Sunday, November 25, 2012

நாங்கள் சென்ற இரண்டாவது காசி யாத்திரை....2....

26-10-2012 மாலை கன்னியாகுமரி சென்னை விரைவு ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போதே அடுத்த நாள் பகல் பொழுதை எப்படிக் கழிப்பது ! வாரணாசி ரயில் Central Station -இல் இருந்து மாலை 5.30 க்குதான் புறப்படும்.
எங்களுடன் வந்தவர்களில் நான்கு பேர் தாம்பரத்தில் இறங்கிவிடுவதாகச் சொன்னார்கள். அண்ணா நகர் அண்ணனின் வீட்டுக்கு நாங்கள் போகலாம் என திட்டமிட்டோம்.

27-ஆம் தேதி காலை ரயில் தாம்பரத்தில்  நின்றது. நால்வர் இறங்கினர்.நாங்கள் மூன்று பேர் எக்மோரில் இறங்கும் போது  எங்களை அழைத்துக் கொண்டு போக எனது அண்ணனின் மகன் வந்து நின்றதைப் பார்த்தேன்.நாங்கள் அவருடன் அவர்கள் வீட்டுக்குச் சென்றோம். செல்வதற்கு முன்னால் சொல்லவேண்டிய நபரிடம் தகவல் சொன்னோம். மாலை நான்கு  மணிக்குள் மைய ரயில் நிலையத்துக்கு வந்து சேரும்படி சொன்னார்.

அண்ணா நகர் வீடு வந்து சேர்ந்தோம். குளியல் , உட்பட எல்லாமே முடிந்தது.
அண்ணன் வந்து எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

82 வயதான அவர் எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“உங்கள் எல்லோரையும் யார் அழைத்துக்கொண்டு போகிறார் ?”

எங்களை அழைத்துச் செல்பவர் ஒரு இளம் துறவி. அவர் பெயர் முருகதாஸ். (சுரதவனம் முருகதாஸ்). அவரை எல்லோரும் சுவாமி என்றே அழைப்பதைக் கண்டேன். நானும் அவரை அவ்வாற அழைக்க முற்பட்டேன். அப்போ அவர் சொன்னார்.“ சார், உங்களுக்கு எப்போதுமே நான் முருகதாஸ் தான். நீங்கோ முருகதாஸ் என்றே கூப்பிடுங்கோ.”

முருகதாஸ் தெ.தி. இந்துக் கல்லூரி மாணவர். படித்துக் கொண்டிருக்கும் போதே ஆன்மீக நாட்டம் காரணமாகவும் தமிழ் போதித்த ஆசிரியர் இந்து சாமியார்களை வசைபாடி வகுப்பில் பேசியதைத் தாங்க முடியாமல் மனம் நொந்ததன் காரணமாகவும் படிப்பதை நிறித்தி விட்டார். அந்த ஆசிரியருக்கும் இதனைத் தெளிவாக எழுதி கடிதம் ஒன்றையும் அனுப்பினார்.

கடிதத்தைப் பார்த்த அந்த தமிழ் ஆசிரியர் அவர் இருக்கும் இடம் போய், தான் தவறு செய்ததற்கு வருந்துகிறேன் என்றும் கல்லூரிக்கு வரும் படியும் வேண்டினார்.ஆனால் அதன் பிறகு படிக்க கல்லூரிக்குப் போகவில்லை. ஆனால் இன்று அவர் ஆன்மீகம் பற்றி அதிகம் அறிந்து வைத்திருக்கிறார். சம்ஸ்கிருதம் படித்திருக்கிறார்.தெய்வப் பாடல்களைப் பாடுவதும் கேட்பவர்களை பாட வைக்கவும் செய்கிறார். அவர்  குருவாக வணங்குவது திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமார் சுவாமி.

 பகவத் கீதை வகுப்பு நடத்துகிறார். அந்த வகுப்பில் தமிழ் ஆசிரியர்கள், ஆங்கிலப் பேராசிரியர் மாணவர் போல் அமர்ந்து கேட்கிறார்கள்.
ஆறுமாதத்திற்கும் அதிகமாக காசியில் தங்கி இருந்து தம்மை சுய பரிட்சை
செய்து பார்த்து இன்று ஒரு துறவியாக வாழ்ந்து வருகிறார்.

முருகதாஸ் ரயிலில் வரும்பொழுது தனிதனியாக ஒவ்வொருவரிடமும் போய் அவர்கள் நலம் விசாரித்து ,“  தேவைப்பட்டால் என்னைத் தொடர்பு கொள்ள, என்னுடைய mobile  எண் இதோ இந்தக் கார்டில் இருக்கிறது”, என்று சொல்லி கழுத்தில் மாலையாய் அணிந்து கொள்ள ஒரு அடையாள அட்டையைத் தந்தார். செந்நிறம் கொண்ட அந்த (ribbon) மாலை அழகாக இருந்தது.
ரயிலில் இரவு உணவு கிடைத்ததா .... நன்றாக இருந்ததா.... என்றெல்லாம் கேட்டதும்    ரயில் சாப்பாடு திருப்தியாக இருக்கும் என எப்போழுதும் எதிர்பார்க்க முடியாது.... எனச்  சொன்னது ..... என் மனதுக்குப் பிடித்தது.
அண்ணனிடம் சொல்லி முடித்தேன்.
அவர் ,” “ Banaras Hindu University -க்குப் போவீங்களா என்று கேட்டார்.
 மூன்று நாட்களில் ஒரு நாள் காசியைச் சுற்றியுள்ள இடத்திற்கு அதாவது பிர்லா மந்திர்,பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம்,காசிராஜா அரண்மனை, காலபைரவர் கோவில்,சாரநாத்....போவோம் என்றேன்.

எங்கே தங்குவீங்க !

காசி விஸ்வநாதர் கோவிலின் பக்கத்தில் உள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்குவோம். அங்கேயே உணவும் கிடைக்கும்.

மாலைமணி  மூன்று . சென்னை செல்லும் போதெல்லாம் நான் வழக்கமாகச் செல்லும் கேசவனின் கார் வந்தது. அதில் நாங்கள் மூணு பேரும் central station-க்குப் போனோம்.

காலையில் பிரிந்து சென்ற அனைவரும் மாலையில் செண்ட்ரல்-இல் கூடினோம்.எங்களுடன் வந்த முருகனின் அண்ணன் கோலப்பன், குமரேசனின் தம்பி மகன் பாரதி,சிவதாணுபிள்ளை அண்ணாச்சியின் மைத்துனர் வழி அனுப்ப வந்தார்கள். எங்கள் Luggage களை அவர்களே தூக்கிக் கொண்டு வந்து பத்துக்கும் அதிகமாக தண்ணீர் பாட்டிலும் வாங்கித் தந்தார்கள். தேநீரும் அவர்கள் வங்கித் தந்து குடித்தோம். நல்ல தண்ணியும் சாப்பாடும் இனி அடுத்த வெள்ளிக்கிழமைதான் கிடைக்கும் என்று எங்களில் ஒருவர் சொன்னது காதில் விழுந்தது. அவ்வாறு அவர்கள் வந்தது இன்றும் இதனை எழுதி கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் மகிழ்ச்சியைத் தருகிறது.

ரயில் வந்தது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை,படுக்கை களில்  அமர்ந்து கொண்டோம். மிகச் சரியான நேரத்தில் ரயில் நகர்ந்தது. ரயில் நகர  நகர நடைமேடையில் நின்று கையசைத்தவர்கள்  கொஞ்ச தூரம் எங்கள் திசையிலேயே நகர்ந்து வந்ததும் கண்ணுக்குத் தெரிந்தது.

காசியை நோக்கிப் பயண ரயில் அதனுடைய சத்தத்தை சங்கீதம் போல் இசைத்துக் கொண்டே சென்றது.



1 comment:

  1. சுவையாகச் செல்கிறது தங்கள் பயணம்... எங்களுக்கும் படிப்பதில் கிடைக்கிறது சுகம்!

    ReplyDelete