Friday, July 29, 2011

என் தந்தையார் பற்றி குமரி மாவட்ட சிறப்பு ஏடு

கடுக்கரை கே.எம்.ஆறுமுகப்பெருமாள் பிள்ளை

இவர் நாஞ்சில் நாட்டில் கடுக்கரை என்னும் ஊரில் ஒரு வசதிபடைத்த புராதீன குடும்பமான திரு. மெய்க்கும்பெருமாள் பிள்ளை திருமதி. ஈஸ்வரவடிவு தம்பதியருக்கு மூத்த புதல்வராக 8-1-1905ல் பிறந்தார். இவர் திருமதி.பகவதியம்மாள் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று புதல்வர்களும் இரண்டு புதல்விகளும் உள்ளனர்.பிள்ளை அவர்கள் சமயநெறி வழிபாடு சமூக அக்கரைகள், கல்வி வளர்ச்சியில் பங்காற்றல்,மனித நற்பண்பு போன்ற நற்குணங்களை உடையவராவர்.

கடுக்கரை கிராமம் அழகியபாண்டியபுரம் பஞ்சாயத்தின் கீழ் ஒரு வார்டாக அறிவிக்கப்பட்டது.1959-ம் ஆண்டு மயில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றபின்
அழகியபாண்டியபுரம் பஞ்சாயத்து தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து ஆண்டு காலம் பணியாற்றி உள்ளார். அந்நாளில் கடுக்கரையையும், காட்டுப்புதூரையும் சாலை இருக்கவில்லை.இப்போது காண்கின்ற சாலையை உருவாக்கியவர் இவரே. இவரது இப்பணியினை இன்றும் அங்கு வாழும் மக்கள் நன்றியுடன் நினைவுகூர்கிறாரகள்

பொதுப்பணிகளில் இவர் மிகுந்த அக்கரை காட்டியுள்ளார். பொதுநலன்களை முன்னிட்டு நிதி திரட்டும் போது,பொருளுதவி செய்பவர்களில் எப்பொழுதும் முதல் நபராக முன்னிற்பவராவர்.

கடுக்கரையில் ஐயப்பன் கோவில்கட்டுவதற்கு சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை இவர் அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

நாகர்கோவில் இந்துக்கல்லூரியை உருவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. கல்லூரி நிர்வாகக்குழுவின் உதவி தலைவராகவும் பொருளாளராகவும் பணியாற்றினார். எண்ணற்ற மாணவர்களுக்கு இக்கல்லூரியில் படிப்பதற்கான உதவிகள் பல புரிந்துள்ளார்.

இவரது ஈகை குணம் இவரது சந்ததியாரிடமும் தொடர்ந்திருப்பதற்கு சான்றாக இளையபுதல்வர் திரு, ஆ. பொன்னப்பன் (கணிதப்பேராசிரியர், இந்துக்கல்லூரி, நாகர்கோவில்) தன் தந்தைவழி நின்று தனது சொத்துக்களிலிருந்து 25 சென்ட் பூமியை அண்மையில் சர்வோதய இயக்கத்திற்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

இவரது மூத்த புதல்வர் திரு மெய்க்கும்பெருமாள் பிள்ளை அவர்கள் நெய்வேலியில் இஞ்சினீயராக பணியாற்றுகிறார். இரண்டாவது புதல்வர் திரு. சங்கரநாறாயணபிள்ளை அவர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கடைசி புதல்வரான திரு. பொன்னப்பன் அவர்கள் நாகர்கோவில் இந்துக்கல்லூரியில் கணிதப்பேராசிரியராக பணியாற்றுகிறார்.

திரு. ஆறுமுகப்பெருமாள் பிள்ளை அவர்கள் 1981-ம் வருடம் டிசம்பர் மாதம் 25-ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

குறிப்பு :-
26-1-1988 ல் வெளியான கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு ஏடு. By வி.எஸ். ஆபிரகாம், மனோரமா பப்ளிஸிட்டி, வீராணமங்கலம், தாழ்க்குடி அஞ்சல். கன்னியாகுமரி மாவட்டம் .

தினமலர் நிறுவனர் அமரர் டி.வி. இராமசுப்பையர் அவர்களின் ஞாபகர்த்த வெளியீடு “கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு ஏடு”

No comments:

Post a Comment