Sunday, September 27, 2015

1967-க்குப் பின் சந்தித்த வகுப்புத்தோழன் ஆறுமுகம்

வாழ்வின் பொருள் என்ன ?

தினமும் காலையில் தொடங்கி இரவில் முடங்கும் பொழுதழிப்பா...

நமக்கு ஒரு அங்கீகாரம் தந்து அழகு பார்த்த இந்த சமூகத்துக்கு என்ன செய்யப் போகிறாய்! இப்படி ஒரு ஆச்சரியமான கேள்வி எழுந்தது ....என் மனதிலா......?

இல்லை...இல்லவே இல்லை.

ஆறுமுகம்.... பாளையாங்கோட்டையில் மகாராஜ நகரில் இருக்கிறார். அவர் தினமும் காலையில் அலுவலகம் செல்வது போல் ஒரு நோய் காண் மையத்துக்கு செல்கிறார். ஓய்வு பெற்றவர் அவர். வங்கிப் பணி முடிந்து பத்து ஆண்டுகள் ஆயிற்று. பொருளாளராக செயல் பட்டு வருகிறார்.

ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கு இதில்....... !

அந்த கிளினிக்கல் லேப்  தனிப்பட்ட ஒருவருக்கு உரியதல்ல. முன்னாள் மாணவர்கள் நடத்தும் லேப் அது.

 தூய சவேரியார் கல்லூரியின் முன்னாள் மாணவர்களால்  நடத்தப்படும் அந்த நிறுவனம் ஒரு முன்னாள் ஜட்ஜின் பெயரைக் கொண்டு மிகக் குறைந்த கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு  இயங்கி வருகிறது .

அதன் பெயர் ’ஜட்ஜ்  ஜோசப் நோய் காண்மையம்’.(Judge Joseph Clinical Lab )

அது இருக்கும் இடம் தூய சவேரியார் கல்லூரி வளாகம்.

மகாராஜன் மைந்தன் ஆறுமுகம் என் கல்லூரி வகுப்புத்தோழன்.

சொல்வதற்கே பெருமையாக இருக்கு.

இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது ?

எனது பெயரைத் தேடி ...... என் விலாசத்தை அறிந்து எனக்குக் கடிதம் எழுதி முன்னாள் கணித மாணவர்கள் சந்திக்கும் ஒரு நிகழ்வு ஜனுவரி 26-ம் தேதி நடைபெற இருப்பதாக எழுதி அழைத்திருந்தார்......

பல மாதங்களாகவே என் மனதினுள் உறங்கிக் கிடந்த ஓர் எண்ணம் என் ஆர்வத்தைத் தூண்டிற்று...... அதன் பலன்...நான்  இம்மாதம் 22 செவ்வாய் கிழமையன்று ஆறுமுகம் வீட்டில் அவருடன் 48 வருடங்களுக்கு முன்னால் காலச்சக்கரத்தை பின்னோக்கி நகர்த்தினோம்.... மலரும் நினைவுகள்....பல மலர்ந்தன....மகிழ்வும் சோகமும் மாறிமாறி வந்து போனது...... கொஞ்சம் செஸ் விளையாடத்தெரிந்த என்னை அதிகம் அறிய வைத்த செஸ் Problem சொல்லித்தந்த வகுப்புத்தோழன்....மானிட்டர்... பாலமோகன் மறைவுச் செய்தி என்னை பாதித்தது...... ஒலிம்பிக் வரை சென்று ஹாக்கி விளையாடிய வசந்து இன்றில்லை.

 ஆறுமுகம் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி . அவர் பாளை ஹைகிரவுண்ட் மகாராஜ நகரில் ஸ்டேட் வங்கி அதிகாரிகள் குடியிருப்பில் சிவானந்த சுந்தரி அப்பார்ட்மெண்டில்  வசித்து வருகிறார். அவருக்கு எனது இருப்பிடத் தகவல் தந்து மகிழ்ந்தவர் சென்னையில் வசிக்கும் எங்கள் வகுப்புத்தோழர் பொறியாளர்  ராய்.

நாகர்கோவில் வந்தபின்பும் தோழர் வீட்டு நிகழ்வுகள் என்னை வருடிக் கொண்டே இருந்தன..... என் உணர்வுகளை வார்த்தையால் சொற்களால் வர்ணிக்கவோ பதிவு செய்யவோ முடியாது... உணரமட்டுமே முடியும்.

நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தேன்..... அப்போது கூடுதல் தகவல் ஒன்று ஆனந்தமாய் செவியில் வந்து பாய்ந்தது.  ஜட்ஜ் ஜோசப் இந்துக்கல்லூரியின் கணித ஆசிரியர் வில்சனின் மாமா.......(வில்சனின் அத்தையின் கணவர் )....

1964 -67  கல்லூரிக் கல்விப் பயணம்...... 1967-க்குப் பின்.........48 வருடங்களுக்குப் பின்  வகுப்புத் தோழரை சந்தித்தது,  ரயில் நட்பு போல் ஆகிவிடவில்லை ....... என்பதால்...... என்றும் இந்த நினைவு ஆனந்தமே..... ஆனந்தமாக மட்டுமே இருக்கும்.....

சற்றும் கூட முகம் சுழிக்காமல் என் எண்ணத்தைப் புரிந்துகொண்ட என் மனைவி என்னுடன் வந்து நண்பர்கள் இருவர் சந்தித்து ஒன்றரை மணிநேரம் பேசியதை மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்..... நெல்லையப்பர் தரிசனம் தடைபெற்றதையும் பொருட்டாகக் கருதவில்லை அவள்.

நன்றி மறப்பது நன்றன்று என்பதால் எனக்கு மூன்றாம் வருடம் பட்டப் படிப்பின் தொடக்கத்தில் கல்லூரி விடுதியில் இடம் தர மறுத்த முதல்வரிடம் எனக்காக பரிந்துரை செய்த ஆசிரியர் ஒருவரின் வீடு தேடிச் சென்று அவர் முகம் பார்த்து பழங்கதை பேசி மகிழ்ந்து  அவர் ஆசிப்பெற்று திரும்பினேன்....

அவர் சவேரியார் கல்லூரியில் பணியில் இருந்த காலத்து மாணவர்கள் அவரை தெரியாமல்  இருக்கவே முடியாது.... ஓய்வுக்குப் பின்னும் மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க வருடந்தோறும் ஹாக்கி விளையாட்டுப்போட்டி பல முன்னாள் மாணவர்கள் உதவிகொண்டு வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.....

அவர் பெயர் மேஜர் பெனெடிக்ட்.... உடற்பயிற்சி கல்வி ஆசிரியர்.....

அவர் சேவை அவரது ஓய்வுக்குப்பின்னும் கல்லூரியில் தொடர்ந்தது......

 விடை பெறும்போது அவர் சொன்னது..,” உங்களைப் போல பல மாணவர்கள் என்னை சந்திக்கும் போது என் வயது கூடுகிறது... ஒவ்வொரு வருடமும் நீ வா..... இன்னும் ஐந்து வருடங்கள் வாழ்வேன் ‘

நல்லவெயில்.... அவர் வெளியே வந்து வழியனுப்பிய பாங்கு ... இருகரம் கூப்பி வணங்கிக்கொண்டே நல் வாழ்த்துக்கள் கூறி வழி அனுப்பி வைத்தது ...... என்னை மிகவும் கவர்ந்தன....

இப்போது அவருக்கு வயது 86.