Sunday, May 20, 2012

என் பேரனுக்குப் பிடித்த ஒரு சிற்றருவி




தாத்தா…… தாத்தா……. வாஞ்சையோடு என்னருகே வந்து எனை அழைத்த என் பேரன் என்னிடம் திற்பரப்புக்குப் போகணும்….Falls-இல் குளிக்கணும் என்றான்.
சற்று ஆச்சரியத்துடன் நான்கே வயதான  இவனுக்கு எப்படி திற்பரப்புப் பற்றித் தெரியும் ? என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
அவனிடமே கேட்டேன். பதில் அவனது ஆச்சியிடம் இருந்து வந்தது. என் பேரன் ஆச்சியிடம் ,” நீ சொல்லாதே….  நாந்தான் சொல்வேன் “ என்று என்னிடம் சொல்ல ஆரம்பித்தான்.
”என்ன பெரியப்பா கூட்டிக்கிட்டுப் போனா……..எல்லாரும் குளிச்சா…….. நானும் குளிச்சேன் ………. நீ என்ன கூட்டிட்டுப் போ” என்றான்.
நாளைக்குப் போகலாம் என்று சொன்னேன். ஆனால் போக வில்லை. நாட்கள் தான் போய்க்கொண்டிருந்ததே தவிர திற்பரப்புக்குப் போய் குளிப்பது எனபது நடக்கவில்லை.

என்னை சற்றும் இருக்க விடாமல் என் பேரன் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தான். அவனது ஆச்சி… அதான் என் மனைவி என்னை நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள்.
ஒருவழியாக மேய் மாதம் 15-ஆம் தேதி செவ்வாய்கிழமை கூட்டம் அதிகம் இருக்காது என்ற எண்ணத்தில் அன்று காலையில் 7 மணியளவில் நான் என் பேரனுடன் புறப்பட்டுப் போனேன்.
நான் மாத்தூர் தொட்டிப் பாலத்தையும் பார்த்துவிட்டு வரலாமே…..அதனை எந்த ஆண்டில் யாரால் கல்போட்டுத் தொடங்கப்பட்டது என்ற தகவல்களையெல்லாம் அறிந்து கொள்ளலாமே என்ற ஆசையுடன் முதலில் மாத்தூர் தொட்டிப் பாலத்துக்குப் பயணமானோம்.
பேரனுக்காக இட்லியும் எலுமிச்சை பழச் சாதமும் தந்திருந்தாலும் நாங்கள்  காலையில் பூரி சாப்பிட ஆசைப்பட்டு ஹோட்டலில் போய் காலை உணவை முடித்துவிட்டுத் தான் போனோம்.
சாலையின் இரு பக்கங்களிலும் இயற்கை அன்னை அள்ளி வழங்கிய அழகான பசுமை நிறைந்த வாழை மரங்களும் தென்னை மரங்களும் நிறைந்து தொலை தூரத்து மலையும் மலையினை உரசிக்கொண்டு வேகமாகச் செல்லும் வெண்மேகங்களும் கருமேகங்களும் கண்களுக்குக் குழுமை தந்து கொண்டிருக்கும் காட்சியை ரசித்துக் கொண்டே போனோம். தொட்டிப்பாலம் வந்தது.
காலையிலும் கூட மூன்று வேன்களும் ஐந்து கார்களும் தான் எங்களை வரவேற்றது.
சாலையின் ஓரத்தில் அன்னாசிப் பழங்கள் வரிசையாக அடுக்கி

வைக்கப்பட்டிருந்த விதம் என்னைக் கவர்ந்ததால் அவைகளை என் கேமராவில் வாங்கி வைத்துக் கொண்டேன்.
நுழையுமுன் ஒரு ஆளுக்கு இரண்டு ருபாய் கொடுத்து அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும். வாங்கிய பின் உள்ளே நுழைந்தோம்…. கேமராவுக்கு 5 ருபாய் டிக்கட்…..அதனையும் சற்று எரிச்சலுடன் கொடுத்தேன்….. எங்கள் பின்னால் வந்தவர்களில் ஒருவன் அவர்களுக்கிடையே பேசி கொண்டிருந்தது என் காதுகளில் விழுந்தது…… “ மொபைல் செல் போனுக்கு பைசா கிடையாது….. இப்பொழுதெல்லாம் எல்லா போனிலும் கேமரா வசதி இருக்கிறதே….”

தொட்டிப் பாலம்….. அது ஒரு அதிசயப் பாலம்…..ஆசியாவிலேயே உயரம் (104அடி)கூடிய பாலம்…. நீளமும் 1240 அடி. இரண்டு இடங்களை இணைக்கும் இந்தப் பாலத்தில் சானல் தண்ணீர் தெற்கு வடக்காக ஓடுகிறது. ஒரு இடத்தில் இருந்து மறு அற்றத்தில் இருக்கும் இடத்திற்குப் போவதற்காக நடை மேடையும் அமைக்கப் பட்டுள்ளது.

பாலத்தின் அடியில் பரளியாறு கிழக்கு மேற்காக பாய்ந்து செல்கிறது. விவசாயம் விருத்தி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் 1963-1969-இல் கட்டப்பட்டுள்ள பாலம் அந்தப் பகுதி பஞ்சாயத்துக்கும் வருமானம் ஈட்டித் தந்துகொண்டிருக்கிறது. சுற்றுலா வரும் மக்களால் சிறு வியாபரிகளும் பலனடைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பாலத்தில் நின்று சுற்றிலும் நிற்கும் தென்னை மரங்களின் உச்சியையும் பார்க்க முடிந்தது. கீழ்பக்கம் உள்ள ஆற்றின் குறுக்காகவும் சாலை இருக்கிறது. அந்தச் சாலையில் மனிதர்கள் நடந்து செல்வதைப் பார்க்கும் போதும் பொம்மைகள் ஊர்ந்து செல்வது போன்று இருந்தது.
நான் ரசித்துக் கொண்டிருக்கும் வேளையில் என் பேரன் ஆசைப்பட்ட இடத்துக்கு வராமல் வேறொரு இடத்துக்கு வந்து நின்று கொண்டிருக்கிறோமே என்ற என் நினைப்பு அங்கிருந்து உடன் தானே கிளம்ப வைத்தது.
வெளியே செல்லும் வாசலின் அருகாமையில் இருக்கும் நிழற்கூடையில் காத்திருந்த எனது பேரன் சற்றும் சலிப்படையாமல் விளையாடிக் கொண்டிருந்தான். நானும் சற்று நேரம் அங்கிருக்க அனுமதித்தான். 


நான் தேடிப் பார்த்தும் கிடைக்காத தகவல் பற்றி அறிந்திட ,அந்தப் பக்கம் நின்று கொண்டிருந்த ஒரு ஆளிடம் கேட்டேன் “ யாரால் இந்த் திட்டம் வந்தது? யார் கல் போட்டது? யார் திறந்து வைத்து? கல் எங்கு இருக்கிறது? காணவில்லையே !
ஊரில் உள்ளக் கோவில்களைக் கட்டியவன் யார்? யாருக்குமே தெரியாது. சொற்பச் செலவில் ஏதோ ஒன்றைச் செய்துவிட்டு பெயரைப் பெரிதாய்ப் போடுவது போன்றே இருந்தது அந்தத் தொட்டிப்பாலத்தில் உள்ள தகவல் கல்…. யாரிடம் போய் முறையிடுவது? முறையிட்டாலும் ஒன்றும் ஆகப்போவதும் இல்லை. காமராஜர் கொண்டு வந்த திட்டம் என்றெல்லாம் அங்கிருந்தவர் சொன்னார்…..ஆனால் அவர் பெயர் எங்கும் காணப்படவில்லை. நாட்டையே மீட்டுத் தந்த பொக்கைவாய் மனித தெய்வத்தை மறந்தவர்கள் தானே நாம்.   இனிமேல் எல்லாமே இப்படித்தான் இருக்கும்.
திற்பரப்புக்கு வந்தோம். கூட்டம் எதிர் பார்த்ததை விட அதிகமாக இருந்தது. காருக்கு 30 ருபாய்.  உள்ளே போவதற்கு 4 ருபாய். என் பேரனுக்கு வயது கேட்டான் 4 வயதென்றேன், அவனுக்கும் டிக்கட் வாங்கினேன். கேமராவுக்கு ருபாய் கேட்டான். கொடுக்கவில்லை. 12 வயதுக்கும் கீழே உள்ள சிறுவர்கள் குளிக்கும் நீச்சல்குளத்தில் குளிக்க கட்டணம் உண்டு.
பாயும் அருவியில் குளிக்க விரும்பிய என் பேரனும் நானும் ஜெயராமனும் அங்கே கொஞ்ச நேரம் குளித்தோம்.  தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டும் சோப்புப் போட்டுக் குளித்துக் கொண்டும் இருப்பதை பார்த்த எனக்கு எரிச்சலாக இருந்தது. தடை செய்ய வேண்டிய இந்தச் செயல்களை தடைச் செய்யலாமே. செல் போனில் பலர் நியாயமற்ற முறையில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.  ஆண்களும் பெண்களும் குளிக்குமிடத்தில் படம் எடுப்பதை அனுமதிக்கலாமா ?
வெளியே வந்தோம். சாலையின் அருகாமையில் இருந்த ஒரு அறிவிப்புப் பலகை எங்களைப் பார்த்துச் சிரித்தது. 
அதில் இருந்த வரிகள் இதோ:--
5 வயதுக்குக் குறைந்தவர்களுக்குக் கட்டணம் கிடையாது.




                     

No comments:

Post a Comment