Saturday, August 20, 2011

கடுக்கரை பிச்சை சார்

கதராடை,கண்ணில் கண்ணாடி,கையில் புகைந்து கொண்டிருக்கும் 5 பூ மார்க்கு பீடி இவையெல்லாம் ஒருவரின் அடையாளங்கள். கதர் ஆடைக்கே அழகு சேரும் இவர் அணிந்திருக்கும்போது.எத்தனையோ பேரின் கண்ணில் கண்ணாடி இருந்திருக்கும் .ஆனால் இவர் கண்ணில் கண்ணாடி இருக்கும்போது அந்தக் கண்ணாடிக்கே தனி அழகு.சிலர் சிகரெட்டைக் கூட பீடிபோல் குடிப்பார்கள்.இவர் பீடி குடிப்பதை பார்த்தால் சிகரெட் குடிப்பது போல் இருக்கும்.தான் அணிந்திருக்கும் ஜிப்பாவில் தங்க ஊக்கு மின்னும் ; பைலட் பென்னின் கேப் தங்க நிறத்தில் ஜொலிக்கும்.பென் மாத்திரமே வைக்ககூடிய அளவுள்ள தனி பாக்கட் உடுப்பின் இடது பக்கத்தில்....அதில் பைலட் பென்னின் கேப் தங்க நிறத்தில் ஜொலிக்கும் .ஆங்கிலம் சரளமாக பேசவும் தெரிந்த ஒரே ஆள் அன்று கடுக்கரையில் ஒருவர்தான் உண்டு.அந்த ஒருவர்தான் இவர்.

1953 -ல் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் எங்களுக்கு குரூகுலம் ஒன்று உண்டு.அதுதான் நாங்கள் இரண்டாவதாக அதிக நேரம் இருக்குமிடம்.அவர் ஊரில் இல்லாவிட்டாலும் கூட குரூகு.லம் திறந்திருக்கும்.அங்கு படித்த எவனுமே சோடை போகவில்லை.கையெழுத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் அவரது மாணவர்களின் கையெழுத்தும் நேர்த்தியாக இருக்கும். அவரது மேசையில் ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பி இருக்கும்.அந்த டப்பி கீழே சிறிய வட்ட வடிவமும் வாய்ப்பகுதி பெரிய வட்டமாகவும் இருக்கும்.அதில் தான் ஒரு கட்டு ஐந்து பூ மர்க்கு பீடி இருக்கும்.பார்ப்பதற்கே அழகாக இருக்கும்....

ஊரில் நடக்கும் எல்லா விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்பாக நடத்த ஒத்துழைக்கும் இவரின் நையாண்டிப் பேச்சும் அனைவரையும் வசீகரிக்கும்.சிரிக்காமல் பேசி கேட்பவர்களை சிரிக்க வைக்கும் லாகவம் அவருக்கு மாத்திரமே உரித்தான ஒன்று.

இவர்தான் பிச்சை சார்....எங்களுக்கு சார். ஊருக்கு கண்ணாடி பிச்சை...காங்கிரஸ் கட்சிக்கு கடுக்கரை மகாதேவன் பிள்ளை.தோவாளைத்தாலுக்,மாவட்ட அளவிலும் இவர் ஒரு காங்கிரஸ் பிரமுகர்.கடுக்கரை ஊர் சொஸைட்டியில் தலைவராய் இருந்த இவர் மானில அளவில் நிலவள வங்கியில் டைரக்டராக இருந்தார்.டெல்லியில் சங்க பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றினார்.30 வருடத்திற்கும் அதிகமாக நிலவள வங்கியில் அங்கம் வகித்ததை பாராட்டி கலைவாணர் அரங்கில் அமைச்சர் கே.எ.கிருஸ்ணசாமி தலைமையில் நடந்தவிழாவில் கௌரவிக்கப்பட்டார்.

தெ.தி.இந்துக்கல்லூரியில் டைரக்டராக இருந்த மகாதேவன்பிள்ளை எல்.ஐ.சி ஏஜென்றாகவும் இருந்தார்.கடுக்கரை பஞ்சாயத்து வார்டு தேர்தலில் நின்ற போது இவரது சின்னம் “கை”.இரட்டைக் காளை சின்னம் மாறி கை சின்னம் பின்னாட்களில் காங்கிரஸின் சின்னமாகி விட்டது.

No comments:

Post a Comment