Thursday, October 20, 2011

எங்கிருந்தாலும் வாழ்க நீயென் நண்பா...

வே-----ள்(சுந்தர்)என் பால்யகாலத்து சினேகிதன்.சம வயது. விளியாட,சினிமா பார்க்க மாத்திரமே படிப்பதைத்தவிர எல்லாவற்றுக்கும் எங்களுடன் வருவான். பீடி குடிப்பான். சகோதரிகள்,அவன் உட்பட 6 பேர் அவனது பெற்றோருக்கு.அஞ்சு பொம்பளப் பிள்ள இருந்தாலே அரசனும் ஆண்டியாவான்னு சொல்லுவாங்க. குடும்ப நிலவரம் உணராமல் அவன் மனக் கட்டுப்பாடின்றி தான் தோன்றியாய் வாழ்ந்து கொண்டிருந்தான்.

பணிக்கர் கடையில் கொடுக்க வேண்டிய பைசாவைக் கொடுக்க வில்லை என்பதால் அவனது அப்பாவிடம் சொல்ல நல்ல அடிவாங்கினான்.கோபத்தில் போய் பணிக்கரிடம் சண்டைக்குப் போக அந்த சமயத்தில் வந்த Tution சார் பார்த்து விட்டார். அதனால் ஓடிப் போய் விட்டான்.
அடுத்தநாள் காலயில் கடை திறந்த பணிக்கருக்கு பகீர் என்றிருந்தது. மண்ணெண்ணெய் முழுவதும் சிந்தி டப்பா காலியாய் இருந்தது.Tap திறந்திருந்தது....இது எப்படி.கடையை பலகைகளை போட்டு அடைத்துவிட்டுத்தானே போனோம்....சிந்திக்க ஆரம்பித்தார்...சுந்தரின் கைங்கரியம் தான் ....Tution வாத்தியார் வீட்டில் போய் பத்தவைத்து விட்டார். அதன் பிறகு அவரது அடிக்குப் பயந்து ஒப்புக் கொண்டான்.காசு பணிக்கருக்கு கிடைத்து விட்டது. அதன் பிறகு பணிக்கரும் சுந்தரும் நண்பரகளாகி விட்டனர். காசில்லாமலே இவனுக்கு பீடி கிடைத்தது....

ஒரு தடவை கோயிலில் பூசை செய்த காசிப் பூசாரி இவனை மண்ணெண்ணெய் சம்பவத்தைச் சொல்லி கிண்டல் பண்ணவே இவன் அவரைக் கெட்ட வார்த்தையால் திட்ட அவர் அவன் அப்பாவிடம் சொல்லி விட்டார். இதற்கும் அடி பட்டான். இரண்டு நாள் கழித்து அந்தக் கோயிலில் இருந்து பொரியை எடுத்துக் கொண்டு ஓடியதை பூசாரியே பார்த்து விட விசயம் பெரிதாய் விட்டது. ஊரில் யார் எந்த வேண்டாத்தனம் செய்தாலும் பழி இவன் பேர்லயெ வந்தது.அதை அவனது அப்பாவே எல்லொரிடமும் சொல்லிக் கேவலப் படுத்துவார். வீட்டில் பைசா காணாமல் போனால் இவன் திருடி இருப்பான் என அடிபடுவான்.

அவனது அப்பா Tution வாத்தியாரிடம் பராதி சொல்லி விட்டுப் போனார். குற்றம் சாட்டப்பட்ட சுந்தர் இல்லையென மறுக்க ஒப்புக் கொள்ள அவனை உத்தரத்தில் தொங்கும்படி தண்டனை கொடுத்தார். ஒப்புக் கொள்ளவே இல்லை...தண்ணீர் தொட்டியில் மணிக்கணக்காக நிறுத்திப் பார்த்தார்... ஒரு பிரயொஜனும் இல்லை...அவனே சொன்னான்,“ நான் அப்பாவின் பணத்தை எடுக்கவில்லை. எடுத்திருந்தால் எடுத்தேன் என சொல்வேன்.அப்பாவுக்கு எப்பவுமே சந்தேகத்துடன் தான் பாக்கா......”.

அதன் பிறகு என்ன சொல்லியும் Tution க்கு வரவே இல்லை. குறத்தியறைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் போது எட்டணாவைக் காணவில்லை யென பள்ளிக் கூடத்துக்கே வந்து அவன் பையினை சோதனைப் போட்டு பையன்கள் மத்தியில் கேவலப் படுத்தி விட்டுப் போனார். அழுது கொண்டே வந்த அவனை எங்க அப்பா கண்டு அருமையாய் கூப்பிட்டு பேசவே தினமும் என் கூடவே வீட்டில் சாப்பிடுவான்.பள்ளிக்கூடம் வருவான்.

அவன் தோற்றுப் போனான். நான் பூதப்பாண்டி பள்ளிக்கூடத்துக்குப் போகவே அவனை அடிககடி பாக்க முடிவதில்லை.
வருடங்கள் போனது. PUC நான் Hostel -ல் தங்கிப் படித்தேன்,லீவில் வரும்போது அவனும் வருவான்.ஒரு நாள் அவனிடம் பீடி வாங்கிக் குடித்தேன்.... அவனுக்கு ஒரே ஆச்சரியம்....‘ நீ பீடி குடிப்பியா என்னால் நம்ப முடியவில்லையே’ என்றான்.

நல்லா இருப்ப ஏங்கூட வச்சு பீடி குடிக்காதே. பெரியப்பா என்னை அருமையாய் வச்சிருக்கா கெடுத்திராதே என்ற அவன் எனக்கு பீடி கேட்டாலும் தர மாட்டான். மடவிளாகம் ஆசாரியிடம் 2 தங்க காப்பை கொடுத்து நல்லாக்கி கொண்டு வர சுந்தரிடம் கொடுத்தனுப்பினார் அப்பா. அதை அவன் பணயம் வைத்து காசு வாங்க முயலும் போது ஆசாரியே வீட்டுக்கு வர சுந்தர் காப்பை அம்மையிடம் கொடுத்துவிட்டுப் போனவன் தான் . வரவே இல்லை. நானும் இதுநாள் வரை அவனைப் பாக்கவே இல்லை.

ஆனால் எனக்கு இன்றும் அவனைப் பாக்க வேண்டும் போல் இருக்கிறது.கடுக்கரைக்கு அவன் வந்தாலும் என்னை பாக்க அவன் முயற்சித்ததே இல்லை. ஆனாலும் எனக்கு அவனைப் பார்த்துப் பேச வேண்டும் என்று அடி மனதிலே ஆசையாகவே இருக்கிறது.

ஏன்....அவன் என்னைக் கெட்டவனாக்க துணை வரவே இல்லையே...அவனிடம் அவன் அப்பா அருமையாய் இருந்திருந்தால் இன்று அவனும் நன்றாய் இருந்திருப்பான். எங்கிருக்கிறானோ.....இல்லையோ....தெரியவில்லை. காலம் ஒரு நாள் வரும் . நண்பன் அவனை சந்திப்பேன்......

No comments:

Post a Comment