Tuesday, December 24, 2013

தெய்வமே குடிகொள்ள விரும்பும் ஒரு அன்புஇல்லம்

ஒரு வியாழன் அதிகாலையில் எனது மொபைல் தனது பணியை தவறாமல் செய்து எனை உறக்கத்தில் இருந்து எழச்செய்தது.....

காலையில் மார்த்தாண்டம் பக்கம் உள்ள அதங்கோடு எனும் ஊருக்குப் போகவேண்டும்... எட்டரை மணிக்கு மேல்தான்....அதனால் காலை நடையினை ரத்து செய்திருந்தேன்...

அதனைத் தூங்கப் போகுமுன் மொபைலிடம் நான் சொல்லியிருக்கணும்... சொல்லல......

மொபைலின் வாயை மூடினேன்... இல்லையெனில் நான் எழுந்து அதனைத் தொடுவது வரை ரெண்டு நிமிடத்திற்கொரு முறை அலறும்.....

மறுபடியும் கண் மூடி தூங்க எத்தனித்தேன்......

மறுபடியும் என் காதருகே சத்தம்... ”எழந்திங்கோ.... ஆறுமணிக்கு ராமு வந்துருவான்.... வெள்ளமடத்துக்கு துட்டிக்குப் போகணும்.....” இது என் அவள்.

நான் வரல்ல.... நீப்......போ.....

”வாருங்கோ... மாத்தம்மாச்சிக்கு அக்காள்லா அது...... (அவள் இறந்து நாலு நாளாச்சு.....) போகல்லண்ணா அவ என்னமா நினச்சுருவா......வாங்க...... “

சொல்லிவிட்டுப் போய்விட்டாள்....

பாதிமனசோடு எழுந்தேன்.....

அந்த வீட்டுக்குப் போனோம்.....அது ஒரு பழைய வீடு... அதன் வாசல் அருகே மொட்டைத் தலையோடு நின்றிருந்தார் ஒருவர்... இறந்துபோன ஆச்சியின் நாலு மகன்களில் ஒருவர்

சிரிக்காமல் ..... ஆனால் வாஞ்சையோடு வா என்பதுபோல் தலையசைத்து அழைத்தார்.....

உள்ளே போக நினைத்து வாசல் பக்கம் போனேன். அந்த வீட்டு முற்றத்தில் உறவுக்கார பெண்கள் அனைவரும் மாரடித்துக்கொண்டு  அம்மாடி-தாயர  எனப் பல முறை முணு முணுத்தபடி சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

 அச்சமயம் உள்ளே ஆண்கள் போலாமா..... தெரியாது... நான் போகமல் தெருவில் உள்ள படிப்பரைல ....கருங்கல் பதித்த இடம்....அதில் இருந்தேன்.

வீடு புதுப்பிக்காமல் பழமை மாறாமல் இருந்ததைக் கண்டு ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு சுத்துக்கட்டு வீடு. முற்றம் ...அதன் தெற்கிலும் மேற்கிலும் வாசல்கள்.... வடக்குப் பக்கம் ஜன்னல்.... ஓட்டுவீடு

அதன்பிறகு ஒருவர் எனை அழைக்க நான் உள்ளே போய் இருந்தேன்.....

எனக்குத் தெரிந்த ஒரு மொட்டை போட்ட இன்னொரு மகன் என் பக்கம் வந்தமர்ந்தார்...

அவர், “ அம்மை படுத்து ரொம்பநாளாயிற்று...வயசும் 90-க்கும் மேல.... கொஞ்சம் கஷ்டப்பட்டுற்றா.....மகளுக்கு நிச்சயதாம்பூலம்  இரண்டு நாட்களுக்கு முன்தான் நடந்தது. மே மாதம் கல்யாணம்...”.

என்னிடம் பேசியவரின் பெயர் சண்முகம்....

சண்முகத்தின் தந்தை  மறைந்து வருடங்கள் பல கடந்து விட்டன.....அவருக்கு நான்கு ஆண்...ஏழு பெண் பிள்ளைகள்..... தனதும் தன் மனைவியின் மறைவுக்குப் பின்,இருவரது இறுதிச் சடங்குகள் நடந்து முடிவது வரை வீட்டை ஒன்றும் செய்யக்கூடாது என்று சொன்ன அப்பாவின் வாக்கினை தெய்வ வாக்காகப் போற்றிப் பாதுகாப்பாய்  மாற்றம் எதுவும் செய்யாமல் அப்படியே வைத்திருக்கின்றனர்.. இது அவரது  உறவினர் பாபு என்னிடம் சொன்னது......
அப்பாவையும் அம்மாவையும் மிகப் பாதுகாத்த பல விசயங்களை அவர் சொல்லச் சொல்ல எனக்கு அந்த சண்முகம் மீதும் அவர் மனைவி மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது...

சண்முகம் தான் அந்த வீட்டில் இளையவர். அவர்தான் அந்த வீட்டின் முதுகெலும்பாய் இருந்தார்.

சண்முகத்துக்கு ஒரே ஒரு பிள்ளை...அது பெண்.... பீஇ படித்து வேலை பாக்குறா.....அவளுக்கும் கல்யாணம் நிச்சயாமாயிருக்கு.... ஆனால் அவளைவிட அதிகம் வயதான தனது அண்ணன் மகள் திருமணம் முடிந்தபின் தான் தம் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்ததையும் அறிந்தேன். அவர் மீதுள்ள மதிப்பு கூடிக் கொண்டே போயிற்று....


அவருடன் பிறந்த சகோதரிகளில் ஒருத்தி திருமணம் முடிந்த ஓரிரு வருடத்தில் அகால மரணம் அடைந்து விட்டாள் பல வருடங்களுக்கு முன்னால். அப்போது அவளது பெண் குழந்தைக்கு வயது இரண்டு மாதம்.
என்ன செய்வது....

 யாரும் முன்வராத நிலை....... அந்தக் குழந்தையை எடுத்து வந்தார்கள் சண்முகமும் அவர் மனைவியும்.....

தன் பிள்ளைபோல் வளர்த்து படிக்க வைத்தார்கள். B.E பட்டம் பெற்றாள்.வேலையும் கிடைத்தது...அந்தப் பெண்பிள்ளைக்குத் திருமண வயது வந்தது. மாப்பிள்ளை பார்த்தார்.
சொந்தத்தில் ஒரு பையனை அதுவும் இவர் செலவு செய்து படிக்க வைத்த பையனை மணமுடிக்க முடிவெடுத்து திருமண வேலை நடந்தது....

திருமண அழைப்பிதழ் அச்சடிக்க எழுதி அந்தப் பெண்ணிடம் காண்பித்தார்கள்.

அந்தப் பெண்ணின் தந்தைபெயர் இருந்த இடம் அவள் கண்டாள்.

அவள் சண்முகத்திடம்,“ மாமா..... என்னை வளர்த்தது நீங்க....நான் வளர்ந்தது இங்க.. அத்தை தானே மாமா எனக்கு அம்மா.....கல்யாண லெட்டரில் உங்கள் பெயரை இப்படிக்கு சண்முகம் எனப் போடணும். என் பெயர் வரும் இடத்தில் எனது மகள் என்று போடணும்...” என்றாள்.

கேட்டுக் கொண்டிருந்த என் கண்கள் பனித்தன. இப்படியும் மனிதர்கள் உள்ளனரா....நன்றியை எவ்வளவு அழகாய் காண்பித்து விட்டாள்...மகளைப் போல வளர்த்த அந்தத் தாய் எப்படி அகம் மகிழ்ந்திருப்பாள்....

ஆசை மகள் ஆசைப்பட்டது போல் ..... எல்லாம் நடந்து முடிந்தது....

கணவனுக்கும் வேலை உண்டு..

இறையருளால் அவர்களுக்கு பெண் குழந்தை..... அவர்கள் இருவரும்வேலைக்குப் போகணும்..... பிள்ளையைப் பேணிப் பாதுகாத்து வளர்க்கணும்.... என்ன செய்ய....

இப்போதும் ஆதரவுக் கரங்கள், அவளை அணைத்து வளர்த்த அதே கரங்கள் உதவிக்கு வந்தன.

“நான் இருக்கேன்.... பிள்ளையை நான் பாத்துக்கேன்.... நீங்க இருவரும் வேலைக்குப் போங்கோ....”

இரண்டு மாதக் குழந்தையை தாயினும் மேலாய்ப் பேணி வளர்த்து வருகிறாள். அந்தப் பிள்ளையை தரையில் விட்டு யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்....

அவள் வளர்த்த இரண்டு பெண்பிள்ளகளும்...ஒன்று அண்ணிபெற்றபிள்ளை...மற்றொன்று தான் பெற்ற பிள்ளை....பொறியியல் பட்டதாரிகள்......

இதோ மூன்றாம் பெண் பிள்ளை..... இடுப்பில் இருந்து இறங்காமல் ஆச்சியிடம்
வளர்கிறது.
அந்தப் பால்குடி மாறா சிசுவை வைத்திருக்கும்  ஆச்சிக்கு அது சுமையாய் இல்லை.  சுகமாய் இருக்கு.

மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டுமம்மா....

எனக்கு, என் உணர்வுகளும் என் புலன்களும் நெகிழ்ந்து போய்க் கொண்டே இருப்பது போன்ற உணர்வு....நானென்ற அகந்தை என்னிடம் இருந்து வேகமாய்ப் போவது போன்ற உணர்வு....

நான் அதிசயமாய்க் கேட்டுக் கொண்டே இருந்தேன்....

ஒரு பெண்.... சண்முகத்தின் மனைவி.... குழந்தைக்கு மட்டுமா தாயாய் இருந்தாள்.

அவள் கணவரைப் பெற்ற தாய்....அந்தத் தாய்க்கு எத்தனைப் பிள்ளைகள் இருந்தாலும் அவளை அன்போடு அரவணைத்த கரங்கள் இவளுடையதே.

தள்ளாத வயதில் வயோதிகம் காரணமாய்  சுருங்கிக் கிடந்த    மாமியாரை அன்னைபோல் அருகே அமர்ந்து, அமுதூட்டி அகமும் முகமும் மலர அரவணைத்தாளே....... அது மாமியார் பெற்ற பாக்கியம்.

தன் அருகே படுக்க மருமகளை அழைப்பாளாம் அவளை அன்னையாய் நினத்து.

மாமியார் உயிர்  இருக்கும்வரை மறவாமல் உச்சரித்த பெயர் ,ஒரே ஒரு பெயர் தான்.....   அது சண்முகத்தின் மனைவியின் பெயரே.

நல்ல மகள்..... நல்ல மனைவி..... நல்ல தாய்....  எல்லாமே  --- தான்...

முதலில் வீட்டைப் பார்த்த போது இருந்த என் நினைப்பு , இப்போ மாறி விட்டது. வீடு பழசானது... சின்னதாய் இருந்தது. அங்கு வாழும் மனிதர்களின் மனம் விசாலமானது. இதயம் சிறிதெனினும் எத்தனைபேர் இருந்தாலும் அத்தனை பேர்களையும் அந்த இதயம் தாங்குகிறதே.....

அது... ஒரு இல்லம்... அன்பு இல்லம்... தெய்வமே குடி கொள்ள விரும்பும் இல்லம்.... அன்னை இல்லம் அது.

[ உண்மைப் பெயரை குறிப்பிடவில்லை.... அடுத்தவீட்டு ஜன்னல் வழியாய்ப் பார்த்ததை வெளியே சொல்லாதே என்று யாரோ ஒருவர் சொன்னது  இன்று என் நினைப்புக்கு வந்து தொலைத்தது......  கேட்டவை அனைத்தும் பதிவு செய்யப்படவில்லை. நான் செய்தது சரியோ? தவறோ? நானறியேன்]


Wednesday, December 18, 2013

குறும்படத் தகடு வெளியிட்ட செந்திலுக்கு நான் எழுதிய கடிதம்

தாத்தாதம் பெயர் கொண்ட அனந்தபத்மனாபனுக்கு.
வாழ்க…. வளர்க…..
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் அண்ணா என்று உரக்கக் கூவணும் போல் இருக்கிறது. எனது உடன்பிறவா சகலர்- உன் அப்பாவை நினைத்து……

காலங்கள் உனை எங்கோ அழைத்துச் சென்றது. காற்றடித்த திசையில் பறந்தாய்….. தெற்குப் பக்கம் காற்றின் திசை இருந்தால் கிரிக்கட்.
மேற்குப்பக்கமோ அலுவலகப்பணி. வடக்கே காற்றிழுத்தால் வேதனை ….கிழக்கே இப்போ காத்தடிக்குது. கிழக்கே போகும் ரயில் பயணம்…போல் நிழலில் உண்மையைத் தேடும் பயணம்..

 உன்னாலும் முடியும் தம்பி என்பதை உணர்ந்து இன்று எவரும் எதிர்பாராவண்ணம் இரகசியமாய் பொறுமையாய் ஒரு பணிதனை செய்திருக்கிறாய்…… பாரதியாய். பாரதியே நேரில் வந்துவிட்டாரோ என்ற பிரம்மையை நிகழ்த்தி இருக்கிறாய்….. இதைக் கண்டு நெகிழ்ந்திட தந்தை இல்லை…பாராட்டிட நடிகர் திலகம் இல்லை. பாரதி வேடப் பொருத்தம் மிகுந்த சுப்பையா இல்லை. இருந்திருந்தால் எல்லோர் கண்ணிலும் நீர்… அது ஆனந்தக் கண்ணிராய் வடிந்திருக்கும்…..


சிப்பிக்குள் முத்து நீ. முத்துவின் தனயன் நீ

உன்னுள் ஏதோ ஒன்று இருக்கு. வெள்ளைத்தாளில் வந்த வெள்ளமில்லாக் கிணறு உன் அறிவின் ஆழத்தைக் காட்டிற்று—வைரவிழாமலர்………… கணிதமும் தமிழும் கொஞ்சி விளையாடும்….கம்பனே கல்லூரிக்கு வந்தால் கலகலத்துப் போவான் என்றெல்லாம் எழுதிய போதே உன்னுள் ஏதோ ஒன்று இருக்கு என எண்ணினேன். எண்ணம் கனவல்ல….. நனவே… சான்று.. கதை- வசனம்- நடிப்பு என்ற மூன்றிலும் ஒற்றை மனிதனாய் “பாரதியின் பாதிக்கனவு” எனும் குறும்திரைக் காவியம்தனை வெளியிட்டது நீ என்பதுவே….

ஒன்று எனச் சொல்… அனைவரும் ஒன்றே.
வித்தியாசாகர் நினைவப் போற்றும் போதே உன் தெளிவு புரிகிறது….. எவரை எப்படி நினைக்கவேண்டுமோ அப்படி நினைத்து மிகத் தெளிவாய் அஞ்சலி செலுத்திய பாங்கு பாராட்டப்படவேண்டிய ஒன்று.

  முகம், முகவரி தந்தவர்களை வணங்கிய விதம் கவர்ந்தது…..


நடிப்பு…. என் பாராட்டுதல் கோடிக் கோடி….. ஒப்பனையாளர், கேமரா எல்லாமே மிக பாராட்டும்படி இருந்தது….. இருப்பினும் ஒலிப்பதிவில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிலாமோ என்று எண்ணினேன்…. தவறு என்று சொல்ல எனக்குப் போதிய அறிவில்லை….

உன் நடிப்பு… ஆஹா… என்ன அழகு…செந்திலா இது என என் விரலை மூக்கில் வைக்கும்படியாய் இருந்தது…. என்ன ”பாவம்”…ரசித்தேன்…..

எத்துறையாயினும் நீ அத்துறையில் உன் திறமையைக் காட்டு….. பெருமை கிட்டும்….. அடக்கம் ஒன்றே உயர்ந்தது…. உன் சுபாவத்தால் எல்லோரிடமும் அன்பாய் பணிவாய் நடந்து, இன்னமும் பல முத்துக்களும் வைரங்களும் உன் கிரீடத்தை அலங்கரிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்….

   எல்லாப் புகளும் இறைவனுக்கே……

அன்புடன்
தங்கப்பன்.
11-12-13


Tuesday, December 17, 2013

இரயில் பயணத்தில் ஒரு உயர் அதிகாரி சொன்ன அவர் கதை

ராசா ஒரு அரசுக் கல்லூரியில் காவல்காரராகப் பணிபுரிந்து வந்தார்.அவரது மகன் அதே கல்லூரியில் பட்டவகுப்பு பயின்று கொண்டிருந்தார். மிக ஏழ்மையானக் குடும்பம். ஓலைக் கூரை வேய்ந்த சின்னஞ்சிறு வீடு. அவர் படித்த காலத்தில் அவரது வீட்டில் மின் வசதி கிடையாது.அவர் பெயர் ராஜசேகரன்.ஏதோ சிவாஜி கணேசன் நடித்த படம் பார்த்துவிட்டு மகனுக்கு சூட்டிய பெயர் அது.
ராஜசேகரனுக்கு ஒரே ஒரு அண்ணன் உண்டு. அவர் அதிகம் படிக்கவில்லை. அவரை எப்பாடுபட்டாவது கல்லூரியில் வேலையில் சேர்த்துவிட வேண்டும் என்று ராசா எண்ணினார். அதுபோலவே மகனுக்கும் வேலை அங்கே கிடைத்தது.
கல்லூரிப் பேராசிரியர்கள் சிலரும் முதல்வரும் எதற்கெடுத்தாலும் ராசாவை அழைத்து தமக்கு வேண்டிய வேலைகளைச் செய்யச் சொல்வது வழக்கம்.ராசாவும் எந்தவித முகச் சலனம் இல்லாமல் தமது மகனுக்கு வேலைதந்த கல்லூரி ஆசிரியர்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் பணிவிடைகள் செய்து வந்தார்.

நாட்கள் பல கடந்தன.ராஜசேகரன் படித்துப் பட்டம் பெற்றார். அரசுப் பணியாளராக வேலையில் சேர்ந்தார். அதுவும் குரூப் 2 தேர்வு எழுதி மிக உயர்ந்த உத்தியோகத்தில் இருந்தார்.....

ஒரு நாள் ரயிலில் நான் நாகர்கோவிலுக்கு சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்தேன் என் மகன் தினேஷுடன். அது நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்.எனது படுக்கை- இருக்கை A1- 40. அது மேல் மட்டத்தில் இருக்கும் பெர்த். ஒருவர் நாங்கள் இருக்கும் பக்கம் வந்தார். அவருடன் ஒரு வயதான பெரியவரும் வாலிபர் ஒருவரும் வந்தார்கள்.

கையில் இருந்த டிக்கட்டைக் கொடுத்து இது எந்த சீட்டுனு பாருய்யா என்று பெரியவரிடம் கேட்டார் வந்தவர். அவர் மிகவும் பணிவாய் , இது அப்பர் பெர்த்துய்யா என்று சொன்னார். தன் கையில் இருந்த பெட்டியை மிகவும் வேகமாய் கீழே போட்டுவிட்டு  ,” என்னால் மேல ஏறமுடியாதய்யா..” யாரிடமாவது போய் லோயர் பெர்த் தரமுடியுமான்னு போய் கேளும் என்றார்....

அவர் போணில் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்தப் பெரியவர் வந்து லோயர் பெர்த் எதுவும் கிடைக்கல்ல என்று சொன்னார்.

அவர் ,” நோக்கியா போணுக்கு சார்ஜர் யாரிட்டையாவது கேட்டு வாங்கிற்று வாய்யா......” என்றார். சற்று நேரத்தில் சார்ஜரோடு வந்தார்...... எங்கே சார்ஜரை போடுவது ..... எல்லாமே பயன்பட்டுக் கொண்டிருந்தன...... நான் என் போணை சார்ஜரைப் போட்டு வைத்திருந்தேன். அந்த உதவியாளர் என்னிடம் பார்வையால் பரிதாபமாக கேட்டும் கேட்காமலும்  என்னையே நோக்கி நின்று கொண்டிருந்தார்..... என் மனம் உதவி செய்ய விரும்பியது... நான் என் போணை எடுத்து அவருக்கு வழி விட்டேன்....

நானும் என் மகனும் பேசிக் கொண்டிருந்தோம்..... இரயில் புறப்படும் நேரமும் வந்தது.... உதவியாளர்கள் இறங்குமுன் எங்களிடம் ,’ TTE வந்தால் அவரிடம் சொல்லி சாருக்கு லோயர் பெர்த் வாங்கிக் கொடுங்க சார்” என மிகவும் பணிவாகச் சொல்லிவிட்டுப் போனார்கள்...

எங்களுடன் அவர் எதுவும் பேசவில்லை.... ஆனால் நாங்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்..... அவரிடம் பேசவும் எனக்கு தோணல்ல....

TTE வந்தார்.....லோயர் பெர்த் கிடைக்க வாய்ப்பில்லை....அவருக்கு side upper....
அந்தப் படுக்கையின் கீழ் உள்ள படுக்கையில் யாரும் வரவில்லை. நான் நினைத்தேன்.... கீழ்ப்படுக்கையில் தூங்கவேண்டியதுதானே.... யாராவது கேட்கும்போது கொடுத்துரலாமே......நான் அதை வாய்விட்டு சொல்லல.....

ஆனால் அவர் சொன்னார்..... இதுல படுத்துக்கலாம்...... தூக்கத்துல எழுப்பிச் சொல்வாங்க.... அதற்குப்பின் தூக்கம் தொலைந்துரும்......
எனக்கு ஒரே ஆச்சரியம்....... நாம் நினைப்பது அவருக்கு கேட்டிருக்குமோ !
அவர் தன் பெட்டியைத் திறந்து ஹோட்டலில் வங்கிய டிபனை சாப்பிட எடுத்து  கேபினை விட்டு வெளியே போனார். அங்கே ஒரு படுக்கை ....அது attender படுத்து தூங்குவதற்காக.... அதில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.....

எதற்காகவோ என் மகனைத் தேட அவன் வெளியே நின்று அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்......

நான் மறுபடியும் என் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டேன்.

சாப்பிட்டுமுடித்த அவர் அவரது இருக்கையில் அமராமல் காலியாய் இருந்த என் எதிர்பக்கம் உள்ள இடத்தில் அமர்ந்தார்.என் பக்கத்தில் என் மகன் அமர்ந்தான்.

என்னிடம் அவர் பேசினார். “ சார்! உங்க பையன்ட பேசினேன்..... நீங்க கல்லூரியில் ஆசிரியராக retired ஆனவரா ?  நீங்க ரெண்டு பேரும் நண்பர்கள் இருவர் பேசுவது போல இருந்தது...நான் மிகவும் ரசித்துக் கொண்டிருந்தேன்....

அவர் என் மகனிடம் ,” பெருமாள் !..... அப்பா அம்மா தான் தெய்வம்.... அப்பா எப்படி வாழ்ந்தாரோ அது போலவே நீயும் வாழ்ந்து அப்பாபெயரைக் காப்பாத்தணும்... மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல் என்று வாழவேண்டும்...... உனக்காக மட்டுமே நான்  என் அனுபவத்தை சொல்லுகேன்.... போரடிக்கும் ... கேட்டுக்கொ....நான் இதுவரை யாரிடமும் சொன்னதில்லை..... உன்னிடம் சொல்றேன்...”

நான் இப்போ எப்படி இருக்கேன் பாத்தியா.....(நாகரீகம் கருதி அவர் ஆற்றும் பணியை எழுதவில்லை)....

”நான் பிறந்த வீடு..... ஓலைக் குடிசை..... அதை நான் இன்றும் பழமை மாறாமல் அப்படியே வச்சிருக்கென்.... அன்று அதை எப்படி மாட்டுச் சாணி போட்டு மெழுகினோமோ இன்றும் அப்படியே செய்து பாதுகாத்து வருகிறேன். சின்ன வயதில் குளிருக்குப் போர்த்த போர்வை கிடையாது. கோணிப்பைதான் போர்வை (சாக்கு).   சிம்மணி விளக்கில் தான் நான் படித்தேன்.... நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியே போவதற்கு பயமா இருக்கும்.... மூத்திரம் பெய்ய வெளியே போகக் கூட பயந்து அடக்கி வைத்து தூங்கிருவேன்... எனக்காக அம்மா கண்விழித்துக் காத்திருப்பாள் காலையில் 4 மணிக்குக் கேட்கும் சங்கொலி சப்தத்திற்காக. அந்தச் சத்தம் கேட்டதும் என்னை எழுப்பி விடுவா..... 4 மணியானால் பயம் இருக்காது.... அடக்கிவைத்த மூத்திரத்தை வெளியே போய் கொட்டி விட்டு வீட்டினுள் வந்து படிக்க ஆரம்பிப்பேன்..அதன் பிறகு அம்மா தூங்குவாள்.

நான் நல்ல படிப்பேன்.....என்னுடன் நந்தினி என்ற ஒருத்தியும் படித்தா....அவளுக்கும் எனக்கும் தான் போட்டி..... நான் அவளை நேசித்தேன். அவளும் என்னை நேசித்தாள்..... ஆனால் வறுமையும் வைராக்கியமும் என் கண்ணை மூடவைத்துவிட்டது......காதல் வேண்டாம்... நம் இலட்சியத்துக்கு அது இடையூறாக இருக்கும் என உணர்ந்தேன்... ஆனாலும் அவளை எனக்கு மிகவும் பிடிக்கும்........நானும் அவளும் படித்த கல்லூரியில் தான் என் அப்பா வேலை பாத்தார்.... அவர் முதல்வருக்கு tea  வாங்கிச் செல்லும் போதெல்லாம் என் தேகத்தில் உள்ள எல்லா உறுப்புகளும் நொறுங்கி விடும்.... நான் வீட்டில் போய் அழுவேன்.... அப்பா வேலை பாத்தா நான் படிக்க மாட்டேன் என அம்மாட்ட சொல்லி அழுவேன்.... எனக்காக அப்பா இரவு வேலைக்கு மாறினார். ஆனாலும் 5 மணிக்கு அவர் கல்லூரிக்கு வந்து விடுவார்....அப்போ... நான்  NCC யில் இருந்தேன்....நானும் அந்த சமயம் அப்பாவைப் பார்ப்பேன்....

என்னைப் பாத்து “ நீ அந்த ராசாவின் மகனா .....” என கேட்பார்கள்... என்னிடம் அருணாசலம்கிற ஆசிரியர் அப்பாவை தேயிலை வாங்கி வரச் சொல்ல சொல்வார்..... நான் சொல்ல மாட்டேன்... நானே வாங்கிக் கொடுத்திருவேன்...

மற்ற மாணவர்கள் அப்பா போவதைப் பாத்து ,” அது யார் தெரியுமா.... நந்தினியோட வருங்கால மாமனார்...”... இது அவள் காதிலும் விழும்... அப்போ அவள் என்ன நினைச்சா என்று எனக்குத் தெரியாது.... ஆனால் அவள் எனக்கு வேண்டாம்.....படித்தேன்.... படித்தேன்... முதுகலைப் பட்டமும் படித்து தமிழ் நாடு பப்ளிக் செர்வீஸ் கமிஸ்ஸன் செகண்ட் குரூப் தேர்வு எழுதினேன். இன்று நான் மிக உயர்ந்த பதவியில் இருக்கேன்..... கோடீஸ்வரி எனக்கு மனைவியானாள்..... ஆரம்பத்தில் சண்டை சச்சரவெல்லாம் உண்டு.... என் மனைவி நான் சொன்னதைக் கேட்காவிட்டால் என் மனம் அமைதி இழந்து விடும்.... நான் என் குடிசையில் போய் என் அப்பாவின் அருகே போய் அழுவேன்.....என் அம்மா மரணத்திற்குப்பின் அப்பாதான் எனக்கு அம்மா...
 ஏன்பா..... எனக்கு பணக்காரப் பொண்ணை கட்டி வச்சேனு அழுவேன்..... என்னை சமாதானப்படுத்துவார். என்னிடம் மன்னிப்பு கேட்க என் மனைவி வருவா.... அதன் பிறகுதான் எனது பெரிய வீட்டுக்குப் போவேன்.

ஒரு சமுதாயப் பிரச்சினைக்கு தீர்வு காண நான் படித்த அதே கல்லூரிக்குப் போனேன். ஏற்கனவே அங்கே கல்லூரிப் பாதுகாப்புக்கு நின்ற போலிஸ் உயர் அதிகாரிகள் எனக்கு மரியாதை கொடுத்ததையும் என் பேராசிரியர்களே எழுந்து நின்று வரவேற்ற காட்சியையும்  தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த எனது தந்தையின் பிரகாசமான முகத்தைக் கண்டு என் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது. என்னை வரவேற்றுப் பேசிய பேராசிரியர், எப்பவும் ராசாவின் மகன் என்றே அழைத்துப் பழக்கப்பட்ட அதே அருணாசலம் சார் என் பெயர் சொல்வதில் திணறியதைக் கண்டேன்.
நான் பேசும் முன் நான் என் அப்பாவை வணங்கி அதன் பிறகு பேசினேன்.

வள்ளுவர் வாக்கு...... நானே உதாரணம்......

தம்பி பெருமாள் ..!  கடவுளைக் கும்பிடணும்னு நான் சொல்ல மாட்டேன்.... அப்பா.... அம்மாவைக் கும்பிடணும்.....

இப்பவும் அலுவலகப்பணியிலும் சோதனைகள் வரும்..... மறைந்து போன அப்பாவை நினைப்பேன்..... நல்ல வழிகிடைக்கும்.

எனது மகன் என்னிடம் பேசுவான்.... நானும் பேசுவேன்.....அவன் முகத்தை நான் பார்க்கவே மாட்டேன்.... ஆனால் நீயும் அப்பாவும் நண்பர்கள் இருவர் பேசுவது போல இருந்தது.... எனக்கு மிக்க மகிழ்ச்சி..... முடிந்தால் என்றாவது எங்கேயாவது சந்திப்போம்.  உன் போண் எண்ணைச் சொல்... அவர் அதை டயல் செய்ய அவர் எண்ணும் என் மகன் செல்லிலும் பதிவானது....

நான் காலையில் கண் விழித்துப் பார்த்த போது அவர் இல்லை.

அந்த side lower பெர்த் நாகர்கோவில் வரை யாரும் பயன் படுத்தாமல் காலியாகவே இருந்தது....




Monday, December 16, 2013

என் மகன்களுடன் சென்னையில் ஒரு நாள்......

டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி காலையில் தினேஷ்  என்னிடம் வந்து அப்பா, “ நாளைக்கு நீங்க சென்னைக்குப் போகும் ரயிலில் எனக்கு டிக்கட் கிடைக்குமா ?” என்று கேட்டான்.
நான்,” அது எப்படி கிடைக்கும் ? அதுவும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ல சான்ஸே இல்லை.தட்கல்ல வேணும்ணா  கிடைக்குமா என முயற்சிப்போம்...”

பத்து மணிக்கு மேல் தான் தட்கல் கிடைக்கும்.....  எதற்கும் முயற்சி செய்து பார்ப்போமே என IRCTC வலை தளத்திற்குள் புகுந்து தேட ஆரம்பித்தேன்.

 RAC 5 என அன்றைய தேதிக்கு இருக்கை அதுவும் செகண்ட் AC யில் இருந்ததைக் கண்டேன்.

எப்படியும் இருந்தாவது போகலாமே என நினைத்து e-ticket முன்பதிவு செய்து அச்சுப் பிரதியும் எடுத்தேன்.

அதன் பிறகு திரும்பி நாகர்கோவிலுக்கு 11ஆம் தேதி மாலை வர எந்த ரயிலிலும் முன் பதிவு செய்ய இயலவில்லை. உடந்தானே ஓசூரில் இருக்கும் என் மகன் முருகனிடம் சொல்லி பஸ்ஸில் டிக்கட் எடுக்கச் சொன்னான் தினேஷ்.

அவனும் மாலை 7.30 மணிக்கு ரதி மீனா பஸ்ஸில் ரிசர்வ் பண்ணிவிட்டான். அதனை அவன் எனக்கு அனுப்பி அச்சுப்பிரதியும் எடுத்துவிட்டோம்.

11-ஆம் தேதி மொபைல் போணில் PNR status பார்த்ததில் RAC 1 எனத் தெரிந்தது. இரண்டு மணிக்கூர் கழிந்து பார்த்ததில் படுக்கை உறுதி செய்யப்பட்டது தெரிந்தது.

Chart போட்டபின் பார்த்ததில் A2-18 ..... ஒரே ஆச்சரியம். எனக்கு A2-17 என்பதால்.

நான் தனியாய் அதுவும் கழிந்த ஒருவாரம் தலைவலி,.ஜலதோஷம், காதுவலியால் ENT Dr. விஜயராஜிடம் மருந்து சாப்பிட்டு வந்து குணமாகியும் குணமாகாமலும் இருந்ததால் சென்னைக்கு செல்வது என் மனைவிக்கு சற்று பயம் இருந்தது..... இப்போ மகனும் கூட வருவதால் அவளுக்குத் திருப்தி...

சென்னை சென்று எக்மோரில் இறங்கி ஒரு ஆட்டோவ்ல என் நண்பன் பப்பு வீட்டுக்குப் போகணும் என்று எண்ணியிருந்தேன்.

“மாமா.....” ஒரு குரல். அது வந்த திசையில் திரும்பிப் பார்த்தால் பப்புவின் மகன் ரமேஷ் நின்று கொண்டிருந்தான்.

அவன்  Call Taxi யில் எங்களையும் அவனது மாமியாரையும் அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

அங்கு காலை உணவு உட்பட அனைத்தையும் முடிக்கவும் முருகன் கேசவன் காரில் வரவும் சரியாய் இருந்தது.

நம்ம வீடு வசந்தபவனில் நிச்சயதாம்பூல விழா.... அது எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் எதிர்பக்கம்.... மதுரவாயில்....பப்புவும் விழாவுக்கு எங்களுடன் வந்தது மகிழ்ச்சியாய் இருந்தது.

சாப்பாடு முடிந்ததும் ஆவடி ராம்ஜி வீடு, அம்பத்தூர் முருகன் வீடு, பாடியில் உறவினர் ஒருவர் வீடு என எல்லோர் வீட்டுக்கும் போய் வந்தது 3.30 மணிவரை நேரம் போய் விட்டது.  எனக்கு ரயில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்... அது 6.50 மணிக்கு....

 என்ன செய்ய....நேரம் போகணுமே.Grand Sweets கடைக்குப் போய் ரசப்பொடி,வத்தக்குழம்பு .... வாங்கிவிட்டு எக்மோருக்குப் போனோம்.

நான் தனியாக செல்வதில் முருகனுக்கு இஷ்டமே இல்லை.....

பிளாட்பாம் டிக்கட் எடுக்க தினேஸ் போனான்.....

  ‘அப்பா..... அந்த போர்ட பாத்தீங்களா.... ”இது முருகன் என்னிடம் சொன்னது....

சார்ட் தயாரிப்புக்குப்பின் முன் பதிவு செய்யும் இடம்  அது எனத் தெரிந்தது.

சற்றும் யோசிக்கவில்லை...... நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்ஸில் நாகர்கோவிலுக்கு டிக்கட் இருக்கா எனக் கவுண்டரில் இருந்தவரிடம் கேட்டான் முருகன்....

ஆம் .... செகண்ட் ஏசியில் ஒரு சீட் இருக்கு.

”எனக்கு வேணும்.....”

அந்த பாரத்தில் எழுதித் தா.....

அவசரம் அவசரமாய் எழுதினதில் நான்  train name-ல் தினேஸ் பெயரை எழுத, அப்பா..அப்பா... அது ட்ரயின் பேர் எழுதணும் அல்லது நம்பர் எழுதணும்...

அடுத்த பக்கம் தெளிவாய் எழுதிக் கொடுத்தான்.....

விலாசம் எழுதல்லையே என்றார்....

அதுவும் எழுதிக் கொடுத்தான்......

தேதி எழுதல்லையே என்றார்......

எப்படியோ ஒரு வழியாய் டிக்கட் தயாராக அவர் 1335 ருபாய் எனகேட்க நான் 1500 கொடுத்தேன்.

35 ருபாய் தாருங்கோ எனக் கேட்க முருகன் தயாராய் வைத்திருந்ததைக் கொடுக்க ஒருவழியாய் டிக்கட் கிடைத்தது...... மீண்டும் ஆச்சரியம்....  அதுவும் நான் பயணம் செய்யும் அதே கோச்.  எனக்கு 40 அவனுக்கு 46.....

தினேஷ் மூணு பிளாட்பாம் டிக்கட் எடுத்துக் கொண்டு வந்தான்.

அவனுக்கு டிக்கட் கிடைத்ததில் மகிழ்ச்சி..... அஞ்சு ருபா போச்சே என்றான்....

அது மட்டுமா போச்சு .... பஸ் டிக்கட் அந்தக் காசும் போச்சே என்றேன்....

அது போட்டும்பா.... அண்ணன் உங்ககூட வருவது எவ்வளவு வசதி....

ரயிலில் ஏறினோம்.... தினேஸ் உள்ளே இருந்தான்...

நான் வெளியே வந்து சார்ட்டில் என் பெயர் இருக்கா எனப் பார்த்துப் பெயர் கண்டதில் ஒரு திருப்தி.....

“ முருகா .... நீ போ...”

நீங்க முதல்ல உள்ள போங்கோ..

”என்னடே... நான் என்ன சின்னப் பையனா”...

அம்ம சொல்லி இருக்கா.... நீங்க எப்பவும் ரயிலவிட்டு கீழ இறங்கிதான் நிப்பீங்களாம்.....

சரிடெ....

நான் ரயிலில் ஏறினேன். முருகன் விடைபெற்றுச் சென்றான்....

ரயில் புறப்பட்டது. தினேஸ், “ எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்குப்பா....போகும்போதும் வரும்போதும் அருகருகே சீட் கிடைச்சது......” என்றான்......

எல்லாமே இறைவன் செயல்..... உள்ளதைச் சொல்.... நீ  என்னுடன் வந்தாயே....நீயாக வந்தாயா... அம்ம சொல்லி வந்தாயா....

“ நானாகத்தான் வந்தேன்...... விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் உங்களுக்காக ..... உங்களுக்காக மட்டுமே வந்தேன்பா..அம்மாவுக்கும் நான் உங்ககூட வந்ததில் ரொம்ப சந்தோசம்தான்....

  அப்பா ரயில விட்டுக் கீழே இறங்கி நிப்பா.பாத்துக்கோ என...போணில் சொல்லிக் கொண்டே இருந்தா.

என்னடா.... இது....நான் என்ன சின்னப் பையனா.......  ஆம்....வயது ஏற ஏற....

வாழ்வு வசந்தமாய் இருந்திட இந்த அனுபவத்தைவிட எனக்கு வேறென்ன வேண்டும்.

என் கைப்பிடித்து நடந்தார்கள் எப்பவோ..... இப்போ அவர்கள் கைப்பிடித்து நடப்பதில் எனக்கு இன்பமே......



Tuesday, November 19, 2013

எப்படி எழுத ஆரம்பித்தேன்.....

நான் எழுதியவை எதுவும் ஞானபீடப்பரிசு பெறுவதற்காகவோ சாகித்ய அகாடமி விருதுக்காகவோ எழுதப்படவில்லை. அன்றொருநாள் பேரன் ஒருவன் அவன் தாத்தா பிரிந்தசோகம் கண்டு கவி எழுத, அதனைப் படித்த உறவினர்கள் ஒருத்தர் கூட கண்ணீர் விடாமல் இருக்கவில்லை.வாய்விட்டு அழுத பேத்திகளை நானே பார்த்தேன். எழுதிய பேரன் எனது மகன். பேரனவன் அதன்பிறகு அது போல் ஒன்று இந்நாள்வரை எழுதவில்லை. தாத்தா மறைந்து 14 ஆண்டுகள் ஓடிப் போயிற்று...... உணர்ச்சி மட்டும் இருந்திருந்தால் கூட அவன் எழுதிய வரிகள் உறவினர்களின் மனதில் இடம் பிடித்திருக்காது. உணர்ச்சியுடன் உண்மையும் இருந்தது..... அது தான் அந்த அவனது வரிகள் சாகா வரம் பெற்று இன்றும் எங்கள் எல்லோர் மனதிலும் நிலைபெற்றிருக்கிறது...

சின்ன வயதில் அறிந்தும் அறியாதவயதில் ஒரு கடிதம் நண்பன் ஒருவனுக்கு நான் எழுத அந்தக் கடிதம் யார் படிக்கக் கூடாதோ அந்த நபரிடமே கிடைத்தது. எப்படி கிடைத்தது.தானாக அது ஊர்ந்து போய்விடவில்லை. நண்பனே பகையானான்.எட்டப்பனாக மாறிக் காட்டிக் கொடுத்தான்.


அதனால் ஒரு உச்சகட்ட யுத்தமே பிரளயம் போல் நடந்து முடிய  என் தந்தை  பாசமாய் எனை அழைத்து ,” தங்கம்.... நீ எழுதியதில் உண்மை இருந்திருக்கலாம்.... அந்த உண்மைதான் அவர்களை சுட்டிருக்கிறது.... உண்மை சில சமயங்களில் சுடும் ...... இனிமேல் யாரையும் நிந்தித்து எழுதாதே..... எழுதினால் அது சாட்சியமாம் மாறும்.... பேசு... அது காற்றினால் களவாடப்பட்டு மாய்ந்து போகும்....”


தெனாலிராமன் வளர்த்த பூனைக்கு எப்படி பால் புடிக்காமல் போயிற்றோ அதுபோல் அதிகம் எழுத நினைத்த எனக்கு எழுதப் பிடிக்காமல் போயிற்று....


அதன்பிறகு மேற்படிப்பு படிக்கப் போனேன். அப்பாவுக்கு எழுதும் கடிதமே வேண்டுதல் கடிதமாய் அமைந்தது.... “நான் நலம்... நீங்கள் நலமா...நன்றாகப் படிக்கிறேன்... பணம் வேண்டும்.....” இப்படித் தான் என்னால் எழுத முடிந்தது.....

அப்பா சொன்னார்,” ஏன்.... மிகச் சுருக்கமாய் எழுதுக.....பயந்துட்டியா....எழுது .... நீ பார்த்ததை படித்ததை.... விரும்பியதை எழுது.”

ஆனாலும் கடிதவரிகள் குறுகியதாய் இருந்தநிலை மாறவே இல்லை.


நான் ஆனந்தவிகடனுக்கு குறும் செய்திகள் எழுதி அனுப்ப அது வெளிவந்து என்னை மகிழ்வித்தது. குமுதத்தில் துணுக்கு வந்து என் தந்தையையும் வசீகரித்தது....

கணித ஆசிரியனாய் பணியாற்றியபோது தினமலரில் என் கடிதம் படித்து,இந்துஎனும் ஆங்கிலப்பத்திரிகையில் பிரசுரம் ஆகும் என்ற நினைப்பில் எழுதி அனுப்ப அது வெறும்வெடிக்காத புஷ்வாணமாய் மாறிட ஆங்கிலத்தில் எழுதுவதை விட்டுவிட்டேன்....

தற்செயலாய் ஒருநாள் பேராசிரியர் L.C.தாணு எழுதிய ஒன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பர் ஆசிரியர் கடிதம் பகுதியில் வந்ததைப் பார்த்து எனக்கும் எழுதணும் என்ற வேட்கை வந்தது.

என்ன எழுத ?..... யோசித்துப் பாத்தேன்.   ம்ஹூம்... 

ஒருநாள் காலையில் ரயில் நிலையம் போயிருந்த போது மூன்றாம் பிளாட்ஃபாமில் வந்த சென்னை ரயில் பயணிகள் கையில் சுமையோடும், வயோதிகர்கள் மிகவும் சிரமப்பட்டு படியேறி வந்ததைக் கண்டேன்.... உள்ளுணர்வு எனை எழுதத்தூண்டியது... எழுதினேன்... தொடர்ந்தது..... எண்பது கடிதங்கள்.....என்னை பிரமிப்பூட்டிற்று.... போதுமே என்று தோணியது... அதன்பிறகு நான் எழுத நினைத்தும் எழுத என் மனமோ கைகளோ ஒத்துழைக்கவில்லை.


என் மூத்த மகன் வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்று அதீத ஆசை கொண்டதால் குவைத்துக்கு எங்கள் நண்பர் வெங்கட்ராமன்போற்றி அவர்கள் உதவியால் போனான். வேலையும் பார்த்தான். ஒருமாதம் கூட ஆகவில்லை.... அவனுக்கு சலிப்பு ஏற்பட்டது. அதனால் அவனுக்கு நீண்ட ஒரு கடிதம் எழுதினேன்.... அது அவன் மனதினை மாற்றிற்று

...அந்தக் கடிதத்தைப் படித்த அவனது தோழர் ஒருவர் அதனை நகல் எடுத்து சக தோழர்கள் அனைவருக்கும் கொடுத்துப் படிக்க வைத்ததாக என் மகன் சொல்ல அவனுக்காக எழுத  ஆரம்பித்தேன்....

எழுதிய பல வரிகள் என்னை மீண்டும் எழுதத் தூண்டிற்று....


நானும் என்றோ எழுதிய மூன்று கடிதங்கள் ஒரு மகளின் “மகளோடு நான் “ என்றொரு அழகான வடிவம் கொண்ட ஆல்பத்தில் சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறது. காரணம் அவ்வரிகள் சத்திய வரிகள்..... காலங்கள் ஒடிப்போயின...... அறுபத்தாறு வயதில் அறுபதாம் வயதுள்ள ஒருவருக்கு எழுதிய கடிதம்........என் வரிகள் அவரை மிகவும் கவர்ந்தன.... இப்போ அந்த வரிகள் அழகான் ஃப்ரேமுக்குள்.... அது இருக்கும் இடம் அவரது மேசையில் முக்கியமான போட்டோ வரிசையில் நடுநாயகமாய்........ எல்லாமே இறை அருள்..... இவையெல்லாமே எனக்கு ஞானபீடப் பரிசுகளே.......

Thursday, October 24, 2013

அன்பு சோறு போடுமா ?........

சார்....எப்படி இருக்கீங்க ?  நான் என்னெதிரே வந்தவரிடம் கேட்டேன்.

நல்லா இருக்கேன் ..... உங்க பிள்ளைகள் எப்படி இருக்காங்க.... முருகன் எம்மீ முடிச்சுட்டானா.... தினேஷ் எப்பம் வாறான்.... மகள் பெங்களூர்லதானே...... கேட்டுக்கொண்டே இருந்தார்.

நானும் அவரிடம் அவர் பிள்ளைகளைப் பற்றியும் கேட்டேன்.

”பையன் யூஎஸ்ல ஃபேமிலியோட இருக்கான். பொண்ணு பீ இ படிச்சு வேலை பாத்தா..... வேலையை விட்டுட்டு இப்ப  வீட்ல இருக்கா. அலயன்ஸ் பாத்துக்கிட்டு இருக்கேன்.. ஒண்ணும் சரியா அமைய மாட்டேங்கு.”அவர் சொன்னார்.

ஏன் சார் வேலையை விட்டா..... ?

பொண்ணு பாக்க வந்தவங்க பொண்ணு வேலை பாத்தா எப்படி பிள்ள குட்டிகள பாக்கமுடியும் என்று சொல்லவே , அவள் வேலையை விட சொன்னேன்.

வேலை இல்லாமல் இருக்கா... இப்ப வர்றவங்க , “ பொண்ணும் வேலை பாத்தாதானே இரண்டு பேர் சம்பாதிக்கும் பணம் தான் குடும்பம் நடத்த வசதியாய் இருக்கும்.

 இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொண்ணா சொல்றத கேட்டு மனதுக்கு,நான் மகளை வேலையை விட்டுட்டு வரச் சொன்னது தப்பாய்ப் போச்சோ என்று மனம் பதை பதைக்கிறது ..... வீட்ல நான் இருக்கும் போதும் அவளப் பாக்கும்போதும் என் நெஞ்சே அடைக்குது.....அவ வயசும் கூடிற்றுப் போகுது. எனக்கும் வயசாச்சுல்லா..... நொந்து பேசினார்.

நான் உங்க மகள் அழகா இருக்கா... நல்ல அன்பான பொண்ணு..... நிச்சயம் நல்ல பையன் கிடைப்பான் என்றேன்.

”அன்பும் அழகும் சோறு போடுமா சார்.... அதெல்லாம் அந்தக் காலம் சார்.” என்று சொல்லவே  எல்லாம் கடவுள் நல்லதே செய்வார் எனச் சொல்லி நகர்ந்தேன்.

இரண்டு பேர் வேலை செய்யும்போது கிடைக்கும் அனுபவம் எல்லோருக்கும் ஒன்று போல் இல்லை. தன்மானம் (EGO) மேலே வராமல் தன்மனம் தனது கட்டுப்பாட்டில் இருக்கணும். அன்பும் வேணும். அறிவு பணிவோடு இருக்கணும்... அறிவை அலுவலகத்தில் Use பண்ணணும்.. அன்பை வீட்டில் காட்டணும்.... நிச்சயம் அன்பு சோறு போடும்.
நான் சாப்பிடும் சாப்பாடு என் அறிவால் என்னருகே வந்ததில்லை. அவள் அன்பால் நான் இருக்கும் இடம் தேடி வருகுது....

Tuesday, October 22, 2013

மழை காப்பாத்திற்று.... மழை வந்தால்.....வராவிட்டால்...

கடுக்கரையில் வயல்களில் உள்ள பயிர்கள் தண்ணீருக்காக ஏங்கி பரிதாபமாய் இருந்த நாளில் கிட்டண்ணனைக் கண்டேன்....
நான் அவனிடம் “ என்னா  மழையைக் காணவில்லை.... எப்படிண்ணே... இந்தப் பூ தப்பீருமா...”
அவன் தம்பி “ நம்ம தம்புரான் சாமி நம்ம கைவிட மாட்டாருப்போ.... மழை வரும்..... கண்டிப்பா வரும்... மழை நம்மைக் காப்பாத்தும்” என்று சொன்னான்.

அதுபோல் மழையும் வந்தது.....

கிட்டண்ணன் ,“ பாத்தியாப்போ..... மழை காப்பாத்திற்று”.... என்றான்.. முகம் முழுவதும் ஆனந்தரேகைகள்......”

 தென் மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை தொடங்கி மழை பெய்யும் என்று நினைக்கையில் பெய்யாமலும் மழை எங்கே வரப்போகிறது இன்று வராது எனக் குடையை எடுக்காமல் போகும்போது மழை வருவதுமாய்  விழையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.
அறுவடை ஆரம்பமான சமயம்..... மழை வந்தால் அறுவடை தடைபடும்....
அய்யோ இந்த மழை வந்து கெடுத்துருமோ...... நேரத்தே அறுத்தாதான் நல்ல விலையும் கிடைக்கும்..... நாட்கள் தள்ளிப் போனால் விலையும் கீழ்நீக்கிப் போயிரும்.

மழை பெய்யவில்லை சில நாட்கள்.....

மழை வராமல் இருந்ததால் விவசாயிகள்  வயலில் கதிர் அறுக்கும் மெஷின் வைத்துஅதிகம் நஷ்டப்படாமல் அறுத்துக் கிடைத்தநெல்லை விற்று பணமாக்கி சற்று மகிழ்வுடன் இருந்தனர்.

கிட்டண்ணன் , “ மழை அஞ்சாறு நாளா வரல்ல... எல்லா வயலையும் மெஷின் வைத்து அறுத்துட்டேன்.... நல்லவேளைப்போ.... மழை வரல்ல ... மழை நம்மை காப்பாத்திற்று.....” இப்போதும் முகம் முழுவதும் ஆனந்தரேகைகள்.....”

.காட்டுப்புதூரில்  எண்பது வயதுப் பாட்டி  கழிந்த வெள்ளிக்கிழமை அதிகாலைப் பொழுதினில் சிவனடியை அடைந்து விட்டாள்.

நான் காட்டுப்புதூருக்கு  ஞாயிற்றுக்கிழமை இரவு “துட்டி கேட்க” போயிருந்தேன்...
அவள் இயல்பாகவே நல்ல அன்பாகப் பழகுபவள்.

அங்கிருந்த ஒருவர் இன்னொருவருடன் பேசிக் கொண்டிருந்தார். என் காதிலும் விழுந்தது....

“ பாரு..... இந்த இரண்டு நாளும் ஒரு மழைகூட இல்லை.... இறுதிச் சடங்குக்கு  மழையால் தொந்தரவே இல்லை...... நாளைக்கு சுடுகாட்டுக்குப் போவதுவரை மழை வாரமல் இருந்தாலே போரும்.”

திங்கள் காலையில் இறுதியாத்திரையை மழை தொந்தரவு செய்யல்ல...

நேற்று பேசிக்கொண்டிருந்த அதே இரண்டு ஆட்கள் நடந்து செல்லும்போதே பேசிக்கொண்டே சென்றனர்.

“ பாத்தியா.... செத்தவள் இருக்கும் போதும் யாரையும் துன்புறுத்தல்ல.... இப்ப பாரு அவ போகும்போதும் யாரும் மழையால் கஷ்டப்படல்ல.... மழை மேகம் கறுப்பா இருந்து பயமுறுத்துகு.... ஆனா ஒரு துளிகூட விளல்ல.....”

வீட்டில் இருந்து சுடுகாடு வரை செல்லும் ரோடு  மஞ்சள், வெள்ளை, சிவப்புக் கம்பளம் விரித்தால் போல்  காட்சியளித்தது.  அத்தனையும் பூக்கள்..........அதனையும் மழை வந்து கெடுக்கவில்லை.....

சடங்குகள் முடிந்தன.......

அந்தத் தாயின் புதல்வர்களின் முகத்தில் சோகம் இருந்தாலும் மகிழ்ச்சியாய் சொன்னார்கள்.

“ நல்ல வேளை மழை காப்பாத்திற்று........”

செவ்வாய்கிழமை...... காடாத்து.... சுடுகாட்டில் நடைபெறும் ஒரு நிகழ்வு.... காலையில் பத்தரைக்கு மேல்.... நான் போனேன். மழை வருவது போன்று இருந்தது.....ஆனால் வரல்ல...... பக்கத்தில் ஒரு வயல்..... அறுத்த வயல்.... நெல்லில்லா கதிர் வயல் முழுவதும் கிடந்தது.....

என்னருகே நின்ற ஒரு ஆளிடம் கேட்டேன்.... அவன் சொன்னான்.
“ வயல அறுத்தான்..... நெல்ல எடுத்துட்டான்.... ஆனா இந்தப் பாவி மழை வந்து கெடுத்திட்டு.... வக்கீல் எல்லாம் தண்ணியில மாட்டிற்று....”

எல்லாம் முடிந்து வீட்டுக்கு காரில் கிளம்பினோம்...... தெரிசை நெருங்கும்போது மழை பெய்ய ஆரம்பித்தது.... மழை அதிகமாய் பொழிந்தது....

என்னுடன் வந்த டிரைவர்.... பாருங்க இந்த மழை .... ஹோட்டலுக்குப் போகவிடாது போலிருக்கே.... அவன் துட்டிவீட்டில் சாப்பிடமாட்டான்.... அதனால் தெரிசையில் சாப்பிட இறங்கிப் போக முடியாத நிலை..... குடையும் இல்லை... குடை கொண்டுவந்திருந்தால்தான் மழையே வந்திருக்காதே....
சாலை வழியே சென்ற ஒருவர் குடை தந்து உதவ அவன் சாப்பிடப்போனான்....

சாப்பிட்ட பின்  மழை நின்றபின்...... வந்தான்....

பாருங்க சார் இந்த மழையை.... என் உடுப்பெல்லாம் நனைஞ்சிருச்சு....மழை ....
சொல்ல ஆரம்பிக்க..........  நான் சொன்னேன் ......

“ மழை ஒரு நாளும் கெடுக்காது.......  முன்யோசனையின்றி செயல்படுவதால் ஏற்படும் விளைவுகளுக்கு மனிதனான நாமே தான் பொறுப்பு.”

மழைக்காலத்தில்  மழை வருவது மனிதகுலம் வாழவே.....

ஒருவன் மழை வந்தால் அது காப்பாத்திற்று என்கிறான்......
இன்னொருவனோ மழை வந்து கெடுத்திற்று என்கிறான்.... மழை வராமல் இருந்தாலும்......... இதே பல்லவிதான்.

உப்பு விக்கப் போகிறவன் மழைக் காலத்தில் போவானா........
புட்டுமாவு விக்கப் போறவன் காற்றடித்தால் என்ன செய்வான்.....





Monday, October 14, 2013

அந்தநாள் இனிய நாள்.........

இன்ற விஜய தசமி.... பத்தாம் நாள்..... காலையில் பேப்பருக்காக காத்திருந்தேன்.... பேப்பர்காரன் போடல்லையே...

என் மனைவியை அழைத்தேன். பேப்பர் சரியாய் போட மாட்டாங்கானே.. போட்டாலும் எங்கோ தூக்கிப் போட்டு தண்ணியில் போடுகான். பாரு இண்ணைக்கு எவ்வளவு நேரம் ஆச்சு... இன்னமும் ஆளக் காணல்ல...நாள முதல் பேப்பரே போடாண்டாம்ணு சொல்லிரு.

இண்ணைக்கு பேப்பர் கிடையாதுங்க...... இது அவள்  சொன்னபிறகு தான் உறைத்தது.

போரடிக்குதே........ படிக்கும் மனப்பக்குவம் எங்கே போனது. நான் எழுதினா மற்றவங்க படிக்கணும்னு எதிர்பார்ப்பு சரியா ?......

 என்ன செய்யலாம். இருக்கவே இருக்கு... நம்ம கம்ப்யூட்டர்......

யோசித்தேன்.......

சின்னஞ்சிறு வயதில் விளையாடிய அந்த நாட்கள்  நெஞ்சினில் வந்து வந்து போனது.

மின் கம்பங்கள் இல்லாக் காலம். ஆறு மணிக்கெல்லாம் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்ற  சட்டம் எல்லா     இல்லங்களிலும்  இருந்த காலம்  .காரணம் இரவுப் போழுதில் தெருவில் கடந்து செல்வது
 இன்று போல் அன்று எளிதாய் இருந்ததில்லை என்பதுவே.

 வசதிஉள்ளவ்ர்களிடம் மட்டுமே டார்ச் லைட் இருக்கும். மூன்று பேட்டரிக் கட்டை போடும் பெரிய டார்ச்சுக்கு உறை போட்டு பாதுகாப்பாய் வைத்திருக்கும் பெரியவர் ஒருவர் எங்கள் கிராமத்தில் இருந்தார். அவரைத் தவிர யாரும் அதை தொடக்கூட முடியாது. அந்த உறை நூல் கயிறால் அவரால் பின்னப்பட்டது. அதை அதிசயாமாய் பார்த்த காலம்.

லாந்தர் லைட்டைக் கையில் வைத்து ச் செல்வோரும் உண்டு. வசதி படைத்தவர்கள் இரவு தெருவில் செல்லும்போது அவரது பின்னால் வெளிச்சம் தெரியும்படி லாந்தர் லைட்டை கொண்டு செல்பவர்கள் அவர்கள் வீட்டில் வேலை செய்பவர்கள்.
மற்றபடி இரவு தெருக்களும் வீடுகளும் இருளாகவே இருக்கும்.

 ஒவ்வொரு ரூமிலும் சின்னச் சிம்மணி விளக்கு இருக்கும். அது பிள்ளைகள் படிப்பதற்கு. அந்த விளக்கு இருக்கும் அந்த குறுகிய இடத்தில் தான் வெளிச்சம் இருக்கும். இரவில் கருமையான இருள் கூடி வெளிச்சம் குறைவாகவே இருக்கும்.

கடுக்கரை ஊர் தெருக்கள் எல்லாமே ஏற்றமும் இறக்கமும் கொணடது வாகவே  இருக்கும். இரத வீதி இல்லா கிராமம்.  வட்டவடிவமானதாகவும் இல்லை. சதுரமாகவோ நீள்சதுரமாகவோ இல்லாத ஊர். சும்மா பேருக்காக கீழத்தெரு ,மேலத்தெரு, வடக்குத்தெரு, தெற்குத்தெரு, புதுகுளத்தெரு, கடைத்தெரு,பள்ளிக்கூடத்தெரு,ஆத்துப்பாறைத்தெரு,தரிசு என்று பெயர் பல உண்டு. கொல்லக்குடிப் பாறை,ஆனைக்கல் பாறை, மயிலாடும் பாறைகளும் உண்டு.... ஊரைச் சுற்றி வரும் ஒரே ஆறுக்கு பல பெயர்...... நல்லாறு, பீயாறு, கஞ்சியாறு,அலத்துறையாறு.......

நான் வசிக்கும் இடம் தரிசு. கடுக்கரையின் தலைநகரம்... என் சமவயது பள்ளித்தோழர்கள், உறவினர்கள் இருப்பதோ கீழத்தெருவில்... வாரவிடுமுறையில் கீழத்தெருவுக்கு விளையாடப்போவது வழக்கம். இருட்டுவதற்கு  முன்னால் விளையாட்டு முடிந்து வீட்டுக்குப் போக வேண்டும். போகவில்லையெனில் பிள்ளையைக் காணவில்லையே என பதறுவாள் அம்மா.


 சில சமயங்களில் நேரமாகிவிடும். தனியாய் வீட்டுக்குப் போக முடியாது.நாய்த்தொல்லை வேறு..... கீழத்தெருவில் அத்தை வீட்டிலிருக்க வேண்டிய சூழ்நிலை ஏறபடும். அங்கேயே சாப்பிட்டு தூங்கி காலையில் எழுந்து வீட்டுக்கு போவதும் உண்டு.

விளையாடப்போன பையன் வீட்டுக்கு வரவில்லையே என்று பயந்து அம்மா
வேலையாளிடம் சொல்லி பார்த்து வரச்சொல்வாள்.

 அவரும் வருவார்.

அவரிடம் நாளை வருவான் எனச் சொல்லி அனுப்பி விடுவர்கள்.

அந்த வீட்டில் நாங்களும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவோம். சில சமயங்களில் மரவையில் எல்லா கறிகளையும் போட்டு நன்றாய் விரவி வரிசையாய் உட்கார்ந்திருக்கும் எங்களுக்கு உருட்டித் தருவார்கள்.

எல்லோருக்கும் இருப்பதை பங்கிட்டு தரும் பாங்கு...

அப்படி சாப்பிடுவதற்கே அடிக்கடி போவதுண்டு.

இரவில் கீரை , நெல்லிக்காய்,தயிர் உணவு சாப்பிடக்கூடாது என்பதை அங்கிருந்துதான் அறிந்தேன். மீன் சாப்பிட்டால் மோர் எடுக்கக்கூடாது.........

 இருள் நீங்கும் பூரண நிலா வெளிச்சம் தரும் பௌர்ணமி நாட்களில் இரவு வெகு நேரம் “கல்லா ... மண்ணா விளையாட்டு விளையாடிய நினைவுகள்......

 மாசிமாதம் ஒரு  பௌணர்மி இரவில்...... எங்கள் மாமா எங்களை அழைத்து தெருவில் கிடக்கும் நெல்லை எடுத்துவந்தால் பரிசு தருவேன் என்றார்கள்.

நாங்கள் தெருவில் சுவர் ஒரங்களில், சின்னச் சின்ன பாறை இடுக்குகளில் இருந்தும் நெல்லைப் பொறுக்கிக்  கொடுத்தது நினைவில் வந்து போகிறது.அன்று மகம் நட்சத்திரம்.... அது நெல் பிறந்த நாளாம்.....

கள்ளன், சிப்பாய் விளையாட்டு, மட்டக்காளை ,ரப்பர் வண்டி, பாண்டி விளையாட்டு ........ இந்த நாள் அன்று போல் இல்லையே.......

 

சரஸ்வதி பூஜைநாளில் நான் சந்தித்த ஒருவர்.......

காலையில் அதுவும் அதிகாலையில் கண்விழித்தேன்.  அதன்பிறகு தூங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தேன்.

நேற்று சரஸ்வதிபூஜை..... கடலை, பொரி........இரவுச் சாப்பாட்டுக்கு விடுமுறை......

 நாலு மாதமாக ஜெயமோகன் எழுதிய அறம் கதைபுக்கை படிக்க எண்ணி எழுந்தேன். முகம் கழுவியபின் என் இருக்கையில் இருந்து மேசையில் இருந்த புத்தகத்தைத் தேடினேன்..... யாரோ அதை படிக்க எடுத்திருக்கிரார்கள்.....

 என்ன செய்ய  ..... இருக்கவே இருக்கிறது

கணினி. தூங்கிக் கொண்டிருந்த கணினியை ஒளியேற்றினேன்.

என் பக்கம், வரிகளைத் தாங்கத் தயாராய் வெண்மையாய் எனை பார்த்துக் கொண்டிருந்தது..

என்ன எழுத...... ?எதை வேண்டுமானாலும் எழுதலாமா...?

யோசித்துக் கொண்டிருந்தேன்.... ஆங்க்..... ஞாபகம் வருதே.

நேற்றுக் காலையில் நான் வீட்டில் இருந்த போது ஒரு நண்பர் வந்தார்.

“நல்லா இருக்கீங்களா”  கேட்டுக் கொண்டே வந்தார். அவர் குரல் ஆரோக்கியமற்று இருந்தது. அவர் தேக நலம் குன்றி இருந்தார்.

என்ன விசயமாய் வந்தீங்க என நான் கேட்காமலேயே எதற்கு வந்திருக்கிறார் என்பதனை புரிந்து கொண்டேன்.  அதற்குக் காரணம் அவர் கையில் இருந்த ரசீது புக்கும் நோட்டீசும் தான்.  வாடகைக் கார் ஓட்டும் அவர் வேட்டாளி அம்மன் கோயில் பக்கம் உள்ள ஆட்டொ ஸ்டேண்டில் ஆண்டுதோறும் நடக்கும் சரஸ்வதி பூஜை விழாவுக்கு வேண்டி ருபாய் கேட்கவே வந்தார்.

”நாலைந்து வருடமாகவே நீங்கள் வருவது இல்லையே..” நான் கேட்டேன்

”கழிந்த வருடம் நானும் சேர்ந்து கொண்டேன்.  ஆனா உங்களைப் பார்க்க வரல்ல.”

 “நான் மனதாலும் உடலாலும் ரொம்பவும் கஷ்டப்பட்டேன்லா..... உங்களுக்கும் தெரியும்லா.... எதிலும் பிடிப்பு இல்லாமல் வாழ்வே அஸ்தமித்து விடுமோ என்று கலங்கி இருந்த நாட்களில், என் சொந்தங்களே என்னைப் புழுவாய் பார்த்த காலங்களில் எனக்கு ஒரே ஆறுதலாய் இருந்த தலைவர் பெருமாள் ..... அவர் நடத்தும் விழா சிறப்பாய் நடக்கணும்கிறதுக்காக அவரோடு நானும் சேர்ந்து போக ஆரம்பித்தேன். இந்த வருடமும் அவருக்காக........”

”பணமும் பகட்டும் கொண்ட கனவுலகில் வாழும் என் உறவினரின் புறக்கணிப்பு என்னை எங்கோ துரத்தியது.  எனதருமை மகள் பெற்ற சிசுவை எடுக்கவோ பார்க்கவோ விரும்பாத அந்த உறவு இருந்தென்ன...... இல்லாமல் இருந்தென்ன.... வேண்டாம் . அந்த உறவே வேண்டாம்.  என் கடவுள் என்னைக் காப்பாற்றினார்.ஒரு கதவு மூடியது. பல கதவுகள் எனக்காக திறந்தது .”

மிகவும் நொந்து சொந்தக் கதையை என்னிடம் சொல்லி மனப்பாரத்தை இறக்கி வைத்தார்...

நான் கேட்டேன்........ நான் எத்தனை ருபாய் எழுத வேண்டுமென....?

“ எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு நீங்க கொடுத்திருப்பீங்க. நாங்கள் இலவசமாக அரிசி கொடுக்கிறோம். உங்கள் பங்கும் இருக்கவேண்டும் என்ற  ஆசையில் தான் வந்திருக்கிறேன்...... ஒரு ருபாய் தந்தாலும் மகிழ்ச்சியே....”

விடைபெற்று போகும் போது அவர் என்னை வணங்கி,” உங்கள்ட்ட நான் போனில் பேசி அந்தக் குரல் கேட்டாலே அன்று எனக்கு ஆனந்தமாய் இருக்கும்” என்றார். அவர் கண்களில் தழும்பிய நீர்........

நானும் திகைத்து நின்று அவரை வழி அனுப்பி வைத்தேன்.......

அவர் யார்....?  இருபத்தைந்து வருடங்களாக ஒவ்வொரு ஆங்கில ஆண்டு தொடக்க ஜனுவரி முதல் தேதியன்று அவர் ஓட்டும் டாக்ஸியில் முதல் பயணிகளாக  நாங்கள் பயணிப்பது நடந்து கொண்டிருக்கிறது.....

கோயில்களுக்கு செல்வோம். எங்களுடன் அவரும் வருவார்......

அவர் பெயர் பெனடிக்ட்.  ஆம் அவர் பிறப்பால் வாழ்வால் ஒரு கிறிஸ்தவர்.
என்னைவிடவும்  அவர்தான் பெரியவர் என்று என் மனம் கூறிக்கொண்டே இருக்கிறது.............. 

Thursday, October 3, 2013

நாட்கருதுப் பானையை நிறைக்கும் ஒரு கிராமிய இனிய வீட்டு விழா

அக்டோபர் மாதம் முதல் நாள். காலையில் வந்த முதல் தொலைபேசி அழைப்பு சுரதவனம்  சுவாமிகளிடம் இருந்து வந்ததால் மிகவும் அன்பாகப் பேசிய குரல் கேட்டு மகிழ்ந்தேன்.  மகாராஷ்டிரா ஆன்மீகச் சுற்றுலா இருவாரங்கள் சென்று வந்த அவர், என்னைப் பார்க்க வருவதாக சொன்னது மனதுக்கு இதமாக இருந்தது. அன்று எங்க வீட்டில் “ நிறை”.

அவர்கள் சென்ற இடங்களை வலைத்தளத்தில் பார்த்து ஆங்கிலத்தில் உள்ளனவற்றை தமிழில் மொழிபெயர்த்து சுருக்கமாகவும் தமிழில் தெளிவாகவும் அச்சுப்பிரதியெடுத்து கொடுத்திருந்தேன். அதை பல பிரதிகள் எடுத்து அவர் அனைவருக்கும் கொடுத்தார். ராமருக்கு அணில் செய்த உதவி போல் என் செயலையும் உயர்வாய் எண்ணி நன்றி பாராட்ட வந்ததாக அவர் வருகையை நான் என் மனதில் கொண்டேன்.

 காலையில் கடுக்கரையில் இருந்து ஐயப்பன் கதிர் (நெற் கதிர் ) கொண்டு வந்தான்.  நாங்கள் தனி அறையில் (அரங்கு  or Store room) தீபஒளி விளக்கின் முன்னால் வைக்கப்பட்டிருந்த இலையில், கொண்டுவந்த நெற்கதிர்களை ஐயப்பன் வைத்தான். பக்கத்தில்  ஓலைவட்டி இல்லாததால்  ஒரு பேசினில் பழைய நெல்லும் இருந்தது. வெற்றிலை, பாக்கு, பழம் , கதிர் முன்னால் இருந்தது.

சாம்பிராணி புகைத்து , தேங்காய் உடைத்து , சூடத்தட்டில் நெய்யூற்றி திரிவைத்து தீபமேற்றி தீபாராதனைக் காட்டினேன்..... நாள்கதிர்பானையில் முதலில் பழைய நெல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்துப் போட்டதற்குப் பிறகு நெற்கதிர்களை எடுத்து அதனை சுருட்டி பானையினுள் வைத்தேன். மூன்று தடவை இது போல் செய்தேன். என் மனைவியும் பானையில் கதிர் வைத்து நிறைத்தாள்.

” நிறைநாள்” அன்று காலையில் சர்க்கரை போட்ட அவல் தான் காலை உணவாக எடுத்துக் கொண்டோம்.
 11 மணியளவில்  முருகதாஸ் சுவாமி வீட்டுக்கு வந்தார்.அவர் அஷ்டவிநாயகர் உருவப் படம் கொண்ட லிகித ஓலை ,சீரடி சாய்பாபா படம் தந்தார்.

 சற்றும் எதிர் பாராமல் அவருடன் நான் பெரிதும் மதிக்கும் நண்பர் ஒருவரும் வந்தார்.
  அவர்களை பானையில் கதிர் வைத்து நிறைக்கும்படி வேண்டினோம்.

அதன்பின் பலவிசயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம்.... ‘நிறை” பற்றி பேச்சு வந்தது.

ஏன் பழைய நெல்லை முதலில் அந்தப் பானையில் போடச்சொன்னீர்கள் என்று வந்தவர்களில் ஒருவர் கேட்டார்.
விவாசாயிக்கு நெல் தான் கடவுள். பழையன போகும்போதும் அதனை மறக்காமல் நன்றியாய் இருப்பதை காண்பிக்கவே அச்செயல் என்றேன்.

நாள்கதிர் பானையை வித்தியாசமாக ஓவியம் தீட்டி வைத்திருக்கிறீர்களே ...ஏன் என்று கேட்டார். வருடத்திற்கு இரண்டு தடவை மட்டுமே அதனைப் பயன்படுத்துவது வழக்கம். வேறு எதற்கும் அதனை பயன்படுத்த எடுக்க மாட்டார்கள்... அது நிறை பானை என்று தனியாய்த் தெரியவே கடவுள் படம் ஓவியமாய் வரைந்து வைத்திருக்கிறோம்.
அவர் மேலும் பல கேள்விகள் கேட்டார். நான் சொன்னவை ....................

 55 வருடங்களுக்கு முன்னால் நேரிடையாய் நான் கலந்து ,பார்த்தவைகளை அவரிடம் சொன்னேன்.
வயல் அறுவடைக்குத் தயாராகும் நாள் நெருங்கும் போது, நல்ல நாள் பாத்து நல்ல விளைந்த வயலின் ஒரு மூலையில் (  வடகிழக்கு மூலை என்று ஞாபகம்)  கதிர் அருவாளை வைத்து என் அப்பா, வானத்தில் கதிரவனை வணங்கிக் கதிர் அறுப்பார். அதன் பின் வேலையாட்களும் நண்பர்களும் கதிர் அறுத்து வைப்பார்கள்.... அப்பா போதும் என்று சொல்லும் வரை அறுத்து சிறு சிறு கட்டாக கட்டி வைப்பார்கள்.

அதன்பிறகு மாட்டுச் சாணத்தில் பிள்ளையார் பிடித்து அருகம்புல்லை அதன் மீது வைத்து, கொன்னைப்பூ வைத்து பூஜை செய்வார் அப்பா. பூஜை முடிந்த பின் வயது மூப்படிப்படையில் ஒவ்வொருவருக்கும் கதிர் கொடுப்பார்கள்.

 அப்பாவின் அப்பா (தாத்தா) உயிரோடு இருந்தவரை எனது சின்னப்பாமார்கள் அவரது பிள்ளைகளும் எங்களுடன் கதிர் அறுக்க வயலுக்கு வருவார்கள்.

எல்லோரும்  எங்க அப்பாவிடம் இருந்து  கதிர் பெற்றுக் கொண்டு, அவர் பின்னால் வயல் வரப்பில் வரிசையாய் செல்வது கண்டு சந்தோசமாய் இருக்கும்.
தெருவழியாய் வரும்போது, வீட்டின் வாசலில் காத்திருந்து நிற்பவர்களைக்  கண்டு அவர்களுக்கும் கதிர் கொடுப்பார் அப்பா. அப்படி வாங்குவோர்களில் அப்பாவின் அம்மையும் (ஆச்சி) உண்டு. சொந்த மில்லாதாரும் உண்டு....  பின்னாட்களில் இந்த வழக்கம் இல்லாமல் போனது.

வீட்டு வாசலை அடையும்போது எனது அம்மா அங்கு நின்று கதிர் கட்டு ஒன்றை அப்பாவிடம் இருந்து வாங்குவாள்.

பூஜை முடிந்து நாட்கருதுபானையை நிறைப்பார்கள்.
பின் வயிறும் நிறையும் காலை உணவான சர்க்கரைபோட்ட அவல் சாப்பிடுவதால்.......

நாங்கள் கிராமத்தை விட்டு வந்தாலும் வீட்டில் நிறைப்பதை வழக்கமாய் கடவுள் அருளால் கடைபிடித்து வருகிறோம்....

இன்றைய நாளில் அதாவது இது போன்ற நாளில் எனது அப்பா, அம்மா என்னோடு இருப்பது போன்ற உணர்வு என் நெஞ்சில் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கும்.

           புதுநெல் அரிசி சாப்பிடும் நிகழ்வு ஒன்று உண்டு. புத்தரிசி சாப்பாடு அது. அன்று  எல்லோரும்  சேர்ந்துதான் சாப்பிடுவோம்.                       அறுவடைக்காலங்களில் நடக்கும்   திருமணத்திற்குப் போனால் பந்தியில் சாப்பிடவேண்டும். அநேகமாய் அந்த சாதம் புது அரிசியில் தான் சமைத்திருப்பார்கள். வீட்டில் புத்தரிசி சாப்பாடு சாப்பிடாமல் எனது அப்பா வெளியே எங்கும் சாப்பிட மாட்டார்கள்...... திருமணத்திற்கு கண்டிப்பாய் போக வேண்டும் எனில் புத்தரிசி சாப்பாடு வீட்டில் வைத்துவிடுவார்கள்....  அரிசி தயாராகவில்லை என்றால் நாட்கருதுப் பானையில் உள்ள கதிர் நெல்லினை எடுத்து உமியை உரித்து ஒரு கைப்பிடி அளவெடுத்து பழைய அரிசியுடன் கலந்து சமைத்து புத்தரிசி சாப்பிடுவதுண்டு.

சீடை செய்வது ( கடையடைக்காய்) அந்த நாளில் தான் செய்து தருவார்கள்....



Sunday, September 29, 2013

எனக்கும் தோசைச் சுட்டுத் தின்ற அனுபவம் உண்டே..

நான் இரண்டு நாட்களுக்கு முன்னால்  என் நண்பன் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

உன் மகன் இப்போ எங்க இருக்கான் ? நான் கேட்டேன்.

அவன் யூஎஸ்ல படிச்சிட்டிருக்கான் என்று சொன்னான்.

 ஹாஸ்டலில் சாப்பாடு எல்லாம் அவனுக்கு பிடிச்சிரிக்கா ?

 நாலைந்து பேர் சேர்ந்து  ஒரு இடத்தில் இருக்காங்க. அவங்களே சமைத்துதான் சாப்பிடுறாங்க. இந்தியாவில் இருந்து போகும்போது ஊறுகாய், மற்ற அத்தியாவசியமான தேவைக்கு மிளகுப் பொடி போன்றவைகளை கொண்டு போயிருக்கான்......

சமையல் பற்றி பேச்சு வளர்ந்தது....

உனக்கு சமையல் தெரியுமா எனக் கேட்க தெரியும் எனச் சொன்னான்.

 எனக்குத் திங்க (சாப்பிட)த் தெரியும் என்றேன் நான்.

தோசையாவது சுடத்தெரியுமா? அவன் (நண்பன்) கேட்க  தெரியாது என்பதற்கு அடையாளமாக தலையசைத்தேன்.

அவன் போய் விட்டான். நான் யோசித்துக் கொண்டே இருந்தேன்.....
 கடிகாரமுள் வேகமாக பின்னோக்கிச் சென்றது..........

2004  ஜுன் மாதம்  என் மனைவி பெங்களூர் சென்றிருந்தாள்.... ஒரு மாதம் நான் இங்கே நாகர்கோவிலில் தனியாக இருந்தேன். எனக்கு உதவியாக ராமன் என்றொருவர் தங்கி எனக்குத் தேவையான சமையல் பதார்த்தங்களை சமைத்து தந்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் அவர் இல்லை....
 நான் வென்னீர் போட முயன்று எப்படி கேஸ் திறக்க வேண்டும் எனத் தெரியாமல்  திணறி செய்வதறியாமல்  வெறும் தண்ணீரைக் குடித்தேன்.
எப்படியோ கேஸ் அடுப்பை பற்ற வைக்கக் கற்றுக் கொண்டேன்.

தோசை சுட்டுச் சாப்பிடும் அருமையான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அந்த நாளும் வந்தது....
 காலையில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்தேன். தண்ணீர் தொளிக்கணுமா ? எண்ணெய் தடவணுமா? மாவினை கல்லில் விட்டபின் என்ணெயை ஊத்தணுமா ?......

நான் எண்ணெயைத் தடவி கல்லில் தோசை மாவை ஊற்றினேன்.... தோசை சரியாக வரவில்லை.... மிகவும் அழுக்காகவும் தின்பதற்கு உபயோகமில்லாமலும் அலங்கோலமாக துண்டு துண்டாக வந்தது.... என்னடா  இப்படி ஆயிற்றே என்று நொந்து போனேன்.    தவறு என்ன என்பதை நானே புரிந்து கொண்டேன். கல்லை மாத்திப் போட்டதால் தான் தோசை சரியா வரல்ல.
அந்த சமயம் பாத்து வீட்டில் வேலை பார்க்கும் பீவிப் பாட்டி வந்து...... என்ன இது....? என்று கேட்க தோசைக்கல்லை மாத்திப் போட்ட திருவிளையாடலை ச் சொல்ல அவள் சிரித்துக் கொண்டே தோசை சுட்டுத் தந்தாள். மறுபடியும் அப்படியொரு சூழ்நிலை  எனக்கு ஏற்படவில்லை அதனால் அடுப்படி பக்கம் செல்வதில்லை......நான் தோசை சுட்ட கதை என் உறவினர்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது... சொன்னது என் தர்ம பத்தினிதான்.

காலச்சக்கரம் 2013 ஆகஸ்டில் வந்து நின்றது. சென்னைக்கு இரண்டு நாள் திருமண விழாவுக்குச் சென்றிருந்தாள்.

காலையில் கண்விழித்தேன். செய்வறியாது காலையில் விழி பிதுங்க யோசித்துக் கொண்டிருந்தேன்.......பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு மருமகள் யாரும் இல்லை.... எல்லோரும் சென்னையில்......

தண்ணீரைச் சூடாக்கி பசுமைத் தேயிலைப் பையை அதில் மூழ்க வைத்துக் குடித்தேன். இதுவே  என் வாழ்வில் எனது  முதல் தயாரிப்பு. ஆஹா... என்ன ருசி.. பேஷ் ..பேஷ்... எனக்கு நானே கூறிக்கொண்டேன்.

காலையில் சாப்பிட நாமே தோசை சுட்டுச் சாப்பிடவேண்டும் என நினைத்து மிகவும் கவனமாக அடுப்பை பத்த வைத்து தோசைக்கல்லை சரியாக அடுப்பில் வைத்து  எண்ணெய் தடவி தோசை சுட்டு அதை தட்டில் வைத்து அடுத்த தோசைக்கு  மாவை கல்லில் விட்டேன்...... அடுத்த வீட்டில் காவலுக்கு இருந்த தம்பிரானண்ணனுக்கும் தோசை கொடுக்க நினைத்து அவனை அழைக்க வெளியே போனேன்...... அந்த சமயம் பாத்து பேப்பர்காரன் வர நான் பேப்பரை படித்துக் கொண்டே மெதுவாக அடுக்களைக்குள் வந்தேன்.

 கல்லில் தோசை பப்படம் போல் பொரிந்தும் கரிந்தும் என்னைப்பார்த்து பல்லிழித்தது...
கையாலேயே அதை எடுத்து யாரும் பார்த்து விடக்கூடாதே என்பதற்காக தின்றேன்...... ஆஹா.... என்ன ருசியாய் இருக்கு........உண்மையில் எனக்கு மிகவும் ருசியாகவே இருந்தது....

அதன்பிறகு மிக அழகாக தோசை சுட்டு நாங்கள்  அருந்தினோம்.. தோசை சாப்பிட்ட தம்பிரானண்ணன் வருவோர் போவோர் அனைவரிடமும் ,” தங்கப்பன்  எனக்குத் தோசை சுட்டுத் தந்தான்... நல்லா இருந்து...” சொல்லிக் கொண்டே இருந்தான்.

அவனுக்கு தோசை சுடத்தெரியாது என்று சொன்னதில் தான் எனக்கு அதிக சந்தோசம்..... ஆஹா.... 66 வயதில் நான் எவ்வளவு பெரிய சாதனை செய்து விட்டேன்.

மிகப்பெரிய சாதனை..........

வரவேண்டிய சமயத்தில் வராத  பாட்டி மெதுவாக , இட்லி அவித்து தரட்டுமா ? எனக் கேட்டுக் கோண்டே உள்ளே வந்தாள்.

சாப்பிட்டாச்சு என நான் சொன்னதைக் கேட்டு வியப்புடன் எனைப் பார்த்தாள்.

நான் என் சாதனையை அவளிடம் சொன்னேன்.

“ நீ வரல்ல..... எனக்கு வயறு பசிச்சு.... நானே தோசை சுட்டு ச் சாப்பிட்டேன்.....”

அவளுக்கு ஒரே சிரிப்பு......  அவள் .” தோசைக்கல்லை மறிச்சுப் போட்டு சுட்டீங்களா ? இல்ல சரியாப் போட்டீங்களா?”

பழைய கால நினைவு அவளை அப்படிப் பேச வைத்தது...... ரசித்துச் சிரித்தேன்....

எனக்கு சரியாகத் தேயிலை போடுவதற்கும் இட்லி அவிப்பதற்கும் வழி முறைகளை அறிந்து வைத்திருக்கிறேன். அடுக்களை எனக்காக கத்திருக்கு ?

என் மனைவி வெளியூர் செல்லும் நாள் வரும்......

என் கையால் சுடும் ...... இல்ல இல்ல....அவிக்கும் இட்லி எப்படி இருக்குமோ!




Friday, April 26, 2013

மறைவுக்குப் பின்னும் பேராசிரியரை மறவா மாணவன்





என் கைபேசி என்கையில் இருந்தது. காரணம் நான் அப்போது காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய……….பாடல் கேட்டதும் என் கண்கள் எனை அழைக்கும் எண்ணை பார்த்தது. இதுவரை நான் பார்த்திராத , அறியாத எண் என்பதால் அழைப்பைத் துண்டித்து விட்டேன்.. மறுபடியும் அதே பாடல்… அதே எண். ஒன்றில் ஆரம்பித்த எண்… அதனால் மீண்டும் புறக்கணித்தேன். ஒன்று என்று ஏதாவது எண் வந்தால் அந்த எணனை மிஸ்டு கால் என எண்ணி அழைத்தால் பைசா போய்விடும் என நண்பர் ஒருவர் எச்சரித்திருந்தார்………அதனால் மறுபடியும் நான் அழைக்கவும் விரும்பவில்லை..
மீண்டும் என்னை என் கைபேசி அதே பாடல் பாடி தொந்தரவு பண்ணியது. வெறுப்பின் உச்சத்தில் நான் இருந்த போது. உள்மனம் என்னைக் கெஞ்சியது எடுத்துத்தான் பாரேன். என்ன தலையா முழுகிவிடப் போகிறது. மனம் ஒரு குரங்கல்லவா…….
என்கைவிரல் பச்சைப் பொத்தானை அமுக்கிற்று.
“ஹலோ, சார் சுகந்தானா ?  “ ஒரு பெண் குரல்
“ நீங்க யாரு ,தெரியல்லயே” நான் சொன்னேன்.
” US- ல இருந்து பேசுகேன்….. விவேக்கோட அம்மா……”
 “அய்யோ இது நம்ம வித்தியாசாகரோடஒய்ஃப்ல்லா….”

நல்லா இருக்கீங்கள்ளா….. பிள்ளைகள் எல்லாம் எப்படி இருக்காங்க நலம் விசாரித்துக் கொண்டிருந்தபோதே அவர் ஆமாம் எனச் சொல்லி தனக்கு மாவட்ட கருவூலத்தில் இருந்து கடிதம் வீட்டு விலாசத்துக்கு வந்திருப்பதாக சொன்னாள். மேலும் விவரம் கேட்டேன்,

மறுநாள் நான் வீட்டில் இருந்த போது ஒரு வாலிபர் தன் கையில் காகிதத்துடன் என் வீட்டுக்கு வந்தார். என்னிடம் தரும் போது மேடத்துக்கு வந்த லெட்டெர் உங்களிடம் தரச் சொன்னாங்க எனச் சொல்லி தந்தார்.

அவரது பேச்சு சற்று நளினமாகவும் பௌயமாகவும் இருந்தது.

அந்த கடிதம் தந்த செய்தியைப் படித்து அறிந்து கொண்டேன்.

நாளை அல்லது வசதிப் பட்ட நாளில் கருவூல அலுவலகம் சென்று இது பற்றி கேட்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.  ஓய்வு பெற்ற வித்தியாசாகர் மறைவுக்குப் பின் கிடைக்க வேண்டிய தொகை 35000/- அவரது மனைவிக்கு காசோலை மூலம் அனுப்படும் என்கிற செய்திதான் அந்தத் தாளில் இருந்தது.
நின்று கொண்டிருந்த வாலிபரிடம் பெயர் கேட்க தனது பெயரைச் சொன்னார். பெயர் இந்துப் பெயர் மாதிரி இருந்தது.
”நான் ஒங்க காலேஜிலதான் சார் படிச்சேன். பி.எஸ்ஸி ஸூவாலஜி படிச்சேன்.”
சற்று ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தேன்.

”எனக்கும் வித்தியாசார்ட்ட பழக்கம் ஆனது என்.ஸி.ஸி மூலம் தான். அவரிடம் அறிமுகம் ஆனபின் அவர் ஆலோசனையினைக் கேட்டு அதன் படி நடந்தேன். எனக்கு அவர் அம்மா மாதிரி….. இல்ல சார் அதுக்கும் மேல. போன வருசம் பெரிய விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் இருந்த போது நான் தான் சார் இரவு நேரம் கூட இருந்தேன். உறக்கமே கிடையாது. என் கண் போல் அவரை பாது காத்தேன்.
 இப்பம் அவர் மார்பு வலி வந்து துடித்த போது என்னை அழைத்தார். நான் அப்போ உடனே வர முடியாத நிலையில் இருந்தேன்….  நேரமும் போய் நான் வந்து பார்க்கும்போது அவர் உயிர் அவரிடம் இல்லை. அது வானில்……
 நான் அழுதேன்… துடித்தேன். தாய் மரித்தது போல் என் மனம் பதறியது…. சாரின் மகன் பூனாவில்….. அம்மா அதான் சாரோட மனைவி அமெரிக்காவில்…..
எல்லோரும் வந்தார்கள். இறுதி ஊர்வலம்…. ஒழுகினசேரி சுடுகாடு தான் தகனம் செய்த இடம்.  அவர் உடலை நெருப்பு அணைக்கும்போது  உடல் வெடித்து வெளியே சிதறாமல் இருக்க யாராவது இருக்க வேண்டும். நான் அவரது உடல் எரிந்து அணைவது வரை அங்கையே இருந்தேன்… சார்…. இப்பம் மேடம் அமெரிக்காவுக்கு போயிட்டாங்க …… வீட்டப் பாக்க ஆள் கிடைக்கல்ல….. நான் தான் காவல்.”
நீங்க எங்க வேல பாக்குறீங்க.
டி.வி.டி யில் டீச்சராய்…… அதுவும் சார் சொல்லி கொஞ்ச நாள் பாத்தேன். வேல கிடைக்கும் வாய்ப்பும் வசதியும் அற்ற எனக்கு அங்கு அதிக நாள் வேலையில் நீடிக்கவில்லை.
 பக்கத்தில் கார்மல் பள்ளியில் தற்காலிகமாக ஆசிரியர் வேலை பாக்கேன். அதுவும் நிரந்தரமல்ல…. சாரும் இல்ல…. என் எதிர் காலம் ஆணடவன் கையில்….
“இந்துவான உனக்கு எப்படி வேலை தருவாங்க “ நான் கேட்டேன்.

”சார், நான் ஒரு கிறிஸ்டியன். என் பெயர் சுரேஷ் பாபு என்பதால் அப்படி நினைச்சுட்டிங்களா.”
உங்க வீடு எங்கிருக்கு என நான் கேட்க அவனும் சொன்னான்.
எல்லாம் இங்க பக்கத்துலதான்….. நான் அங்கு போவதில்லை….. நான் என் தாயாரிடம் பேசமாட்டேன்.
“ஏன்…. பேசமாட்டாய்…. என்ன ப்ராப்ளம்……”
அவன் பதில் பேசவில்லை…… கண்களில் நீர் வடிந்தது……. பேசாமல் நின்றான்.
ஒன்றுமே சொல்லாமல் விடைபெற்று போய்விட்டான்….
என் மனமும் சற்று கலங்கித்தான் போயிற்று….. அவனுக்கும் அம்மாவுக்கும் என்ன தகராறு….. ? தெரியவில்லை.
அவன் அந்தரங்கம் அவனுக்குப் புனிதமானது……

நாளை அவன் தாயுடன் இணக்கமாக வேண்டும்.....இதுவே என் பிரார்த்தனை............

Friday, March 8, 2013

சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்..6


  1. நிலைபேறுடைய மெய்மையோடு கொள்கின்ற இணக்கமே பக்தி எனப்படுகிறது.
  2. கோபம் எனும் கொடிய நோயிலிருந்து ஒருவர் விடுபடாதவரை சமநிலைத் தன்மையை அவரால் எட்டவே முடியாது.
  3. மனதை சமநிலைப்படுத்துவதே உண்மையான சாதனா.
  4. மாஸ்டரிடம் அன்பு ஏற்படும்போதுதான் உண்மையான வளர்ச்சி ஏற்படுகிறது.
  5. மாஸ்டருக்குப் பணிந்து நீ ஒன்றைச் செய்யும்போது அது தோல்வி அடைய முடியாது.
  6. சுத்திகரிப்பு உடல் ஆரோக்கியத்தில் எந்த விளைவினையும் ஏற்படுத்தாது. ஆனால் வாழ்க்கைத் தன்மை மாற்றம் கொள்ளும்.
  7. நீ உடலிலும், உடல் சுகத்திலும் கட்டுண்டு கிடக்கும் வரை துன்பம் தவிர்க்க முடியாதது.
  8. சுத்திகரிப்பு இல்லையெனில் ஆன்மீகப் பயணமும் இல்லை.
  9. அன்பும் சமர்ப்பணமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்; எங்கு அன்பு இல்லையோ,அங்கு சமர்ப்பணம் இருக்க முடியாது
  10. உயர்ந்த நிலைகளை அடைவதற்கு ஆன்மீகப் பயிற்சியில் பிராணாஹீதியைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை.
  11. நாம் அன்பாக உருவாகிடும்போது,அதனுடைய தாக்கத்தின் எல்லையில் வருவதனைத்தும் அந்த அன்பினைப் பெறுகிறது, அந்த அன்பினை உணர்கிறது, அந்த அன்பினை உள்வாங்குகிறது, அந்த அன்பினால் எழுச்சியுறுகிறது.
  12. நமது கழிந்த காலச்சுமையே நம்மை அழுத்திக் கீழே தள்ளுகிறது.அதனுடைய தாக்கத்திலிருந்து உன்னால் விடுபடமுடியுமெனில், மலைகள் கூட மண்ணிலிருந்து உயரே பறக்கும்.
  13. அன்பு என்பது வளர்ந்து,அது ஆட்சி செய்யும் போது அதனுடைய வரம்பினுக்குள் வரும் அனைத்தையும் அது ஆரத்தழுவ வேண்டும்.
  14. சுத்திகரிப்பு.என்பது ஏதோ குப்பைகளிலிருந்து விடுபடுவது அல்ல. சுத்திகரிப்பு நம்மை பாரமற்றதாக்குகிறது. ஆன்மாவும் ஜீவிதமும் சுமையில் இருந்து விடுபடுகிறது
  15. ஒருவர் சரியான அன்பெனும் பாதையைப் பின்பற்றி ,கடவுளைப் பெறுவதற்காக அவரைத் தேடிச்செல்ல வேண்டுமே தவிர அவர் கொடுப்பதைப் பெறுவதற்காக நாடிச் செல்லக்கூடாது.
  16. பரிணாம வளர்ச்சி, எது வளர வேண்டுமோ அதனை வளர்த்தெடுப்பதற்குத்தான் துணை புரியும்.
  17. நீ ஒரு சராசரி மனிதன் என்பதை மறந்து அவருடைய நினைவிலேயே வேலை செய்யும்போது அவரது ஆற்றல் உன் மூலம் செயல்புரியும் விந்தை நடக்கின்றது.
  18. குடும்ப வாழ்வில்தான் நாம் மற்றவர்களை நேசிக்கக் கற்றுக் கொள்கிறோம். உண்மையான வாழ்க்கைக்கு நம்மை தயார் செய்யும் கல்விக்கூடம் குடும்பவாழ்க்கையே!
  19. ஒரு பக்தன் எப்போதும் பக்தியின் வட்டத்திற்குள்ளே இருக்கும்போதுதான்,மனிதப் பண்பின் உயர்ந்த தன்மை முற்றிலுமாக வெளிப்படுகிறது.
  20. உடல் நலமின்மை உண்மையிலேயே ஆன்மீக நோய்களைக் குணப்படுத்துகிறது. ஏனெனில் அது சம்ஸ்காரங்களில் சிலவற்றைச் சுட்டெரிப்பதோடு சகிப்பித்தன்மையையும் வளர்க்கிறது.
  21. அறுந்து படாத எண்ணச் சங்கிலியோடு நம்முடைய அனைத்துச் செயல்பாடுகளிலும், ஒவ்வொரு கணமும் நாம் மிக உயர்ந்த தெய்வீக சக்தியோடு இணைந்திருப்பதை நம்முள் உணர்ந்து கொண்டிருக்கவேண்டும்.
  22. காத்திருத்தலும் ஒரு விதமான ஆழ்ந்த கடவுளைப் பற்றிய நினைவுதான்; அது ஆன்மீகத்திற்கு மிகவும் பயன்படும் ஒன்று.
  23. கடவுளை உணரும் இலட்சியப்பாதையில் வெற்றிகரமாகப் பயணித்திட ஆர்வம், நம்பிக்கை,பற்றுறுதி ஆகியவை எளிதாக உதவும் அடிப்படை அம்சங்களாகத் திகழ்கின்றன.
  24. பற்றினில் ஒட்டாமல் அனைவரிடமும் அன்பு கொள்ள வேண்டும். உண்மையில் சொல்லப்போனால் ,இந்த வழியில்தான் பற்றினில் பற்றில்லாதிருப்பதை நாம் பயில்கின்றோம்.
  25. தியானத்தின் வாயிலாக நாம் ஒரு தற்காலிகமான தூக்க நிலையினை நம் மனதில் உண்டாக்குகின்றோம். அப்போது மேமபட்டிருக்கும் அமைதி நிலையினில் நாம் தெய்வீக சக்தியோடு தொடர்பு கொண்டு இருக்கின்றோம்.
  26. கடவுளை உணர்வதில் நம்மால் வெற்றியடையமுடியும் என்கிற தன்னம்பிக்கை உண்டாவதுதான் அந்த முயற்சியில் விளையும் முக்கியமான அம்சமாகும். மிக உயர்ந்த அந்த நிலையினை அடைந்திட நாம் பலஹீனர்கள், குறைபாடுடையோர் என ஒரு கணம் கூட முட்டாள்தனமாக நினைக்கக் கூடாது.
  27. ஒரு அப்யாஸிக்கு இருக்க வேண்டிய ஒரே முக்கியமான குறிக்கோள் என்னவெனில் அவனுக்குள்ளேயே அவனது இலட்சியத்தைத் தேடுவதுதான்.
  28. பெயர்களிலும், வடிவங்களிலும் சிக்கிக்கொள்ளாது,ஆழமாக உன்னுள் செல்.
  29. நாம் பஞ்சினைப் போன்று இலகுவாய் இருக்கும்போதுதான் ஒரு திறமை வாய்ந்த மாஸ்டருடைய ஒரே ஒரு உந்துதலின் உதவியோடு பரம்பொருளை நோக்கி நாம் பறக்க ஆரம்பிகின்றோம்.
  30. உண்மையான அன்பு இருந்திடின் உடம்பின் ஒவ்வொரு துகளும் ஏழே வருடங்களில் தன்மை மாற்றம் அடைந்து விடும்.
  31. நீ யாரிடத்திலேனும் குற்றத்தைக் காண நேர்கையில் அதிலிருந்து அவர் விடுபட பிரார்த்தனை செய்.
  32. நோய் நொடிகள் அனைத்தும் கடவுள் தரும் வரப்பிரசாதங்கள்.அவற்றில் நிறைய ரகசியங்கள் புதையுண்டு கிடக்கின்றன. அவைகள் தரும் துன்பங்களைத் தாங்கும்போது நிறையவே உள் அனுபவங்கள் உண்டாகும்..
  33. கடவுள் உன்னுடைய இதயத்தினுள் மறைந்து கொண்டு உன்னை வெளியே காட்டுகிறார்.. நீ உன்னை மறைத்துக் கொண்டு கடவுளை வெளியே காட்டு.
  34. அவரிடத்து அன்பும் பிணைப்பும் அதிகமாகும் போது அவரை நோக்கி ஒருவர் மேலும் மேலும் முன்னேறிச் செல்கின்றார்
  35. ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நெறியினுக்கு நான் என்னை நானாகவே,எனக்காக உட்படுத்திக் கொள்ளும் தேவையை நான் புரிந்து கொள்ளும்போதுதான் உண்மையான ஒழுங்குக் கட்டுப்பாடு என்னுள் வளருகிறது.
  36. நிதானத் தன்மையையும், சமநிலையையும் மீட்டெடுக்கும் போதுதான் கடவுளை உணர்தல் சாத்தியமாகிறது.
  37. அன்பு அனைத்து வேலைச்சுமையையும் எளிதாக்கி, மாஸ்டரின் பேரருள் பொழிந்து கொண்டிருக்கும் வழியை உருவாக்கி இறுதி இலட்சியத்தை அடைந்திடும் பாதையைச் செப்பனிடுகிறது.
  38. நீ முழுமையாக கொடுக்கும்போது. நீ கொடுத்ததை விடவும் கூடுதலாகப் பெறுகிறாய். இதுதான் சரணாகதியின் தத்துவம்.
  39. நம்முடைய வளர்ச்சிக்கும், நம்முடைய வீழ்ச்சிக்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும். பண்பு நலன் வாய்ந்த என்னுடைய உணர்வினையும் என்னுடைய மன நிலையினையும் நான் பேணிப் பாதுகாத்து வந்தால் வெளியிலிருந்து வரும் எதுவும் என்னைப் பாதிக்க முடியாது.
  40. தியாகத்தின் மூலமே அன்பு காட்டப்பட வேண்டும். எங்கு அன்பு இருக்கின்றதோ அங்கு தியாகமும் இருக்க வேண்டும். ஏனெனில் நாணயத்தின் இருபக்கங்கள் போன்று அடிப்படையில் அவையிரண்டும் ஒன்றே.
  41. ஆன்மீகம், மிகப்பெரிய அளவில் அறிவுப் பரப்பினைக் கடந்து மனிதர்களை அவர்கள் ஒரே இனம் என்ற நிலையில் ஒன்றிணைக்க முயல்கின்றது.. இதயத்தை நோக்கிய தியானப் பயிற்சி மூலம் மனிதப் பண்புகள் பளிங்குக் கட்டிகளாக உறுதியும் ,தெளிவும் பெற்றிட வேண்டும்.
  42. முற்றிலும் அமைவடக்கம் கொண்டு , அனைத்து விஷயங்களிலும் உறுதியான மனப்போக்குடன் இருப்பதே மிக உயர்ந்த வழிபாடாகும்.
  43. நேரத்தை பயன்படுத்துதல் என்பது அதனை நல்ல விதத்தில், ஆன்மீக வழியில், வளர்ச்சியை மையமாகக் கொண்டு தனக்காக ஒருவர் உபயோகப்படுத்துவதாகும்.
  44. ஒவ்வொரு கணமும் முற்றிலும் பிரபஞ்சமளாவிய வாய்ப்புக:ளையும், நிலைபேறுடைய வாய்ப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒருவர் அவைகளை அந்தக் கணத்திலேயே பயன்படுத்திவிட்டால், அவருக்கு அடுத்த கணம் தேவையே இல்லை.
  45. ஒருவர் அவருடைய முன்னேற்றத்திற்காக,அவருடைய பரிகாரத்திற்காக, அவருடைய பாபவிமோசனத்திற்காக, அவருடைய விடுதலைக்காக எதிர்காலத்தைச் சார்ந்திருந்தால், அவருடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றினைச் சார்ந்திருப்பதற்கு ஒப்பாகும்.
  46. ஒருவர் தெய்வீகத்தோடு இணைந்திருக்க உண்மையாக விரும்பினால், அவர் தெய்வீகத்துடன் இங்கேயே, இப்போதே, இந்தக் கணத்திலேயே, இந்த இடத்திலேயே, இந்த நேரத்திலேயே இருந்தாக வேண்டும்.
  47. எங்களுக்கு அருளப்பட்டிருக்கும் திறன்கள் அனைத்தும் எங்களை மேம்படுத்துவதற்காகவே! அதன்மூலம் எங்களோடு இணைப்பினை; ஏற்படுத்துகின்றோரும் மேம்பட முடியும்..
  48. ஒன்றினை நீ கொடுக்கும் வேளையில்தான், கொடுப்பதன் மதிப்பை நீ அறிந்து கொள்கிறாய்..

 

மாஸ்டரின் பணியில்
அ.ஆறுமுகம்பிள்ளை. 09443281166

 


 

சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்..5



  1. காத்திருத்தல் தான் மிகச் சிறந்த தவமாகும்.
  2. நிறைய காரியங்களை செய்வதற்கு ஒரே வழி எதனையும் செய்யாது தியானம் மட்டுமே செய்வதாகும்.
  3. சீடனுக்கு மிக மிக உயர்ந்தவர் குரு மட்டுமே. எல்லா நினைவுகளும் அவரைச் சுற்றியே இருந்திடவேண்டும்.
  4. முன்னேற்றம் என்பது நான் எதுவாக ஆகவேண்டுமோ அதுவாக ஆக விழுமம் கொள்வது; எது எனக்கு துணை புரியுமோ அதற்கு என்னை உட்படுத்துவது; எது என்னைப் பின்னுக்குத் தள்ளுகின்றதோ அதனைத் தவிர்ப்பது.
  5. உனக்காக நீ வேண்டும் போது அது யாசகம் ஆகின்றது; பிறருக்காக நீ வேண்டும் போது அது பிராத்தனை ஆகின்றது.
  6. நாம் மாஸ்டருக்கு செய்திடும் சேவை அன்பு,பக்தி,சரியான பயிற்சிமுறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இவைகள் மட்டுமே நாம் எப்படி ஆக வேண்டும் என மாஸ்டர் விரும்புகின்றாரோ அப்படி ஆகிட நமக்கு உதவுகிறது. இப்படிப்பட்ட செயல்பாடுகள் தான் உண்மையான சேவை என முத்திரையிடப்படுகிறது.
  7. திருப்தியடைதல் என்பது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகும். நாம் எப்போதும் துடிப்போடு இருக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் "ஆம், நான் சாதித்து விட்டேன்" என்ற மனநிறைவு கொள்ளக்கூடாது.
  8. ஒரு ஆரோக்கியமான ஆன்மிக வாழ்க்கை, ஒரு ஆரோக்கியமான உள்ளத்தையும், ஆரோக்கியமான உள்ளம் ஆரோக்கியமான உடம்பையும் உருவாக்குகிறது
  9. ஒரு அப்யாஸி ஆன்மிக வாழ்க்கை மிக முக்கியமானதென்று புரிந்து கொண்டால், அவர் சத்சங்கத்திற்கு அதிக முக்கியத்துவத்தை அளிப்பார்.
  10. மாஸ்டர் உனக்கு தெரியாமலேயே உன்னுடைய ஆன்மிக முன்னேற்றத்திற்குத் தேவைப்படும் உண்மையான உண்ர்வுகளால் உன்னைத் தூண்டச் செய்தல் போன்ற நிறைய செயல்களைப் பரிவுடன் செய்கின்றார்.
  11. சரணாகதி என்பது ஒரு படகில் உட்கார்ந்தவாறு அதனை நீரோட்டம் எப்படிக் கொண்டு செல்கின்றதோ அப்படி அனுமதிப்பது போலன்றி வேறு எதுவுமல்ல.
  12. சுத்திகரிப்பு சம்ஸ்காரங்களை நீக்குகிறது. பிராணாஹதி குருவினுடைய அருள் எப்படி இருக்கின்றதோ அதனை அப்படியே உன்னுள் கொண்டு வருகிறது. தியானம் உன்னுடைய மனதில் ஒழுங்குக் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது. நிலையான நினைவு அன்பைத் தோற்றுவிக்கிறது.
  13. உண்மையான ஆன்மிகப் பயிற்சி நம்முடைய மனதில் ஒழுங்குக் கட்டுப்பாட்டைத் தோற்றுவித்து, நமது புலன்களிலும், செயல்பாடுகளிலும் சமநிலையைக் கொணர்ந்து, நம்முள் ஒரு இலகுத்தன்மையை உருவாக்குகிறது.
  14. ஒத்துழைப்பு என்பது சரணாகதியை நோக்கிச் செல்லும் பல படிகளுக்கு நம்மைத் தானாக எடுத்துச் செல்லும் முதல்படி.
  15. நிலையான நினைவின் மூலம் அன்பு உருவாகி அந்த அன்பு இறுதியாக உன்னை உன் அன்புக்குரியவரை நோக்கி முன்னேற்றிச்செல்கிறது.
  16. ஒழுங்குக் கட்டுப்பாடு இன்றி அன்பு இருந்திட முடியாது. அன்பும், ஒழுங்குக் கட்டுப்பாடும் இணைந்தே செல்கின்றன.
  17. அர்ப்பணிப்பு என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. ஆனால் எனக்கு அதனுடைய அர்த்தம் என்னவெனில் இறைப் பணியை இறைவனது நினைவோடு, இறைவனுக்காகச் செய்வதே!
  18. தண்டனையோ, வெகுமதியோ – நாம் எதற்குத் தகுதியானவர்களோ அதனையே நாம் பெறுகின்றோம்.
  19. இங்கெ இருக்கும் நீங்கள் ஒவ்வோருவரும் உங்களைத் திருத்திக் கொள்ள விரும்பவில்லையெனில், மற்றவர்களைத் திருத்துவதற்கு உங்களுக்கு உரிமையும், திறமையும் கிடையாது.
  20. முன்னேற்றத்தின் ரகசியம் கீழ்ப்படிதலில் தான் இருக்கிறது.
  21. உன்னுடைய மனம் தவறாகச் சென்றால் அதனைப் போன்று உன்னை முழுமையாக அழித்திட வேறு எதனாலும் முடியாது;
  22. நமது இலட்சியத்தை நோக்கி நாம் பயணிக்கையில் நம்முடைய செயல்பாடுகளால் மாஸ்டருடைய ஆசிர்வாதங்களை நாம் முயன்று பெறும்போது அது நமக்கு பயனை விளைவிக்கின்றது.
  23. என்னுடைய இதயத்தில் ஒன்றுமே இல்லாதிருக்கும் போது, அது அவருடையதாகிறது. அதன் பின்பு அவர் அதனுள் வரும்போது, "அவர்தான் வேலை செய்கிறார், நான் அல்ல" என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது.
  24. மனிதநேய ஒருமைப் பாட்டிற்கு முன் கணிப்பே மாபெரும் எதிரி.
  25. ஆசை நெருப்பினைப் போன்றது – அது எரிந்து கொண்டிருப்பதற்காக மேலும், மேலும் எரிபொருளை வேண்டிக் கொண்டே இருக்கும்.
  26. யோகக்கல்வி, யோக சாதனா, யோக கலாச்சாரம் – இவைகளின் நோக்கம் என்னவெனில் நாம் இறந்தபின்பு திரும்பவும் பிறவாதிருப்பதே..
  27. வகுத்துரைத்தபடி விருப்பத்தை வளர்த்துக் கொள்வதும், திரும்பத் திரும்பச் செய்யும் செயல்பாடுகளால் அந்த விருப்பத்தை உறுதி செய்வதுந்தான் சகஜ மார்க்கத்தின் முழுமையான அடிப்படைக் கோடபாடாகும்.
  28. மாஸ்டர் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்தாமல், மாஸ்டரித்து மட்டுமேஅன்பு செலுத்துவது விபரீதமான காரியம்.
  29. செய்ததை எண்ணி வருந்துதல் என்பது திரும்பவும் அதனைச் செய்யாதிருந்திட மனத்திண்மை கொள்வதே!
  30. நாம் மாஸ்டரை உயர்ந்த நோக்கத்திற்காக பயன்படுத்தாமல் கீழானவற்றிற்கு பயன்படுத்த விழைந்தால், அது முழுக்க, முழுக்க மூடத்தனமான செயலாகும்.
  31. அன்பின் பரிசு அன்பிற்குரியவரே!
  32. கீழ்ப்படிதலே ஆன்மிகத்தின் முதல் விதி. நான் அதனை அன்பிற்கும் மேலான இடத்தில் வைப்பேன்; ஏனெனில் உண்மையான கீழ்ப்படிதல் அன்பிலிருந்து மட்டுமே தோன்றுகிறது.
  33. நாம் தியானம் செய்கையில், ஆற்றல் மிக்க செயற்பாங்காய் அது இருந்திடும் போது இலட்சியம் எப்போதும் நம் பார்வையில் தொடர்ந்து தோற்றமளிக்கும்.
  34. நாம் சேவை செய்கின்றோம்; ஆனால் நாம் யாருடைய சேவகர்களுமல்ல. பணியாளர்கள் பணத்திற்காகவும், பயத்திற்காகவும், பிழைப்பிற்காகவுமே வேலை செய்கின்றனர். நாம் சேவை செய்வது நாம் அன்பு செலுத்துவதால்!
  35. மாஸ்டர் நமக்கு அருளியுள்ள உயர் மனநிலையில் தொடர்ந்து மூழ்கியவாறு நம்முடைய தினசரி வாழ்வினை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
  36. நீ முழுமையான தன்னிலை மாற்றத்தை அடைய விரும்பினால், சரணாகதியின்றி அது நடந்திட சாத்தியமில்லை.
  37. ஆன்மீக முன்னேற்றமும், ஆன்மிக வளர்ச்சியும் மாற்றம் சம்பந்தப்பட்டது. முன்னேற்றம் என்பது மனோபாவாத்தை நல்லதாக மாற்றுவது என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை.
  38. மாஸ்டரிடம் நாம் வைத்திருக்கும் பக்தி, நம்மை மாஸ்டருடைய பக்தர்களுக்கு சேவை செய்வதன் மூலம் மாஸ்டருக்கு சேவை செய்ய வைக்கிறது.
  39. ஆன்மிகத் தளத்தில் மட்டுமே மனித குலத்திற்கு சேவை செய்திடும் வாய்ப்பு உள்ளது. மற்ற ஒவ்வொரு தளத்திலும் குழு அல்லது தனிநபர்களே ஆதிக்கம் செய்கின்றனர்.
  40. மாஸ்டரித்து அன்பு அல்லாத ஆன்மிக முன்னேற்றம், முன்னேறாத நிலையினைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானது.
  41. தெய்வீக சக்தியைப் பயன்படுத்தவதே பிராணாஹுதி என விளக்கப்படுகிறது.
  42. நல்லது எது, தீயது எது என்பதைப் பாகுபடுத்தி அறிந்துக் கொண்டு நல்லதைச் செய்யும் மனப்பாங்கை நம்முள் வளர்த்தவாறு தீயதைத் தவிர்ப்பது சாலச்சிறந்தது.
  43. மாஸ்டரை நேசிக்கும் அப்யாஸியால் மட்டுமே உண்மையில் அவருக்குச் சேவை செய்திட முடியும்.
  44. நான் சம்ஸ்காரங்களின்றி இருக்கும் போது, ஒரு கண்ணாடி அதன் முன்பு நிற்கும் முகத்தைப் பிரதிபலிப்பதைப் போலாகின்றேன்.
  45. நீ அனைத்தையும் நீக்கி விட்ட பின்பு எஞ்சி இருப்பதே இறைவன்.
  46. ஒழுக்கக் கட்டுப்பாடே ஒத்துழைப்பதற்கான சாவி. எங்கு ஒழுங்குக் கட்டுப்பாடு இல்லையோ அங்கு ஒத்துழைப்பு இருக்க வாய்ப்பு இல்லை.
  47. இயற்கையில் "படைப்பு" என்று எதுவும் கிடையாது. எதுவுமே படைக்கப்படுவதில்லை. எது செயலற்று, ஆனால் செயல்பட தாயாராக இருக்கின்றதோ அதைத்தான் செயல்பட வைக்க முடியும்.
  48. ஒவ்வோரு செயலினையும் செய்ய வேண்டிய நேரத்தில் கட்டாயமாகச் செய்வதே ஒழுங்குமுறை எனப்படும்.

மாஸ்டர் பணியில் திரு .அ .ஆறுமுகம் பிள்ளை ,பேராசிரியர் கடுக்கரை .

தொடர்புகொள்ள வேண்டுமெனில் :------09443281166

Friday, March 1, 2013

சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்...4




சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்...4 (55 முதல் 86 வரை 

  • தெய்வீக அருள் என்பது தானாக நிகழ்வதில்லை. அது உன்மீது பொழிவது தானாக நிகழலாம்.;ஆனால் அதை நீ விரும்பி பெற்றுக் கொள்வது தானாக நிகழ்வதாக இருந்திட முடியாது. நீ உன் இதயத்தைத் திறந்து கொள்வதன் மூலமே இது சாத்தியமாகிறது.
  • மிஷனில் இருக்கும் ஒவ்வொரு அப்யாஸியும் அவருடைய செயல்களில், எண்ணங்களில், நடைமுறைகளில், அவரது வீட்டிலும், சமுதாயத்திலும் அவர் நடந்து கொள்ளும் விதத்தில், மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாகத் திகழ வெண்டும்.
  • ஆரம்பத்தில் நாம் கடவுளைத் தேடுகின்றோம்; முடிவில் நாம் நம்மையே கண்டு கொள்கின்றோம். எனவே தன்னை உணர்வதே கடவுளை உணர்வதாகும்.
  • தியானம் என்பது மாஸ்டர் நம்மீது பொழியும் ஆன்மீக அமிழ்தத்தை உள்வாங்கும் ஒரு மகத்தான செயலாகும்.எனவே நாம் தியானம் செய்யச் செய்ய நம்முடைய முன்னேற்றம் துரிதமாகிறது.
  • பிறரை ஒழுங்குபடுத்துவதற்குமுன் நம்மை நாம் ஒழுங்கு படுத்துவதே அன்பு எனப் பொருள் படுகின்றது.
  • ஒருவர் தன்னை சாதனாவில் ஈடுபடுத்திக் கொள்ளும்போது அவரிடத்து மாஸ்டர் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.
  • நம்முடைய திறமையையும் மிஞ்சி ஒன்று கை கூடாது இருக்கும்போது மட்டுமே அதனைச் செம்மாந்து செய்திட கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டும்.
  • பிரசாதம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது. அது மிகவும் மதிப்புடனும் பணிவுடனும்,பக்தியுடனும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.ஏனெனில் அது தெய்வீகத்தால் அருளப்படும் தெய்வீகம் ஆகும்.
  • நீ சேவை செய்திடின் பிறர் உனக்கு சேவை செய்வர்.
  • மாஸ்டர் ஆயிரக்கணக்கான மக்களால் சூழப்பட்டிருக்கலாம்.நாம் நம்மிடம் பற்றினை வைக்காது அவரிடம் பற்றினை வைத்திட வேண்டும்.
  • எதனையும் ஏற்காதிருப்பது அல்ல துறவு; லோகாயுத விஷயங்களில் பற்று வைக்காதிருப்பதே துறவு.
  • கழிப்பறையை சுத்தம் செய்வதாக இருந்தாலும், தெய்வீக உணர்வுடன் அது செய்யப்படின்,அப்பணி தெய்வீகப்பணி ஆகின்றது.
  • சரணாகதி அடைவதே நமது கடமை. நம்மை முதிர்வுறச் செய்வது அவரது கடமை.
  • தனிஅமர்வின் போது நீங்கள் கனமின்றி உணர்வது, நிச்சய,மாக பிராணாஹுதியினால் அல்ல;அது சுத்திகரிப்பால் நிகழ்வது.
  • ஆஸ்ரமம் என்பது ஒரு ஓய்வான மனநிலையில் ஆன்மீக நலனையும், ஆன்மீக வளர்ச்சியையும் அடையும் இடமாகும்.
  • ஒழுங்குமுறைக் கட்டுப்பாடு உள்ளிருந்து வருவதேயாகும்.வெளியிலிருந்து திணிக்கப்படுவதன்று.
  • சந்தேகம் மன உறுதியைப் பாழ்படுத்துகிறது. நாம் சந்தேகப்பட ஆரம்பிக்கும் அந்தக் கணத்திலேயே மனஉறுதி காணாமல் போய் விடுகிறது.
  • நம்பிக்கை விசுவாசத்திற்கும், விசுவாசம் பற்றுறுதிக்கும் தானாக அழைத்துச் செல்கிறது.
  • நாம் பரம்பொருளை எண்ணும் போது நிறைய அறிகின்றோம்; அதன்பின்பு படித்தறிவதை விட்டுவிடுகின்றோம்.
  • நமது தேவைகளை எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைப்பதே எளிமை ஆகும்..
  • வாழ்க்கை என்பது உயர்வு, முன்னேற்றம், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிய சிந்தனையால் உருவாக்கப்படுவதாகும். புலனின்பம், சுயதிருப்தி போன்றவற்றால் சீரழிக்கப்படுவது அல்ல.
  • ஒன்றினை ஒருவர் இப்போது செய்யாவிடின், அதனை அவர் எப்போதுமே செய்ய முடியாதவராகி விடலாம்.
  • மயக்கம் நீ மயங்கும் பொருளில் இருப்பதில்லை: அது உன்னிடத்தில் தான் இருக்கிறது. ஏனெனில் எந்த இருவரும் ஒரே பொருளின் மீது மயங்கி வசப்படுவதில்லை.
  • நமது வாழ்க்கை என்பது நமது சம்ஸ்காரங்கள் நம்முன் மடிப்பிழந்து கிடப்பதே!
  • சகிப்பின்மையை சகித்துக் கொள்வதே சகிப்புத்தன்மை என்பது!
  • பழக்க வழக்கங்களில் நல்ல பழக்க வழக்கங்கள் என்றோ. தீய பழக்க வழக்கங்கள் என்றோ எதுவுமே கிடையாது; எல்லா பழக்க வழக்கங்களும் நம்மை அடிமைப்படுத்துகின்றன.
  • முழுமையான நம்பிக்கை., மனத்துணிவு., உறுதிப்பாடு, நம்முடைய வாழ்க்கையின் நோக்கத்தை முழுமை செய்தல் ஆகியவற்றை அடைவதற்காக சுயநலமிக்க, பயந்த., துயரமான, இலட்சியமற்ற வாழ்க்கையை நாம் கொள்வினை., கொடுப்பு வினை செய்து கொள்கின்றோம்.
  • செய்ததை நினைத்து உண்மையிலேயே வருந்துவது என்பது அதனைத் திரும்பச் செய்யாதிருப்பது.
  • உளக்கனிவு, தியாகம், பெருந்தன்மை, மன்னிக்கும் மனப்பாங்கு. கருணை, இரக்கம், நேசிக்கின்றோர் தரும் வேதனையின் வலியைத்தாங்கும் வலிமை ஆகியவையின் கலவையே அன்பு ஆகும்.
  • இலக்கில்லா நினைவு தான் துயரம் ஆகும்; எனவே நினைவிற்கு சரியான இலக்கினை அளிக்கவேண்டும்.
  • எதையும் தியாகம் செய்திட தயாராக இருக்கும் தன்மைதான் மிக உயர்ந்த அன்பின் வெளிப்பாடு.
  • நிலையான நினைவு நம்மை தன்னிலை உணர்விலிருந்து மீட்டெடுக்கிறது; அது நிலையாக மாஸ்டரையும். இறைவனையும். ஒருவருடைய சுயத்தினையும் ஒரே நேரத்தில் ஒரு சேர நினைவு கொள்ளச் செய்கிறது.
  • மாஸ்டர் பணியில் கடுக்கரை அ .ஆறுமுகம்பிள்ளை                      தொடர்புகொள்ளவேண்டுமெனில் .....09443281166.