுக்கு கொடுக்காதீங்கோ....” சொல்லி முடிக்கவில்லை.

“ வாக்கு கொடுத்தாச்சு. இனி அதெல்லாம் நடக்காது. நீ போயிரு இங்கிருந்து”

“ நீங்க அவனுக்கு கொடுத்தால் நான் விடமாட்டேன் அந்த இடத்தை...” மிக்க ஆக்ரோசத்துடன் கத்தினான்

பெரியவர் சற்றே கோபத்துடன் , “ மரியாதையா போயிரு....இல்லண்ணா என்னமாது வாங்கிட்டுதான் போக வேண்டியதிருக்கும். போ..போ..சொன்னாக்கேளு”

“ இப்பம் போறென்... நான் மந்திரவாதிண்ணு தெரியுமில்ல...இன்னும் இரண்டு நாள்ல உங்க கால முடக்கிப் போடுதேன் பாரும்..” சொல்லிவிட்டு போனான்

அன்று இரவு முழுவதும் பெரியவருக்கு ஒரே மனக் குழ்ப்பம். கடவுளை தினமும் கும்பிட்டாலும் மந்திரவாதியை கண்டு எல்லோரும் பயப்படுவார்கள். பெரியவரும் பயந்து கோண்டே தூங்கினார்.

இரண்டு நாட்கள் கழிந்தன. அன்று மாலை எப்போதும்போல் வானில் வடடமிடும் கருடபகவான் தன் கண்ணுக்கு எப்போது காட்சி தருவார் என்று மேலே பார்த்துக்கொண்டே நின்றார்.

“அய்யா?.. என்ன மன்னிச்சிருங்கய்யா ” என்று கூறியவாறே பெரியவரின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடந்தான் மந்திரவாதி

“சரி..சரி.. எந்தி..”

அவன் எழுந்தான். அவனது முகத்தைப் பார்த்து , “ ஏண்டா... என்ன ஓன் முகத்துல”

“ நான் தப்பு பண்ணிற்றேன். நீங்க எனக்கு என்னமாம் சாபம் போட்டீங்களா கோபத்தில....மொகம் மாத்திரமில்ல...என் மேல் பூரா கொப்புளமா உருண்ட உருண்டையா இருக்கு....உங்களுக்கு நான் வச்சது ஒண்ணுமே பலிக்கல..அய்யா என்ன காப்பாத்துங்க...”

ஒன்றுமே புரியாமல் பரிதாபமாய் நின்ற பெரியவர் வருத்ததுடன், “ போ...போய் ஏதாவது டாக்டரைப் பார்.” கூறினார். அவன் போனதும் ,

வானத்தை அண்ணாந்து பார்த்தார் பெரியவர். கருடன் வட்டமடித்து விட்டு போனது.

மந்திரவாதி ஒரு வாரத்தில் சிகிச்சை பயனின்றி மறைந்தான்

கெடுவான் கேடு நினைப்பான்

No comments:

Post a Comment