Monday, February 16, 2015

அழியாத.....காலத்தால் அழியாத காதல்....ஏழையின் காதல்

சாவிலும் இணைபிரியாத தம்பதி: மனைவி இறந்த சில மணி நேரத்தில் கணவரும் உயிரிழந்த சோகம் மைசூருவில் நெஞ்சை உருக்கும் சம்பவம்
இது தினத்தந்தியில் 14-02-15 வந்த செய்தி.

எனக்குத்தெரிந்த ஒருவர் கதை.....என் வீட்டைக் கட்டிய நல்ல மனிதர் ஒருவரின் கதை............

அவன் ஒருக் கட்டிடத்தொழிலாளி….தொழில் நுட்பம் தெரிந்தவன்…. இன்று நாகர்கோவிலிலும் அதன் பக்கத்து ஊர்களிலும் அவன் பெயர் சொல்லும்படியாக பல வீடுகள் இருக்கின்றன. பள்ளியில் ஐந்து வருடப் படிப்பு……… படிக்க வழியில்லை….. 
காலத்தின் கோலம் சுயம்புவின் (அவன் பெயர் சுயம்பு என இருக்கட்டுமே) வாழ்வில் அலங்கோலமாக மாறிற்று……..புள்ளிகள் முற்றுப் பெற்று கோடின்றி கிடப்பது போல் சுயம்பு கிடந்தான்…..
இல்லை என்பதுவே வழக்கமாக தினமும் கேட்கும் வார்த்தை அவன் தாயிடம் இருந்து.
பைசா கேட்டால் இல்லை என்றே தினமும் சொல்லும் அவன் தாயே இன்று இல்லை…… அவனுக்கு புரிந்து விட்டது….
நேற்று வரை இருந்த தாய் இன்று ஏன் இல்லாமல் போனாள் என்று……இல்லை என்று சொல்ல தாய் இன்று மட்டுமல்ல இனி என்றுமே இருக்கமாட்டாள்….
சுனாமி ஊரைச் சீரழித்தது போல் அவன் வாழ்க்கையும் நிலை குலைந்து போனது.
வீடு இருக்கு….. ஆள் இல்லை….
கோலப்புள்ளிகள் இருக்கின்றன.. கோடுகள் இல்லை.
கோடில்லா கோலமும், ஆளில்லா இல்லமும் அழகு தருவதில்லை.
சுயம்புக்கு இருப்பது எதுவும் இந்தச் சின்ன வயதில் உதவுவதாக இல்லை.
ஒரு கதவை அடைத்த ஆண்டவன் இன்னொரு கதவை திறப்பானல்லவா.
தாய்மாமன்  கடவுள் வடிவில் வந்தார். அவர்…… துவண்டு கிடந்த சுயம்புவை எடுத்து ஆதரவோடு அணைத்தான்……..அவன் கண்ணீரைத் துடைத்தான்….
மாமனோடு அவன் வீட்டுக்குச் சென்றான்......
ராமன் வீட்டில் தொட்டிலில் ஒரு பெண் குழந்தை ….. அதன் முதுகு கூனன் முதுகு போன்றிருந்தது….முகம் அழகாய் இருந்தது. மற்றபடி எதுவும் சொல்லும்படியாக இல்லை. விளையாட மச்சான்மார்கள் பலர்….. அவர்களில் எவனும் பள்ளிக்குச் செல்லாமல்….கூலி வேலைக்கும் கையாள் வேலைக்கும் சென்று வந்தனர்.
குடும்பம் கட்டுப்பாடில்லாததால்….. அந்த அறிவு அன்று விதைக்கப் படாததால் அந்த வீட்டில்  ஐந்து அரசனுடன் ஒரு அரசியும் வளர்ந்து வந்தனர்…..அத்தோடு சுயம்புவும் வளர்ந்தான்……
கையாளாகவே மாமன் கொத்தனாருடன் வேலைக்குச் சென்றான்…….. வேலை கற்றான்…….தன்னந்தனி ஆளாய் வேலை செய்துப் பழகியபின்  மாமன் அனுமதியோடு தன் வீட்டுக்குப் போனான்…..
அழகில்லா வீடு அவன் வருகையால்  அழகாய் மாறிற்று… அந்த ஊர் அவன் பிறந்த ஊர்…. அந்த ஊர்க்கோயில் தர்மகர்த்தாவானான்…. அவன் அம்மா தினமும் வணங்கிய வீட்டருகேயுள்ள அம்மன் கோயிலைப் புதுப்பித்தான்…. ஒரு திறமையான வாலிபன் எனப் பெயரும் பெற்றான் .அவன் வாழ்ந்த அக்கிராமமே அவன் வருகையால் புதுப் பொலிவு பெற்றது….
அவன் சிரித்தால் அழகு….. பேசினால் அழகு….அவன் சொன்னால் அதுதான் சட்டம்……
வாலிப வயதானால் வலிய வருமே உறவுகள். உறவுகளும் வந்தன…..காதல்…….அதுவும் வந்தது….….. ஒரு பெண் ……. தன் வீட்டு விளக்கை ஒளியேற்ற வரவேண்டும் ஒரு பெண்.. அது தான் விரும்பிய பெண்ணாகவும் தன்னையும் விரும்பிய பெண்ணாகவும்  இருக்கவேண்டுமே…… அப்படி ஒரு மங்கை கிடைத்தாள்….. இது பற்றி அவன் மாமனிடம் சொல்லி முறையாக உற்றார் உறவினருடன் சென்று பெண் கேட்க வேண்டுமே என நினைத்திருந்த வேளையில்………..
அவன் மாமனே வந்தான்….. நாளை வீட்டுக்கு வா……சுசீலையை பெண் பார்க்க வருகிறார்கள்………
வந்தவர்களுக்கு பெண் பிடிக்கவில்லை……. அவள் முகம் பேரழகு….. ஆனால் கூனியின் உடம்பைக் கொண்டவளல்லவா….யாரும் திருமணம் செய்ய விரும்பி வரவில்லை….
காலம் காத்திருக்குமா…..அதற்கென்ன கவலை…… ஓடிக்கொண்டேதானே இருக்கும்…..
வயது ஏற ஏற கவலை மாமனை வாட்டியதைக் கண்டு கலங்கினான் சுயம்பு.
தனது திருமணம் தடைபடுவதை உணர்ந்தான். தன் வயதும் ஏறிக்கொண்டே போனதையும் கண்டான்.
தன் மாமன் கவலையால் வாட அந்தக் குடும்பமே பொலிவிழக்க நேர்ந்ததைக் கண்ட சுயம்பு   தன்னைக் காப்பாற்றி ஆளாக்கிய மாமன் மகளைத் தானே மணக்காவிட்டால் வேறு யார் முன்வருவார்கள்….. இந்தச் சிந்தனையால்
தியாகியானான்…. தன் வீட்டில் கோடில்லா புள்ளிகளை கோடு போட , தன்வீட்டு விளக்கை ஏற்றிட மனப்பூர்வமாகச் சம்மதித்தான்…..
இரண்டு குடும்பங்களும் தழைத்தன…….சுயம்புவின் வீட்டுக்கு சுசீலை மனைவியாய் வந்ததால்..
அவள் போல் அன்புக்கு இணை இவ்வுலகில் யாருமில்லை….ஆயிரம் பொன் கிடைத்தாலும் இது போன்ற நற்பெண் கிடைக்குமா…. என்று பெயர் பெற்றாள்.. ஈருடல் ஒருயிராய் வாழ்ந்தார்கள்….. இருவருமே நோய் நொடியில்லாமல் வாழ்ந்தார்கள்…….
இருமகள், ஒருமகன்………
சக்கரம் வாழ்க்கையை தடங்கல்களின்றி உருட்டிக் கொண்டிருந்த வேளையில் யார் கண்பட்டதோ…..சோதனை ……….. சோதனை…… நோய்வடிவில் சுயம்புவை விரட்டியது. 
விதி விளையாடியது…. விஞ்ஞானத்துக்கே சவாலாய் இருக்கும் நோய்  தாக்கியது. தனது எழுபதாம் வயதில் ஆஸ்பத்திரிக்குச் செல்கிறார்………. பயம் அவரை விரட்டுகிறது . மனம் துடிக்கிறது…..தன்னைப்பற்றி பயப்படவில்லை……மகன் மகள் பற்றியும் வருந்தவில்லை.
அய்யோ!........ அவள் அனாதையாய்…….நினைக்கவே அவர் நெஞ்சம் பதறியது.
தான் போய்விட்டால் தன் அருமை மனைவியை யார் கவனிப்பார்கள்……..
தான் மடியுமுன் அவள் கதை முடியவேண்டுமென தினமும் வேண்டினேனே…..ஆண்டவன் நம்மை ஏமாற்றிவிட்டானே…….என்று அழுகிறார். தனக்குள் மட்டுமே  பேசி…..பேசி….. கதறி அழுகிறார்…… அவர் கண்ணீரைத் துடைக்க அருகில் யாருமில்லை.…
இது நாள்வரை காய்ச்சல் என்று கூடப் படுக்காத தன் கணவன் படும் சின்ன வேதனையைக் கூடத் தாங்க முடியாமல்……சுசீலைக் குமிறிக் குமிறி நெஞ்சு முட்ட ஏங்குகிறாள்…. ஏங்கியவள் துவண்டு விழுகிறாள்…. அதன்பிறகெ அங்கே ஏற்பட்ட நிசப்தமே …….பெரும் சப்தமாய் மாறியது .
இருதயம் அவளிடம் சொல்லாமலே இயக்கத்தை நிறுத்தி விட்டது.
மனைவி மறைந்த செய்தியை அவரிடம் சொல்ல அவர் அருகே சென்று பார்க்கிறார்கள்.
முகத்தில் புன்முறுவல்……முகம் ஆடாமல் அசையாமல்…….
அவள் கதையா…….அவர் கதையா….. யார் கதை முதலில் முடிந்தது….. யாருக்கும் தெரியாது…….. ஆண்டவன்………. அவன் ஒருவனே அறிவான்…….


2 comments:

  1. Very surprise to read this real story. I am happy to see a hidden talent of a story writer who taught Analytical Geometry to me in my college days.

    ReplyDelete
    Replies
    1. முகம் கண்டால் என் முகம் மகிழுமே. மாணவன் என்பது கண்டு என்னுள்ளம் துள்ளி மகிழ்ந்ததை பதிவு செய்கிறேன். நன்றி ...கருத்துக்கள் கவனிக்கப்படும் என்பதை தங்கள் கவனத்திற்கு..............

      Delete