Wednesday, October 19, 2011

வில் வண்டியில் கல்லூரிக்குப் போன கதை

1973-ல் நான் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த சமயம்.இரண்டாம் வாரத்தில் ஏதோ போராட்டம் காரணமாக பஸ் வராது என்பதறிந்து அந்த நாளில் கல்லூரிக்கு வரமாட்டேன் எனச் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.

அப்பா என்னிடம்,“ நாளைக்கு காலேஜுக்கு எப்படிப் போகப் போகிறாய்” கேட்டார்.

நான் ,“ பஸ் வந்தா போவேன். இல்லண்ணா லீவு போட்டுருவேன்”

“காலேஜுல சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகல்ல.லீவெல்லாம் எடுக்கக் கூடாது.இண்ணைக்கு எதுக்கு வந்தே... நாரூல்ல பாஸ்கரன் வீட்ல தங்கி நாளைக்கு போயிருக்கலாம்லா....”

“அப்பம் நான் எப்படிப் போவது... யாரிட்டயாவது சைக்கிள் வாங்கீற்றுப் போகட்டுமா ?”

“சைக்கிள்லயும் போகாண்டாம்...நடந்தும் போகாண்டாம்..வீட்ல இரு”...இது அம்மா

“நான் சொன்னதக் கேழு. வில்லு வண்டியிலே நாளைக்குப் போ”...இது அப்பா

அப்பா சொன்னால் மறு பேச்சு பேசமுடியாது. சரி யென்று தலையாட்டினேன்.

காலையில் பப்பனாபிள்ளையண்ணன் வந்து வண்டியில் காளையைப் பூட்டி ரெடியாய்

இருந்தான்.நான் வண்டியில் ஏற வண்டியை காளை மாட்டை சாட்டையால் அடிக்க வண்டி நகர்ந்தது.எனக்கு ஒரே சிரிப்பு.வழியில் B.Com படித்துக் கொண்டிருந்த வாழைக்கோணம் வேலப்பன் பஸ் வருமா வராதா என்று அவன் வீட்டு முன்னே நின்று கொண்டிருந்தான்.நானும் வரட்டுமா என்ற அவனையும் கூட்டிகொண்டு போனேன்.

வண்டி மணிமேடை பக்கம் வந்தது. மணி 9.45.இங்க இறங்கி நடந்து போவேன்ணு சொன்னியே. என்ன செய்ய ? நான் பதில் கூறுவதற்குள் பப்பனாபிள்ளையண்ணனே நேரமாயிற்று உன்னக் கொண்டு காலேஜ் பக்கம் விட்டுட்டு நான் இங்க வந்து நின்ணுருகேன்...வண்டி காலேஜ் அருகே போய் நின்றது.

என்னைப் பார்த்த Principal Prof.L.C.Thanu சாரும் மற்றவர்களும் ஆச்சரியத்தோடு பார்த்து எப்படி வந்தே.... Taxiயிலா வந்தே... எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை....ஒன்றுமே சொல்லாமல் நான் சிரித்துக் கொண்டே வேகமாய் Attendance Register-ல் கையெழுத்துப் போடப் போய்விட்டேன்.

என் கூடவே வந்த பையன் வண்டியில் வந்த விவரத்தை சாரிடம் சொல்லி விட்டான்.அவர் மற்ற சக ஆசிரியர்களிடம் சொல்ல எனக்கு ஒரே பயம்... எங்கே பையங்களுக்குத் தெரிந்து
பட்டப் பெயர் எதாவது வைத்து விடக்கூடாதே.

அப்பா சொன்னதால் மாத்திரமே வண்டியில் வந்தேன்...எல்லாம் சரியாய் பஸ் போக ஆரம்பிச்சாச்சு. ஆனால் வீட்டுக்கும் வண்டியிலேயே போனேன்....

காமராஜ் மறைந்த நாளில் செய்தி அறிந்த உடன் வகுப்புகள் விடப்பட்டன. கடுக்கரைக்கு பஸ் போகாததால் நானும் சாத்தாங்குட்டி அத்தானும் சைக்கிளிலேயேப் போனோம். போனதும் அப்பா சைக்கிள்லயே நாரூல்ல இருந்து வந்தியா....கால் வலிக்கல்லையா....சொல்லப்படாதா பப்பனாபிள்ளைய வண்டி கொண்டுவரச் சொல்லி இருப்பேனே.... மனதுக்குள் தந்தை மனதை நினைத்துக் கொண்டே வீட்டினுள் சென்றேன்

கல்லூரி ஆசிரியரே ஆனாலும் அப்பாக்கு நான் பிள்ளைதானெ.

No comments:

Post a Comment