Thursday, October 27, 2011

அப்பா வாங்கின ரேடியோ

வில் வண்டியில் அப்பா போத்தியூருக்குப் போகும்போதெல்லாம் நானும் அப்பா கூடப் போக ஆசைப்படுவேன்.சில சமயங்களில் என்ன க்கூட்டிட்டுப் போவாங்க. அங்கு ஒரு தாத்தாவின் வீடு உண்டு.வீடு பழைய வீடா இருந்தாலும் தாத்தா இருக்கும் ரூம் மிகவும் அழகாக இருக்கும். சுவரில் அழுக்கே பாக்க முடியாது.பிள்ளை இல்லா வீடு அப்படித்தான் இருக்கும் போல.மின்சார வசதி இல்லாக் காலம் அது. அங்கு ஒரு ரேடியோவில் பாட்டு பாடிக்கொண்டே இருக்கும். அது ஒரு பேட்டரி ரேடியோ. வானொலி என்ற பத்திரிகையும் அங்குதான் நான் பாத்திருக்கேன்.சென்னை வானொலியில் வரும் நிகழ்ச்சியை அதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எனக்காக சினிமா பாட்டும் அவருக்கு மனசிருந்தா போடுவார். சுவரில் கடிகாரம் காட்டும் நேரமும் ,அவர் கையில் உள்ள காந்திக் கடிகாரம் காட்டும் நேரமும் , ரேடியோ அறிவிக்கும் நேரமும் ஒன்று போல் இருக்கும்படி பாத்துக்கொள்வார்.

மின்வசதி கிடைத்ததும் அவர் வேறொரு வால்வு ரேடியோ வாங்கினார்.கடுக்கரையில் முதன் முதலாக ரேடியோ வாங்கியது கீழத்தெரு அத்தையின் வீட்டில். REMCO ரேடியோ அது. நான் கல்லூரியில் படிக்கும் போது அப்பாட்ட ரேடியோ வாங்கச் சொன்னேன்.நீ ஹாஸ்டல்லதான இருக்க....படித்து பாஸான பின் கேழு வாங்கலாம்னு அப்பா சொல்லிவிட்டார்.
எல்லா வீடுகளிலும் பாபர்ஷாப், ஹோட்டல்களிலும் தமிழ் பாட்டுக் கேட்கலாம் எங்க வீட்டைத் தவிர.

கல்லூரியில் வேலை கிடைத்தது. ‘இனிமேலும் நம்ம வீட்ல ரேடியோ இல்லேண்ணா மகாக் கேவலம்’ என அம்மையிடம் கிண்டலாகச் சொன்னேன்.

நாகர் கோவிலில் சுந்தர் ரேடியோஸ் என்றும் ப்ரீமியர் ரேடியோஸ் என்றும் எத்தனையோ கடைகள் இருக்கு. ஆனால் எனக்காக மட்டுமே ரேடியோ வாங்கச் சம்மதிச்ச அப்பா எந்தக் கடைக்கும் போகாமல் தனக்குத் தெரிந்த ஒருவரிடம் சொல்லி ரேடியோ வாங்கச் சொன்னா.

அவன் வாங்கி வந்த ரேடியோ .second hand....telefunken. எனக்கு கொஞ்சம் கூட புடிக்கல.அந்த ரேடியோ ஒரு வாரமாய் வீட்டில் அப்பாவின் ரூமில் இருந்தது.நான் அதை தொடவும் மாட்டேன்...பாக்கவும் மாட்டேன். யாருமே தீண்டாமல் அப்படியே இருந்தது. என்ன கூப்பிட்டு , “ தங்கம்...ரேடியோ வேணும்னு நீதான கேட்ட....எடுத்து ஒன் ரூமில வச்சுக்கோ”....

அம்மாவிடம் போய், “இந்த ரேடியோ எனக்கு வேண்டாம்... அப்பாக்கு ரூம்லயே இருக்கட்டும்....”.

அம்மா, “உனக்கு பாட்டு தானே கேக்கணும். இதுல கேக்காதா...அப்பா ருபா கொடுத்து உனக்காகதானே வாங்கினா....நீ வேண்டாம்னு சொன்னா அப்பாக்கு கோபம்தான் வரும்...”.

நான், “ ருபாயை ஏங்கிட்ட தந்தா எனக்கு புடிச்சதை நானே வாங்கி இருப்பேன்லா.”அம்மையும் நானும் பேசியது அப்பாவின் காதில் விழுந்தது.ஒண்ணுமே சொல்லல.....

அடுத்த நாள் அப்பாவின் மனம் நொந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த ரேடியோவை எடுத்து என் ரூமில் வைக்க அப்பாவின் ரூமுக்குப் போனேன். பழைய ரேடியோ இருந்த இடத்தில் வேறொரு ரேடியோ இருந்தது. பெரியதாய் இருந்தது. BUSH radio.இதுவும் second hand radio தான். ஆனால் பாக்க அழகாய் இருந்தது. நான் வாங்கணும்னு நினச்சது பிலிப்ஸ் ரேடியோ.

ரேடியோவை இது நாள் வரை வாங்காமல் எனக்காக மட்டுமே இப்பம் வாங்கி இருக்கா.அப்பா என்னால் மனம் வருந்தக்கூடாதே....

மிக சந்தோசத்தில் அப்பா,“ இது புடிச்சிருக்கா” என நம்பிக்கையுடன் கேட்டார்.

புடிச்சிருக்கு என்றேன்.

ஒன் ரூம்ல கொண்டு வைக்கச் சொல்லட்டா என்று கேட்ட மறு நிமிடம் ரேடியோவும் அதை வைக்க ஒரு மேசையும் எனது ரூமில் இருந்தன.

Arial வைக்கப்பட்டது.2 சவுக்கு மரத்தினை நட்டு அதன் உச்சியில் ஏரியல் ஒயரை இணைத்து ரேடியோவின் பின்னால் இருக்கும் socketல் ஏரியலின் ஒரு முனையை சொருகி ரேடியோவில் பாட்டுக் கேட்டேன்.

என்னை விட அப்பாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி.

ரேடியோக்கு 15 ருபாய் போஸ்டாபீசில் licence fees கட்டினோம்.(இப்பொழுது licence கிடையாது)
78 வயதான என் தந்தையை மீறி நான் எதுவுமே செய்யத் துணிந்தது இல்லை.அப்பாவுக்கு நான் சின்னப்பிள்ளை....ஆம் 26 வயதிலும் செல்லப்பிள்ளை.

அப்பா இறக்கும் வரை அந்த ரேடியோ என்னிடமே இருந்தது. அப்பா ,அந்த ரேடியோவை வைக்க ஒரு புதிய ரேடியோ மேசையை ஆசாரியை வைத்து செய்து தந்தார்.ரேடியோவின் விலையை விட மேசைக்கு ஆன செலவு கூடுதல்.....

No comments:

Post a Comment