Thursday, October 20, 2011

குதிரை வண்டி

குறத்தியறை பள்ளிக்கூடத்தில் நாங்கள் படித்துக் கொண்டிருக்கும்போது வகுப்பு முடிந்து சாயந்திரம் வாரத்தில் ஒரு தடவையோ,இரு வாரத்திற்கு ஒரு முறையோ குதிரை வண்டி ஒன்று கடுக்கரைக்குப் போகும்.அது லிப்டன் தேயிலை விற்பனையாளர் வரும் வண்டி.அவர் பின் பக்கத்தில் ஒற்றைக் காலை வண்டியின் வெளியே தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டு கீழே விழாமல் இருக்க குறுக்காகப் போட்டிருக்கும் கம்பியைப் பிடித்துக் கொண்டிருப்பார்.சிறுவர்கள் அந்த வண்டியின் பின் பக்கம் வண்டியைப் பிடித்துக் கொண்டு ஓடுவார்கள்.

நாகர்கோவிலில் குதிரை லாயம் இருந்தது.Towerபக்கம் குதிரை வண்டிகள் நிற்கும். கழுவந்தட்டுக்குப் போணுமானால் அப்போ நடந்து போகணும் இல்லேண்ணா குதிரை வண்டியிலே போணும். இன்று குதிரை வண்டிகளே இல்லை.

திருச்செந்தூரில் கொஞ்ச வருடத்திற்கு முன்னர் வரை குதிரை வண்டி உண்டு.இப்போ இருக்கா தெரியல்ல.

திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் வருவதற்குமுன் Examination paper valuation-க்குப் போக மதுரைக்கு போவோம். வீட்டில் இருந்து பஸ் ஸ்டேண்டுக்கு ஆட்டோவில் போய் மதுரைக்கு பஸ்ஸில் போவோம்.மதுரையில் இறங்கினால் மருந்துக்குக்கூட ஒரு ஆட்டோ கிடையாது. சைக்கிள் ரிக்சா மாத்திரமே உண்டு. நடந்தே மாடேண் லாட்ஜுக்குப் போவோம்.

அங்கிருந்த வேளையில் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே போய் சாப்பிடாமல் ரூமில் இருந்தே சாப்பிடுவோம்.சாப்பாடு வாங்கிக் கொண்டு வருபவன் ஒரு ரிக்‌ஷாக்காரன்.அவன் பெயர் சுப்பையா . அவன் கதையைக் கேட்டு அதை எழுதி அனுப்பினால் பரிசு கிடைக்கும். சோகமும் வேடிக்கையாய் இருக்கும்.எல்லோரும் அவனுக்கு அதிகமாகவே ருபாய் கொடுப்பார்கள்.குடிப்பது தான் அவனுக்கு மிகவும் பிடித்த விசயம்.அதனால் அவனது தேகமே நோஞ்சான் போல் தான் இருக்கும். குடிக்க என்று சொல்லி காசு கேட்பான். காசு கொடுத்து குடிக்காதே எனச் சொன்னாலும் சிரித்துக் கொண்டே போய் விடுவான்.

நாம் காசு கொடுத்து எதையாவது வாங்கிவரசொன்னால் வாங்கி வந்து மிச்ச காசையும் தந்திருவான்.பொய் சொல்ல மாட்டான்.இந்துக் கல்லூரி ,அண்ணா கல்லூரி ஆசிரியர்கள் தான் Modern Lodge க்குப் போவது வழக்கம்.அவர்கள் அனைவருக்கும் சுப்பையாவைத் தெரியும்.கிருஷ்ணன் சார்,சிதம்பரம் பிள்ளை சார் இவர்களுக்கு இவன் தான் சேவகன்.

அடுத்த தடவை வரும்போது இவ்வுலகை விட்டு மேலுலகம் சென்றதைக் கேள்விப்பட்டு மிகவும் வருந்தினோம். எங்களுடைய லக்கேஜை மாத்திரம் ரிக்‌ஷாவில் கொண்டுவர நாங்கள் நடந்தே போனது மனதில் தோன்றியது.

No comments:

Post a Comment