Thursday, June 30, 2011

இதனை படிக்க வேண்டாம் என்று சொல்லமாட்டேன்.

1988 மார்ச்சு மாதம் 28 -ல் திருமணநாளில் எனது மனைவிக்கு எனது Diary-ல் எழுதியது


இந்நாள் நாம் மகிழ்ந்திடும் நாள் இதே நாள்
ஒரு மாமாங்கம் முடிந்த நாள் அந்நாளே
நம்தம் கைப்பிடித்த நாள்..
மும்மணிகள் தந்த உன்வதனம் வாடிவிடுமே
என்முகம் வாடும் போதெல்லாம்
தை மாதம் முதல்நாள் வந்ததொரு நாள்
அக்காலையில் நான் பட்ட அவதி
நின் பாதம் பட்டதாலன்றோ ஓடியது
கையொடிந்த அன்றொருமாலையில்
அருமையாய் அமுதூட்டியது நின் கையன்றோ..
என் தோளில் நீ இருந்தால் சாதாரணமது
உன் தோளில் தானே நான்...கடினமன்றோ
எத்தனையோ துன்பங்கள் என்னால் பட்டது நீயன்றோ
நானடைந்த சோதனையிலும் அருகிருந்து
உத்தம தொழனாய் இருந்ததும் நீயன்றோ...

வேனலில் இளைப்பாறும் சோலை நீ எனக்கு
மனவேதனைப் புண்ணை மாற்றிடும் மாமருந்து நீ எனக்கு
வாடிடுமுன்முகத்தைக் காணின் வாடிடுமே என்முகம்
ஆணிரண்டு பெண்ணொன்று நம் மக்கள்
நம் வாழ்வுபோல் அவர்கள் வாழ்வும் அமைந்திட
வணங்கிடுவோம் எல்லாம்வல்ல இறைவனவனை
இனி அவர்கள் உயர்வே நம்முயர்வு
எந்நாளும் எல்லோரும் இன்முகமாய் இருந்திட
ஆண்டவனை வேண்டிடும் உன்னன்பு பொன்னன்

Wednesday, June 29, 2011

 
Posted by Picasa

மகனின் ஆசிரியரை மதித்த தந்தை

அந்தநாள் ஞாபகம் வந்ததே நெஞ்சினில் இன்று

ஒரு நாள் காலையில் (1979 அல்லது 1980) காலை கல்லூரிக்கு போகும் வழியில் ஒரு பழைய B.Sc Maths மாணவன் வேணுவைச் சந்தித்தேன்.seventh rank எடுத்த வேணு M.Sc Maths & Msc Physics படித்து முடித்திருப்பதாகவும் சென்னையில் Telephone Department ல் இருப்பதாகவும் நாகர்கோவிலில் புதிய Telephone Exchange ஒர்க்குக்கு வேண்டி வந்திருப்பதாகவும் சொன்னான். கொஞ்ச நெரம் பேசிவிட்டு நான் அவனிடம், ‘கடுக்கரையில் எங்க வீட்லெ போண் சரியில்ல.எனக்கு புதுசு ஒண்ணு வேணுமே’. அவன், ‘சார்,இண்ணைக்கு சாய்ந்த்ரம் ஒரு ஆள்ட்ட கொடுத்தனுப்புகேன்’

அன்று இரவு ஏழரை மணிக்கு நான் வீட்டின் உள்ளே இருந்தேன்.வெளி வராந்தாவில் இருந்த என் அப்பா , ”தங்கம்..... இங்க வா... உன்னைத்தேடி ஒரு பையன் வந்திருக்கான்”

வெளியே வந்து பார்த்தால் போணோடு அந்த மாணவன் வேணு. நான் அவனிடம், ‘வா..வா..நீ எதுக்கு கொண்டு வந்தே’..

சிரித்த முகத்துடன் வேணு சொன்னது. “என் உதவியாளரிடம் தான் சார் உங்க வீட்ல கொண்டு தரச்சொன்னேன். எங்க அப்பா யாருக்குடா-னு கேட்டார். எங்க கடுக்கரை சாருக்கு-ண்ணேன். ‘என்னடே நீ பெரிய ஆளாயிற்றியா.? ஒரு சாருண்ணு மரியாதை வேண்டாம்.நீயே பஸ்ஸில போய் கொண்டு கொடுத்துட்டு வா. அதான் சரி'...."

ஒரு மாணவனின் தந்தை என்னை மதித்தது பெரிய விசயமே அல்ல. வேணு பெரிய உயர் பதவியில் இருந்த பின்னும் தன் தந்தையின் வாக்கை மந்திரமாக மதித்ததைத் தான் பெரிதாக நினைத்தேன். இவனைப் பெற என்ன தவம் செய்தாரோ அவர்?

Monday, June 27, 2011

என் மகன் ரசித்த (அவனுக்கு எழுதிய) என் கடிதம்

என் மகனுக்கு எழுதிய கடிதம். எழுதியவை எல்லாமே இரவல்

Posted by Picasa

Dear Dinesh,
அப்துல்கலாம்-ன் அக்னிச்சிறகுகள்—புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.24-June.2000-ல் சென்னையில் நீ வாங்கியது

அப்துல்கலாமின் தந்தை தன் மகனிடம் கூறிய அறிவுரை

“அபுல்..! முன்னேற்றம் காண்பதற்காக நீ இங்கிருந்து புறப்பட வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஒரு கூடு கூட இல்லாமல் தன்னந்தனியாக வானவெளியில் நாரைப் பறக்கவில்லையா ? உன்னுடைய மகத்தான ஆசைகள் நிறைந்த இடத்தை அடைவதற்காக நீ பிறந்த இடத்தின் ஏக்கத்தை உதறியே தீரவேண்டும். எங்களுடைய அன்போ தேவைகளோ உன்னைக் கட்டுப்படுத்தி வைக்காது”......பக்கம் 36

கலீல் ஜிப்ரானின் வார்த்தைகள்: “உங்களுடைய குழந்தைகள் எல்லாம் உங்களுடைய குழந்தைகள் அல்ல. தமக்காகவே ஏங்கிக் கொண்டு இருக்கும் வாழ்க்கையின் வாரிசுகள் அவர்கள்.உங்கள் மூலமாக வந்தவர்கள், அவர்கள். ஆனால் உங்களுக்குள் இருந்து வரவில்லை.அவர்களிடம் நீங்கள் உஙகள் அன்பை வழங்கலாம் .ஆனால் ,உங்களுடைய சிந்தனைகளை அல்ல. தங்களுக்கு என்ற சுய சிந்தனை கொண்டவர்கள்,அவர்கள்.”..பக்கம் 36

ராமேஸ்வரம் ரயில்நிலையத்தில் ,ரயில் ஏற்றியபோது அப்துல்கலாமின் அப்பா சொன்னது: “உன்னுடைய உடலுக்கு இந்த ராமேஸ்வரம் தீவு இடமளித்திருக்கலாம். உன் ஆன்மாவுக்கு அல்ல. எதிர்காலம் என்ற வீடுதான் உன் ஆன்மாவின் வசிப்பிடம். ராமேஸ்வரத்தில் இருக்கும் நாங்கள் யாரும் அங்கு வரமுடியாது. கனவில்கூட அது நடக்காது. கடவுள் உனக்கு அருள்புரியட்டும்,என் செல்வமே....”பக்கம் 37

“வீட்டு ஏக்கம் என்னை வாட்டினாலும், புதிய சூழ்நிலைக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாக முடிவு செய்தேன். மூலகாரணம் என் அப்பா”....பக்கம் 38

“வாழ்க்கையில் வெற்றி அடையவேண்டும், நினைத்ததை சாதிக்க வேண்டும் என்றால் ஆசை,நம்பிக்கை,எதிர்பார்ப்பு என்ற மூன்று வலுவான சக்திகளை புரிந்து கொண்டு அதில் கைதேர்ந்தவராகிவிட வேண்டும்”....பக்கம் 40

“மற்றவர்களை அறிந்தவன் பண்டிதன். தன்னை அறிந்தவன்தான் உண்மையான கல்விமான்”

பேரனைக்காட்டி பாடம் புகட்டிய அப்பா

என் பிதா மனம் பித்து என் மனம் கல்லு
_____________________________________________

 
Posted by Picasa


1979-ல் கடுக்கரையில் ஒரு நாள். நல்ல வெயில்..

நானும் எனது உறவினரும் நண்பருமான ரவியும் என் வீட்டின் முன்னே சாலையோரத்தில் ஒரு பாரவண்டியின் பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தோம்.

வீட்டின் உள்ளே என் மூன்றுவயது மகன் விளையாடிக்கொண்டிருந்தான்.

தற்செயலாக வெளியே வந்த என் தந்தை வெயிலில் நின்ற எங்களைப் பார்த்ததும் , “வெயில் சுடல்லியா,உள்ள வந்து நிழல்ல இருந்து பேசப்டாதா” கூறினார்.

நாங்கள் அதனைப் பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்தோம்.என் தந்தைக்கு எங்கள் செயல் பிடிக்கவில்லை.

உள்ளே போன என் தந்தை என் மகனை அழைத்து நாங்கள் காணும்படியாக வெயிலில் நிற்கவைத்தார்கள்... பேச்சு சுவராஷ்யத்தில் எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.

“ஏய்! ஓம்மகன் வெயில்ல நிக்கான்.உனக்கு சுடல்லியா.. நீ வெயில்ல நிக்கது எனக்கு மேலல்லாம் சுடுகே”

நான் சிறுவனாக இருந்த அந்த நாள்...

 
Posted by Picasa


என் வயது ஞாபகம் இல்லை. சிறுவர்கள் கொஞ்சம் பேர் கடுக்கரையில் இருந்து சினிமா பார்க்க புறப்பட்டுப் போனோம். தியேட்டர் இருந்த இடம் மணத்திட்டை . அது திட்டுவிளைக்கும் தெரிசனம்கோப்புக்கு இடையே உள்ள ஒரு ஊர்.முதல் இரவுக்காட்சி படம் பார்த்தோம். சிவாஜி கணேசன் நடித்த நானே ராஜா... படம் மிக நன்றாக இருந்ததால் மறுபடியும் டிக்கட் எடுத்து இரண்டாம் காட்சியையும் பாத்தோம்.

வீட்டிலோ சினிமா பாக்கப்போன பிள்ளைகளைக் காணல்லியே என்று என் அப்பா ஒரு ஆளை தெரிசனம்கோப்பில் என் உறவினரின் வீட்டில் போய் விசாரித்துவர அனுப்பி இருந்தார்.அந்த வீட்டில் இருந்த நண்பனும் என்னுடன் படம் பார்த்துக் கொண்டிருந்தான்.அவனும் வீட்டில் சொல்லாமல் தான் வந்திருந்தான். என்னைத் தேடி வந்த ஆள் விசயம் தெரிந்து போய்விட்டான். காட்சி முடிந்து நாங்கள் வீட்டுக்குப் போனதும் நான் அப்பாவுக்குத் தெரியாமல் அம்மாவின் உதவியோடு போய்ப் படுத்து உறங்கி விட்டேன். என்னை ஏசவே தெரியாத என் அம்மை, ‘அப்பா ரொம்ப கோபத்தில இருக்கா’ என்று மாத்திரம் கூறினாள்.

காலையில் அடி கிடைக்கும்...ஒருவிதமான பயத்துடன் இருந்த என்னை அப்பா ,”தங்கம்... இங்க வா....நேத்தைக்கு எங்க போன.....யார்ட்ட கேட்டுட்டுப்போன....யாருக்கு கூடப்போன...ஒருத்தரும் உருப்படவே மாட்டீங்க... எப்படியோ போங்க...”

அடியில் இருந்து தப்பி விட்டதில் நிம்மதி....ஆனால் என்னோடு வந்த அனைவரும் அவர்களின் அப்பாவிடம் அடி பட்டார்கள்...என்னால் தான் அடி பட்டார்கள் அவர்கள்....

இன்று நான் நினைத்துப்பார்க்கிறேன்

என் தந்தை சொல் அடி தரும் வலியை விட மிகவும் அதிகமாக வேதனையையும் மனவலியையும் தந்தன. தலை குனியவைத்துவிட்டேனோ என் தந்தையை !...செய்தபின்தானே செய்தது தப்பு என்று தெரிகிற பருவமல்லவா சிறுவயதுப் பருவம்.

என் வாழ்க்கையில் அது ஒரு பாடமாக எனக்கு அமைந்தது...அதன் பிறகு என் தாயிடம் கூட நான் பொய் சொன்னதே இல்லை...கோபப்பட்டுக்கூட எங்க அம்மையை பேசியது கிடையாது.87 வயது வரை என்னுடன் இருந்த என் தாயின் மனம் நோகும் படி நானோ என் மனவியோ நடந்து கொண்டதே இல்லை. என் அம்மையின் வார்த்தைக்கு எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசாதது என் பிள்ளைகளுக்கு பாடமாக அமைந்தது..அதுவே என் பிள்ளைகள் அவர்கள் தாயை எதிர்த்து இதுவரை பேசாமல் இருந்ததற்கு காரணம் ..... இதுதான் அவர்கள் கற்ற பாடம்....(என் தாய் என் பிள்ளைகளாலும் அன்பாக நேசிக்கப்பட்டவள்.)

Saturday, June 25, 2011

ஏதோ ஒரு பாட்டு ஒவ்வொரு வயதிலும்

பிடித்த பாடல்கள்

ஒருவயதில் எனை உறங்க வைத்தது தாயின்தாலாட்டு
ஒன்பது வயதில் எனை உணர வைத்தது தந்தையாரின் பாட்டு
பதினெட்டில் எனைக் கிறங்க வைத்தது திரைப்பாட்டு
இருபத்தேழில் மயங்க வைத்தது தாரத்தின் பாட்டு
இருபத்தொன்பதில் இனிது எதென உணர்த்தியது மழலைப்பாட்டு
இப்பமென் அறுபதில் பிடித்தது பேரன் பாடும் தாத்......தாத்.......தாத்தாப்பாட்டு
எப்பவும் பிடிப்பது தினமும் வணங்கிப்பாடும் ’அம்மா’ என்ற நான் பாடும் பாட்டு.

Thursday, June 23, 2011

என்னுடன் என்னைவிட அதிகம் படித்த கணிதத் துறை நண்பர்கள்

நான் பெருமைஅடைய காரணமான நல்லவர்களுடன் நானும்

 
Posted by Picasa

ஒய்வுபெற்றபின் நான்பெற்ற கடிதம்

நற்சான்று நல்லவர்களிடமிருந்து




 
Posted by Picasa

இப்படியும் ஒரு அழைப்பிதழ்

என் கையெழுத்தில் என் மகளின் திருமண அழைப்பிதழ்


 
Posted by Picasa

இதனைப் படிக்க வேண்டாமே

இனியென்று காண்பேன் நின் புன்முறுவலை

இரண்டு நாள் தாடியுடன் தடியில்லாமல்
இறுதியாத்திரை புறப்படுமுன் இறுதி நித்திரையில் நீ
இருந்த போதினில் என் இறுகிய நெஞ்சினில்
தோன்றி மறைந்த பசுமை நினைவுகள்

உனை வந்து பார்த்துவிட்டு வீட்டுக்கு கிளம்புமுன்
‘ராசம்’ என் ஆச்சியின் ஆணைக்குட்பட்டு
ருபாயினையும் தந்துவிட்டு அன்பாய் முத்தமிடுவாயே
 
Posted by Picasa

அன்று கன்னத்தை குத்திய தாடி
இன்றும் இன்பமாய் என் நெஞ்சினைக் குத்துதே.

உன் சரீரம் நான் சுமந்த குடத்து நீர்
நனைத்தபோது சற்று அசைந்ததே
வேடிக்கையாய் பேசி வேதனை மறந்து
சிரித்திடும்போது அசையுமே உன் தேகம் நின்
நாவினில் நர்த்தனம் ஆடிய வார்த்தைகள் எனை
இன்றும் இன்பமாய் நனைக்குதே

புத்தம்புதிய கதராடை உன்னுடலை அலங்கரிக்க
என் கரத்தால் பொத்தானைப் போட்டேனே
புன்னைநகர் மாமா வீட்டில் இருந்து சனிதோறும்
காலையில் என் வீட்டுக்கு அழைத்துவர உனக்கு
சட்டையும் போட்டு பொத்தானையும் போட்டு கைப்பிடித்து
நிழலாய் வருவேனே....
அந்த நிழல்கள் இன்றென் கண்ணில் நீரையும்
ஊறவைத்து நெஞ்சையும் கனக்கவைக்குதே

விண்ணுலகம் என்ன தவம் செய்த்தோ ?
நின்பங்கும் அங்கு வேண்டும் என்பதனாலா?
அங்குளோரும் வேதனை மறந்து சிரித்திடல்வேண்டுமென்பதாலா?
எதனால் உனை சித்திரைக்கு முன்னே அவ்வுலகம்
நிரந்தர விருந்தினராய் அழைத்தது?

அன்புக்கு மறுபெயர்-தாத்தா உன்பெயர்தான்
பொறுமைக்கு மறுபெயர்-தாத்தா உன்பெயர்தான்
பசுமையான நினைவுக்கு மறுபெயர்-தாத்தா உன்பெயர்தான்
சகிப்புக்கு மறுபெயர்-தாத்தா உன்பெயர்தான்
புறம்கூறாமைக்கு மறுபெயர்-தாத்தாஉன்பெயர்தான்
ரகசியங்களை புதைக்கும் குணத்துக்கு மறுபெயர்-தாத்தா உன்பெயர்தான்

எனக்கெல்லாம் ஒரேஒரு பெருமைதான் உண்டு தாத்தா
உன் பெயரன் என்பது மட்டும்தான் அது தாத்தா

என்றும் எங்களை இறையாய் இருந்து
காத்திடல் வேண்டி நின் தாழ்பணிந்து
வணங்கிடுவேன் தினமும் தாத்தா....

என்றும் காண்பேன் உன்புன்முறுவலை நினைவில்

(தன் தாத்தா மறைந்த அந்த வாரத்தில் பெயரன் பொன்.அனந்தபத்மகுமார்(முருகன்) வடித்த கவிதை)

Sunday, June 19, 2011

என்னையே வியந்த நான்

Posted by Picasa



வியந்த பத்துக்கள்

பயின்ற கல்லூரியும் பணியாற்றிய கல்லூரியும் ஒன்று

பணியில் சேரும் போதும் விடைபெறும்போதும்
கல்லூரியில் முதல்வர்களாய் இருந்தவர்கள்
ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள்

பிறந்த நாள், வேலைக்கு விண்ணப்பித்த நாள்,
விடைபெற்ற மே 31,2005 எல்லாமே செவ்வாய் கிழமை.
ஆசிரியர்மன்றம் பிரிவு உபச்சார விழா நடத்திய
நாளும் செவ்வாயே. அன்று என் நட்சத்திரம் மகம்

ஆசிரியர் மன்ற செயலாளராக எனது விருப்பமின்றியே
ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதுபோல் ஆசிரியர்
ஆசிரியரல்லாதோர் கூட்டமைப்புக்கு தலைவர் பதவியும்
தேடிவந்தது

வேண்டாம் துறைத்தலைவர் பதவி என்றபோதும் தலைவர்
ஆனது- முதல் செமினார் கணிதத்துறையால் நடத்தப்பட்டது

வெள்ளிவிழா ஆண்டிலும் பொன்விழா ஆண்டிலும் பணிபுரிந்தது.

கணித்துறை ஆசிரியர்களின் ஒத்துழைப்பாலும் நிதி
உதவியாலும் கல்லூரியில் பயின்ற ஏழை மாணவர்கள்
படிப்புக்கு பண உதவி செய்தது

Relieving order தந்த கல்லூரித்தலைவர் பெயரும்
என் தந்தையாரின் பெயரும் ஒன்று என்பதுடன் என்
ஊரான கடுக்கரையைச்சேர்ந்தவர் என்பது

ஓய்வு பெற்று ஒரு வருடம் கழிந்த பின்னும் சும்மாவே இருந்தவனுக்கு
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக தொலைத்தொடர்பு கல்வி STUDY CENTRE, நாகர்கோவில்தெ.தி. இந்துக் கல்லூரி வளாகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது

அதே கல்லூரியில் இன்று ஆட்சிக்குழு உறுப்பினராய் இருப்பது

Posted by Picasa

Saturday, June 18, 2011

The letter given to my successor in 2005


Thanks letter given to all the Mathematics teachers at the time of "GET TOGETHER" in April 10,2005 at Parvathi International


 
Posted by Picasa

Thursday, June 16, 2011

என் கிராம மக்களோடு சிவன் கோயிலில் ஒருநாள்

 
Posted by Picasa

வைகாசி மாதம் 32(ஜூன் 15)புதன் கிழமை சந்திரகிரகணம்

இந்த மாத 22-வது கிரிவலம் அன்னதானம் நடக்கும் போது வரவேண்டும் என என் ஊருக்கே என்னை அழைத்தார்கள். நானும் என்மனைவியும் கோயிலுக்குப்போனோம்.கோயிலில் இருந்த கூட்டத்தையும் இளைஞர்களின் சுறுசுறுப்பான பணிகளையும் பார்த்து சந்தோசப்பட்டேன்.சிவன் அலங்காரம் பிரசித்திபெற்ற கோயிலில் பார்த்த சிவன் போன்று மிக அழகாய் இருந்தது...முருகன் ,சிவகாமிஅம்மன் சன்னிதானமும் மிகவும் அழகாய் இருந்தது. நான் பழகிய ஊர்க்காரர்கள் சிலரை அடையாளம் கண்டு அவர்களிடம் போய் பேசிவிட்டு ஓரமாய்
படிப்பெரையில் போய் இருந்தேன். என் நினைவுகள் என்னைப் பின்னோக்கி அழைத்துச் சென்றது “......முப்பது வருடங்களுக்கு முன்னால் இந்தக்கோயில் எப்படி இருந்தது. ஊரெல்லாம் ஒளிவெள்ளம் . ஆனால் சிவன் கோயிலில் மட்டுமே மின் வசதி இல்லாத இருள் சூழ்ந்த நிலை.........நாங்கள் முயற்சி எடுத்தோம் .அரசின் அனுமதி பெற்று ஊர்மக்களிடம் பணம் பெற்று அந்த வரவு மூலம் கோயிலில் வெள்ளை , பெயின்று அடித்து,Artist காந்தியை வைத்து கோயிலின் பெயரான ஸ்ரீ கண்டேஷ்வரமுடைய நயினார் திருக்கோயில் என்ற பெயரையும் எழுதி வைத்து, ஒயரிங் பண்ணி மின் வசதி எல்லாம் செய்தோம். புஷ்பாபிசேகம், அன்னாபிசேகம் நடத்தினோம். பக்தர்கள் சங்கம் ஒன்றை ஆரம்பித்து ஒவ்வொருமாத கடைசி வெள்ளிக்கிழமையிலும் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை செய்தோம்.குப்பைக்கிடங்காய் மாறி இருந்த கிணறை ஒரே நாளில் தூர்வாங்கினோம் .கோவிக்குளத்து படித்துறைகளை சரியாக்கினோம்.ஒவ்வொரு வருடமும் ஊரில் நன்றாகப் படித்த ஏழை மாணவர்களுக்கு புக்,நோட்டு வாங்கிக்கொடுத்தோம்.......”

‘வணக்கம் எப்பம் வந்தீங்க........ஒரு குரல்’.குரல் வந்த திசையைப்பார்த்தேன்....குரலின் சொந்தக்காரர் அன்னதானத்தை நல்லமுறையில் நடத்திக்கொண்டிருக்கும் பேச்சினாதன்.

’கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் வந்தேன்’

“நீங்க தானே ‘ கடுக்கரை திருமுருக பக்தர்கள் சங்கத்தை’ ஆரம்பித்து இந்த கோயிலுக்கு எல்லாம் செய்தீர்கள். அப்பம் நாங்களெல்லாம் சின்னப் பிள்ளைகள். இப்பம் நாங்க தொடர்ந்து
இந்தக் கோயிலில் எல்லா முக்கிய சிறப்புகளை செய்து வருகிறோம்.....” கேட்க மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது...அன்னதானத்து அன்னத்தை அருந்துவதற்கு முன்னரே என் மனம் நிறைந்ததோடு வயறும் நிரம்பியது. எல்லாமே அவன் செயல் தானே. ஓய்வு பெற்ற எனக்கு இது போன்ற இதம்தரும் பேச்சுதானே சுவைதரும் அருமருந்து...

Sunday, June 12, 2011

நான் எடுத்த படம் எட்டிய உயரம்

 
Posted by Picasa

என் மகன் வாங்கித்தந்த கேமராவில் எடுத்தபடம். தமிழ்நாடு சுற்றுலா விடுதி வளாகத்தில் இருந்து எடுத்தபடம்.அதனைத் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி தலைவர் ,முதல்வர்
களுக்கு அனுப்பினேன். நாட்கள் நகர்ந்தன.... நானும் என் மனைவியும் பெங்களூரில் எங்கள் மகள் வீட்டுக்குப் போய் ஒரிரு மதங்கள் இருந்துவிட்டு வந்தோம்....வந்ததும் கடிதங்கள், பத்திரிகைகள்,வாரமலர்கள்,தினமணி கதிர்,.... எடுத்து படிக்க ஆரம்பித்தேன்...கல்லூரி ஆண்டு மலரை எடுத்தேன்..... ஆண்டுமலர் அட்டைப்படத்தை பார்த்தேன்.... இன்பத்தேன் வந்து பாய்ந்தது என் கண்ணிலே. அட்டையை அலங்கரித்த பின் புது மெருகுடன் தோன்றும்
முக்கடல் சங்கமத்தில் மூவரின் நினைவு சின்னங்கள்....

Posted by Picasa

Tuesday, June 7, 2011

என் எழுத்தினையும் நேசிக்கும் ஒரு அன்பு உள்ளம்

இன்ப அதிர்ச்சி
.by Thankappan Arumugaperumal on Monday, June 6, 2011 at 12:39am.

என்றோ எழுதிய என்வரிகளால் இன்று அடைந்த இன்ப அதிர்ச்சி
 
Posted by Picasa


நான் இன்று௦( 05-06-11)என்னுடைய நான்பெரிதும் மதிக்கும் மதினியை
அவள் மகள் வீட்டில் போய் பார்க்கப்போனேன். மருமகன்(என் அக்காள் மகனும் தான் )
சென்னை சென்றிருந்தான்.என்னுடன் என் மனைவி,மற்றும் உறவினர்கள் வந்தனர்.

நான் சற்றுநேரம் இருந்துவிட்டு புறப்பட தயாரானேன். நடன வகுப்பு நடத்தும் மகள்
என்னிடம் ஒரு ஆல்பத்தை தந்து பார்க்கச் சொன்னாள்.அந்த ஆல்பத்தின் முகப்பில்
“மகளோடு நான்” என்று இருந்தது. பக்கங்களை புரட்டினேன்.மகள் அவள் மகளுடன் உள்ள போட்டோ அனைத்துமே அழகாய்இருந்தது. ஒரு பக்கத்தில்ஒரு அஞ்சல் அட்டை .....
அதில் முத்துப் போன்ற கையெழுத்து பச்சைநிறத்தில். ஆ..ஆ..

என் கண்ணையே என்னால் நம்பமுடியவில்லை. நான் பார்ப்பதெல்லாம் கனவா ? நனவா ?

என் கைப்பட எழுதிய மூன்று கடிதங்கள் அழகான போட்டோ போன்று மிக நேர்த்தியாக
ஒரு பக்கத்தில் இருந்தன.ஒன்று பல்கலைகழக நடனப்போட்டியில் அவள் பரிசு வாங்கியதைப் பாராட்டி எழுதியது. கடுக்கரை ஊட்டு விழாவின்போது நடந்த அவளது குழுவினரின் நடனத்தைப் பார்த்து நான் அடைந்த உணர்வுகளைக் குறிப்பிட்டு பாராட்டி எழுதிய கடிதம்
இரண்டாமாவது. மூன்றாவது "நாஞ்சில் நாட்டிய கலைமணி” பட்டத்தினைப் பெற்ற அந்த
விழாவில் என்னைப் பற்றியும் பேசியதைக்குறிப்பிட்டு பாராட்டிய எழுதிய கடிதம் ..... நான் என்றோ எழுதிய அந்த வரிகள் என் கண்களில் நீரை வரவழைத்து விட்டன.....தழும்பிய கன்ணீர் கன்னத்தில் வடியுமுன் யாருமில்லா இன்னொருஅறைக்கு நகர்ந்து விட்டேன்......என்னால் பேசக்கூட முடியவில்லை நான் அடைந்த இன்ப அதிர்ச்சியால்.
எழுதிய அந்த நாள் நெஞ்சினில் வந்ததால் நெருடிய மனதுடன் நெகிழ்ந்து போய் விடைபெற்று வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது....கண்ணீர்
மட்டும் விடைபெறாமல் தழும்பிக்கொண்டே இருந்தது......

 
Posted by Picasa