Friday, October 12, 2012

எழுத்துக்களும் என் மனதினுள்ளே உள்ள நன்றியும்


    முகநூல் என்னை மாற்றியது. ஒரு எழுத்தாளனாக மாற்றியது.
     என் எழுத்துக்கள் என் மன அமைதிக்காகவும், ஆறு போல் சுறுசுறுப்புடன் இருக்கவும் எஞ்சி இருக்கும் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்களில் மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் வேலை கொடுப்பதற்காகவும் எழுதினேன்.
    என் மூத்த மகன் பாராட்டினான்.என் எழுத்துப்பணி முகநூலில் பரந்தது. பலரது நட்பு கிடைத்தது. கோவை ஜீவானந்தத்தின் நட்பு என்னை இன்னொரு தளத்திற்கு அழைத்துச் சென்றது. அதுதான்  BLOG.          
         அதில் நான் எழுத என் மகனின் நணபர்கள் எனைப் பாராட்டினர். எழுத்து       என்னை மாற்றியது.

    ஆசை என்னை வரலாற்று ஆசிரியனாக மாற்றிற்று. தமிழ் எனக்கும் உதவிற்று. வரலாறு எழுதலானேன்............
    மாணவன் நானும் மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டே …..ஆம் நான் அதே கல்லூரியில் ஆசிரியராய் - கணித ஆசிரியனாய்……மாறினேன். . மாற்றம் என்னை மறுபடியும் வழக்கம்போல் தழுவியது. இந்த மாற்றம் ஓய்வுற்ற போதும் என்னை வளாகம் வரவேற்றதால் கண்ட மாற்றம். நானும் மாறித்தான் போனேன். இன்று இயக்குனர் - இந்துக் கல்லூரிச் சங்க இயக்குனர். இது எனக்கு கல்லூரி தந்த புது முகவரி.
    மாற்றம் என்னை மெருகூட்டிற்று. மனிதனாக்கியது. என் மனதில்  ஒன்றுக்கு - கல்லூரிபால் கொண்ட காதலில் மாற்றம் இல்லை…இல்லவே இல்லை….. ”மாற்றம்” மாறாதது போல் என் தாய் – கல்லூரிபால் கொண்டபாசமும் நேசமும் மாறாதது. அது என்னில் என்றும் நிரந்தரமே...... கல்லூரி வரலாறு எழுதும் காலமும் கனிந்தது.
    வரலாறும் பூவாய், காயாய் , கனியாகும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
    கால மாற்றத்தால் ஏற்படும் மாறுதல்களை ஒவ்வொரு ஜீவராசிகளும் ஏற்றுக் கொண்டு தம் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்கின்றன. அவ்வாறு ஏற்காத ஜீவன்கள் அருகிப் போவதற்குக் காரணம் எது எனத் தெரியாமல் நாமே ஒரு புதுக் காரணத்தைச் சொல்லிப் பழக்கப்பட்டு விட்டோம். மாற்றத்தை ஏற்றுக் கொண்டு ,தடைகள் வந்தாலும் தளராத மனம் கொண்ட பல மன உறுதி கொண்ட மனிதர்கள் இந்துக்கல்லூரிக்குத் தலைவர்களாகவும், முதல்வர்களாகவும்  வந்ததால் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி பல மாற்றங்களை சந்தித்து இன்று ஒரு மிகப்பெரிய கல்லூரியாகத் திகழ்கிறது.
    அறுபது ஆண்டுகள் உருண்டோடி விட்டன…….. எத்தனை எத்தனை மாற்றங்கள்….. ஆட்சி மாற்றம்……..அதனால் தலைவர்கள் மாற்றம்…… காலத்தின் கட்டாயத்தால் ஏற்பட்ட கல்லூரி முதல்வர்கள் மாற்றம்...... ஆசிரியர்கள் மாற்றம்..... இந்துக் கல்லூரியின் ஆரம்பத்தோற்றம் இன்று இல்லை. அதுவும் மாறித்தான் போயிற்று. அது ரம்மியமான தோற்றப் பொலிவை தந்து கொண்டிருக்கிறது. 
    விநாயகருக்கோர் ஆலயம், சுய நிதி வகுப்புகளை சரியான சமயத்தில் ஆரம்பித்தது,M.C.A, M.Sc எனவும் வானுயர் கட்டிடங்கள், எனவும் கல்லூரி கண்ட மாற்றம் பொலிவாகவே இருந்தது.
     இவ்வாறு வளர்ந்த வரலாறு நேற்றும் இன்றும் நாளையும் பயின்ற, பயில்கிற, பயிலப்போகின்ற மாணவர்கள், அறிய வேண்டும். 
    என்னைச் செதுக்கிய உருவாக்கிய உதிரம் கொடுத்த இந்த உயரத்தினில் வைத்து அழகு பார்த்த கல்லூரிக்கு - இந்தப் பெரும் கல்லூரிக்கு நன்றியாக ஒன்று செய்ய வேண்டும் – அச்செயல் நாளும் பேசப்படல் வேண்டும் – அது நாளையும் தொடர் செயலாக இருத்தல் வேண்டும். அதனால் என் சிந்தனையில் வந்ததன் பலனே இம்முயற்சி.
    தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரிக்கு ஒரு வரலாறு நூல் தேவை. இதனை உணர்ந்த நான் அதனை எழுத முடிவெடுத்தேன். தேவைக்கு அதிகமாகவே கவல்கள் சேகரித்த பின் என் தமிழில் எழுத முற்பட்டேன்.  அறிவு என்னை எச்சரித்தது. என் தமிழ் அறிவு உதவுமா ? எழுதினேன். நணபர்கள் சிலர் நான் வடித்த தமிழுக்கு மெருகூட்டினர்.  அவர்களுக்கு நன்றி கூறுவதென்பது எனக்கு நானே நன்றி சொல்வது போல்தான் இருக்கும்.
     வரலாறு எழுத முற்பட்டபோது அதனை வரவேற்று ஊக்கப்படுத்தியும் பல முக்கியமான தகவல்களைத் தந்தும்  பெரும் ஆதரவு தந்தவர் எங்கள் கல்லூரித் தலைவர் திரு. ஆறுமுகம்பிள்ளை.
    திருப்பணிக்கு உதவியவர்கள் சிலர். அவர்களில் நிறுவனச் செயலர் மகன் திரு.பி.வள்ளிநாயகம் பிள்ளை, முன்னாள் முதல்வர் திரு தே.வேலப்பன், முன்னாள் துணை முதல்வர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம். தொடக்க கால ஆண்டுமலர்கள்,கையேடுகள் பல தந்து உதவிய முன்னாள் மலையாளத்துறைத் தலைவர் திரு உண்ணிகிருஷ்ணன் நாயரின் குடும்பத்தினர் முக்கியமானவர்கள். கல்லூரி முதல்வர், பணியாளர்கள் சிலர்,என் ஆசிரிய நண்பர்கள். அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றியுடன்.
    ஆறு மாத கால உழைப்பு என்னை பெருமிதம் கொள்ளச் செய்கிறது.
    ஒருவன் ஒரு முறைதான் நீரோடும் ஆற்றைக் கடக்க முடியுமாம். கிரேக்க ஞானி சொன்னதாக பேராசிரியர் ஒருவர் சொன்னார்.
    என்னால் ஆற்றை ஒரு முறைதானே கடக்க - வரலாற்றை  எழுத- முடியும்….. தினமும் மாறும் வரலாற்றை இன்னொருவர் தான் எழுத முற்படல் வேண்டும்….. வரலாறு படைக்க வேண்டும்.  இதுவே என் பிரார்த்தனை
    மாற்றம் ஒன்றுதானே மாறாதது. மாற்றம் நிகழட்டும். “மாற்றம்” இயக்கம் இருந்தால் மட்டுமே நிலைபெறும்.... இயக்கம் தொடரட்டும்.....மாற்றம் அழகு. அது ஒன்றே அழகு. நமது கல்லூரியிலும்….. கங்கை கரையோரம் ஒரு காசி சர்வகலாசாலை இருப்பதுபோல் கன்னியாகுமரிக் கடற்கரையாம் நாகர்கோவிலிலும் ஒரு பல்கலைக் கழகமாய் நம் இந்துக் கல்லூரியும் மாறட்டுமே……….. மாறும் தேசிக விநாயகனின் அருளால். எல்லோரும் பிரார்த்திப்போம், முயல்வோம்……..முயற்சி திருவினையாக்கும்……..

     வரலாறு எழுத்துப்பணியில் எனை ஊக்குவித்த ஒருவர் பாராட்டப்படல் வேண்டும் என்பது என் ஆசை. நடு நிசியில் கூட எழுந்து தேநீர் அல்லது காப்பி சூடாய் தந்து உதபுபவர். நான் படித்துக் காட்ட,  என் வரிகளில் தவறிருந்தால் சுட்டிக் காட்டியதும் உண்டு. அவர் என் மனைவியே தான். அவருக்கும் நன்றி கூறுவதுதானே முறையானது. 
     

No comments:

Post a Comment