Friday, April 27, 2012

இந்துக் கல்லூரியின் இலச்சினைதனை வடிவமைத்த பெரியவருடன் ஒருநாள்.


Posted by Picasaதென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி வரலாறு 
எழுத முற்பட்டு,  முன்னாள் பேராசிரியர்களைச் சந்தித்தும்,ஆண்டு மலர்கள் பலவற்றைப் படித்துப் பார்த்தும் தகவல்கள் சேகரித்துக் கொண்டிருந்தேன்.
கழிந்த 49 வருடங்களாக, நான் 1963-இல் இந்துக்கல்லூரியில் புகுமுக
வகுப்பு பயின்றநாளில் இருந்தே எம் கல்லூரிச் சின்னத்தை 
வடிவமைத்தவர் யாராக இருக்கும் ? என்று அறிய முற்பட்டும் 
என்னால் அறிய முடியவில்லை. 

காலங்கள் என்னை எங்கெல்லாமோ இழுத்துச் சென்று 1973-இல்
 இந்துக் கல்லூரிக் கரையோரம் கொண்டு போட்டது. 
ஆசிரியனானேன். என் மனத்தின் ஒருமூலையில் நம் 
கல்லூரியின் சின்னத்தை வடிவமைத்தது யார் என யாருக்குமே தெரியவில்லையே என்ற மனக்குறை இருந்து கொண்டே
 இருந்தது.
  
சமீப காலத்தில் (9-4-21012) கல்லூரிப் பண் எழுதிய முன்னாள் 
துணைமுதல்வர் திரு.தே.வேலப்பன் அவர்களை அவர் வீட்டில்
 போய் சந்தித்தேன்.வரலாறு எழுதுவதற்குத் தேவையான 
செய்திகள் பல கிடைத்தன. ஆனால் என்னாசையான 
சின்னத்தினை வடிவமைத்தவர் யார் என்ற தகவல் மட்டும்
 கிட்டவில்லை.





ஒரு போட்டி அமைத்து, மாணவர் ஒருவர் வரைந்த ஓவியம்தான் அது எனத் தெரிந்து கொண்டேன்.
ஒருநாள் அட்டைகள் இல்லாதக் கல்லூரி 
ஆண்டு மலர் ஒன்று என் கைக்குக் கிடைத்தது. 
மிகுந்த அலட்சியத்துடன் ஒவ்வொரு பக்கத்தையும்
 புரட்டிப் பார்த்துக்
 கொண்டிருந்தேன். மாணவர்களின் போட்டோ 
இருந்த பக்கத்தினைப் பார்த்தபோது அழகாய் இருந்த  ஒரு
 மாணவரின் படம் கண்ணில் பட்டு என்னை ஈர்த்தது. பெயரைப் படித்தேன்.M.MOHAMMED KHAN, III B.Com; College Crest –Best Designer
எனக் கண்டேன்.
கண்டு பிடித்துவிட்டேன்…….என உரக்கக் கூறி அங்கும் இங்கும்
ஓடுவது போன்ற உணர்வு எனக்கு !
 யாரந்த முகம்மத் கான்?
காந்திநாதனிடம் கூறினேன்…….விலாசம் வேண்டுமே  எனக் கேட்டேன்.
 விலாசம் சொன்னார்……..
தேங்காய்ப்பட்டணம் தான் சொந்த ஊரா ? நம்ம காலேஜுல வேலை
 பார்த்த பேராசிரியர் ஹஸ்ஸன் கண்ணுவின் ஊர் 
தேங்காய்ப்பட்டணம் தானே.
அவரிடமே கேட்டு விடலாமே. அவரிடம் ,போனில் பேசினேன்.

“சார்! எனக்கு ஒரு தகவல் தெரியணும். நிச்சயம் நீங்க நினைச்சா
 முடியும். தேங்காப்பட்டணத்துல இருந்து முகம்மத்கான் என்ற 
பெயருடைய ஒருவர்
 1960-இல் படிக்கும்போது இந்துக்கல்லூரியின் சின்னத்தை 
வடிவமைத்து ‘College Crest-Best Designer’ என முதல் பரிசை
 வாங்கினார். விலாசத்தைப் பார்க்கும்போது ‘வியாபாரம்’
 என்றிருந்தது…… யாரிடமாவது கேட்டுஇரண்டு மூன்று
 தினங்களுக்குள்  விவரங்கள் சொல்லுங்களேன்” எனக்
 கேட்டேன்.
அவர் சொன்ன பதில் என்னை மிகவும் திக்கு முக்காட வைத்து 
விட்டது. கனவாய் இருக்குமோ! நான் என்னையே கிள்ளிப்
 பார்த்துக் கொண்டேன். கனவில்லை  நனவேதான்.
முகம்மத்கான் வேறு யாரோ இல்லை!.பேராசிரியர் ஹஸ்ஸன்
 கண்ணுவின் உடன்பிறந்த மூத்த அன்ணன். அவர் 
திருவனந்தபுரத்தில் பெரிய வியாபாரி. மணக்காட்டில் வசித்து 
வருகிறார்.
25-4-2012-இல் நான்,NSP சார் இருவரும் ஹஸ்ஸன் கண்ணு சாருடன்
 ஜெயராமன் கார் ஓட்ட மணக்காடுச் சென்றோம். காலை 9 மணிக்குப்
 பயணம் துவங்கி் 12.15-க்குப் பெண்கள் பள்ளி அருகே அமைந்துள்ள குடியிருப்பில் முடிவடைந்தது.
ஒரு சிறியச் சந்து. இருவர் சேர்ந்துப் போவது கூடச் சற்றுச் 


சிரமமாகவே இருக்கும். அதன் வழி உள்ளே சென்றோம்.
நாங்கள் வீட்டை நெருங்கினோம். வீட்டின் முன்னே வாசலில்
 பத்துக்கும் அதிகமான ஆண்களும் பெண்களும்முகமலர்ச்சியுடன் நின்றிருந்தார்கள். பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்று கொண்டிருந்த அந்த வீட்டுக் குழந்தைகள் மின்னொளி வீசும் காமிராக்களுடன் வாசலையே வரவேற்பு கீதமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
எங்களை மிக்க அன்புடன் அவர்கள் அனைவரும் வரவேற்ற
காட்சியைக் கண்ட நாங்கள் மிகவும் பிரமித்துப் போனோம், இப்படி ஒரு வரவேற்பைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

எல்லாம் ஹஸ்ஸன் கண்ணு அவர்களின் செயல்......

இந்துக்கல்லூரிச் சின்னத்தை வடிவமைத்த முகம்மத்கான் தன்
முதுமையின் கொடுமை தந்த நோயின் வலியால் வடிவிழந்து
ஒரு கட்டிலின் நடுவே அமர்ந்து இருந்தார். பாசமாக அவர்தம் கரம் பற்றி என்னெஸ்பிசார் கான் அவர்களின் பெருமைதனைப் பேசினார்.
முகம்மத்கானின் முகம் மலர்ந்தாலும் உணர்வுகள் உலுக்கியதால்
அவர்தம் கண்களின் நீர் கன்னங்களில் வழிந்தோடியது.உடல் 
குலுங்கிக் குலுங்கி அழுதார். ஓய்வுற்ற போதும் தம்மை மகிழ்விக்க தேனமுதச்
 சொற்கள் வீடு தேடிவந்து காதுகளில் விழுகிறதே.!
தமக்கே மறந்து போன ஒரு பெருமைமிகுச் செயல் 52 வருடம் 
கடந்து தன் பிள்ளைச் செல்வங்கள் எல்லோருக்கும் தெரிந்து, 
அதனால் அவர்கள் அடையும் மகிழ்ச்சியைத் தம் கண்கள் காண்கிறதே!
நன்றி…..நன்றி….. நன்றி……அவரது கண்களும் முகமும் எங்களிடம் 
இதைத்தான் கூறிக் கொண்டே இருந்தன.

என்னெஸ்பி சார் முகம்மத்கானின் உருவப் படம் இருந்த கல்லூரி
ஆண்டு மலரை அவரிடம் காட்டிச் சொன்னது அனைவரையும் உருக்கி
விட்டது. அவர் சொன்னது :- “ ஒரு மாணவர் கல்லூரிச் சின்னத்தை வடிவமைக்க அந்த மாணவரின் குரு தே.வேலப்பன் அவர்களே அதனை 
வர்ணித்து கவிதையெழுத யாருக்கு கிட்டும் இந்த பாக்கியம்….பெருமை”


நெகிழ்வாய் போன கான் அவர்கள் தமது தலைஅசைத்து சார் 
சொன்னதை ஆமோதித்தார்.
வடிவமைத்த சின்னத்தில் தாம் ஆங்கிலத்தில் எழுதியதையும் ,
’ஒழுக்கம் விழுப்பம் தரும்’ என டாக்டர் எஸ்.எஸ் மாற்றியதையும்
 அவர் கூற அது தெளிவாகவே எங்கள் காதினில் விழுந்தது.
மறக்காமல் தாம் வடிவமைத்த இன்னொரு இலச்சினை ‘MOM’ என்ற
அவரது குடும்பச் சின்னத்தை ரப்பர் ஸ்டாம்பில் உருவாக்கி 
வைத்திருந்ததை எங்களிடம் காட்டி மகிழ்ந்தார்.  அவ்வாறு அவர் எங்களிடம் 
காட்டி மகிழ்ந்தது அந்த படைப்பாற்றல் பின்னாட்களிலும் தம்மிடம் 
வற்றாமல் இருந்தது என்பதை நிரூபிக்கும் வண்ணம் இருந்தது.

கண்,காது,தலை,மனம் இன்னமும் கான் அவர்களுடன் 
உறவாகவே இருக்கின்றன.

எங்களுக்காகவே தயாரித்த உணவை மிகவும் பாசமுடன்
பரிமாறினார்கள். அவர்களில் மூத்தவர் ஒருவர் எங்களிடம் 
எங்களது வருகையைப் பெருமையாய்ச் சொல்லி ,” எங்களுக்கு இன்று 
ஒரு பெரு நாள்”எனக் கூறினார்.
இன்னொருவர் சொன்னார் ”எங்கள் வீட்டில் இன்று முப்பெரும் விழா..
இரண்டு சிறுவர்களில் ஒருவனுக்கு பிறந்தநாள். முகம்மத்கான் என்ற
 பெயர் கொண்ட மற்றொரு சிறுவனுக்கு மதச் சம்பிரதாயப்படி நடந்த
 விழா முடிந்த ஏழாம் நாள் விழா, நீங்கள் இங்கே வந்ததும் எங்களுக்கு
 ஒரு விழாதான்…”
செவிக்கும் கூடுதலாகவே உணவு கிடைத்தது. வயிறும் நிறைந்து,
மனமும் நிறைந்து வழிந்தது.
அந்த வீட்டுச் சின்னஞ்சிறு பிள்ளைகளுடன் என்னெஸ்பிசாரும் 
பிள்ளையாய் மாறி அறிவு விளையாட்டு விளையாடியதைக் கண்ட
 அந்த வீட்டுப் 
பெரியவர்கள் எல்லோருமே அதிகமாகவே ரசித்தார்கள்.
குழந்தைகளின் கைவண்ணம் ,குறும்பு மணக்கும் நகைத்திறம்,புதிர் 
விடுவிக்கும் ஆர்வம் இவை அனைத்தும் அந்த இல்லத்தில் அந்த
 நேரத்தில் குற்றால அருவியாய்க் குதூகலத்தைக் கொட்டியது. 
மொழியும் வயதும் சமயமும் கடந்த ஓர் இனிமையில் நாங்கள்
 திளைத்தோம். அங்கிருந்த அனைவர் முகத்திலும் அகத்திலும் புத்துணர்ச்சியின் புதுப்பொலிவு !
நேரம் நெருங்கியது. தேநீரும் வந்தது, அதனையும் பருகி விட்டு 
விடைபெறத் தயாரானோம்.
மீண்டும் ஒரு முறை கான் அவர்கள் இருந்த அறைக்குள் சென்று
அவர் முன்னிலையில் பிள்ளைகளுடன் கலந்துறவாடி விட்டு 
அவரது இதமான இதயம் மலர்ந்தது கண்டு தளிர் மனமாகி
அவரிடம் ’போய் வருகிறோம்’ எனக்கூறிவிட்டு வெளியே 
வந்தோம்.
அந்த வீட்டில் இருந்த அத்தனை பேரும் வாசல் வரை வந்து 
வழி அனுப்ப நாங்கள் சந்து வழியே கார் நிற்கும் இடம் நோக்கி
நகர்ந்தோம். கார் வரை பெரியவர்கள் ஐந்து பேருடன் பிள்ளைகள்
அனைவரும் எங்கள் கூடவே வந்து எங்களை அனுப்பி
வைத்தார்கள்.
காரில் திரும்பி வரும் போது ஹஸ்ஸன் கண்ணு சாரிடம் நான் கேட்டேன்….
”நடந்ததெல்லாம் கனவா…… நனவா……”
அன்பாய்ச் சிரித்தார் அவர்.அது மிக அழகாக இருந்தது.
’அழகே! உன் மறுபெயர் ஹஸ்ஸன் தானே !’

3 comments:

  1. lot of information for next gen
    A model man for the new generation with great affection and affinity with the institutions

    ReplyDelete
  2. fine and very happy to see the information and you interest

    ReplyDelete
  3. This is wonderful and heart warming !!!
    Great to read about people from my hometown. I have seen elder mohamed khan in functions but have never spoken to him. Prof hasan khan is well known to me.

    ReplyDelete